full screen background image

இன்றைய அரசியல் நிகழ்வுகளை அப்பட்டமாய் சொல்லும் படம் ‘நான் ஆணையிட்டால்’

இன்றைய அரசியல் நிகழ்வுகளை அப்பட்டமாய் சொல்லும் படம் ‘நான் ஆணையிட்டால்’

தமிழ் நடிகர்கள் நடிக்கும் படங்களெல்லாம் தெலுங்குலகிலும் போட்டி போட்டு ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு வித்தியாசத்திற்கு நாமும் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கலாமே என்கிற முடிவுக்கு தெலுங்கு ஹீரோக்களும் முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதுவரையிலும் தெலுங்கு டப்பிங்கில் மட்டுமே தமிழ் பேசி நடித்திருந்தவர்கள் நேரடி தமிழ்ப் படத்தில் அதுவும் மெயின் ஹீரோவாகவே நடிக்க வருவது சந்தோஷமான விஷயம்தான். இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பவர் ராணா.

தெலுங்கில் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ என்ற தலைப்பில் உருவாகும் படமே தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்று நேரடி தமிழ்ப் படமாகவே வெளிவரவிருக்கிறது.

நடிகர் ராணா ஏற்கெனவே அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படமே அவர் தனி ஹீரோவாக தமிழில் அறிமுகமாகும் முதல் படம். இந்தப் படத்தை பிரபல இயக்குநரான தேஜா இயக்கியிருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் ராணாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

Naan Aanaiyittal Press Meet Photos (2)

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. தனது உதவியாளர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பிரச்சினையில் சிக்கியிருப்பதால் நடிகை காஜல் அகர்வால் வராமல் எஸ்கேப்பாகிவிட்டார்.  விழாவில் நடிகர் ராணா, இயக்குநர் தேஜா, நடிகர்கள் சிவாஜி, நண்டு ஜெகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் ராணா பேசும்போது, “இது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக டப்பிங் படம் இல்லை. இதுவொரு முழு நீள அரசியல் படம்.

actor raana

இந்தப் படத்தில் நானும் காஜல் அகர்வாலும் கணவன்-மனைவியாக நடித்துள்ளோம். மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராமல் சில சம்பவங்கள் நடக்கின்றன. அது என்ன என்பதும், அதன் விளைவுகளும்தான் இந்தப் படம்.

காதல், குடும்பப் பாசம், அதிரடி சண்டைகள் என்று கமர்ஷியலுக்கேற்ற அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. இந்தப் படத்தில் வேட்டி அணிந்து நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இது போன்ற நல்ல கதைகள் அமைந்தால், நிச்சயமாக நான் தொடர்ந்து நேரடி தமிழ்ப் படங்களில் நடிப்பேன்..” என்றார்.

படத்தின் இயக்குநரான தேஜா பேசும்போது, “நான் இதே சென்னையில் பிறந்து வளர்ந்தவன்தான். என்னுடைய இளமைப் பருவத்தில் தி.நகர் பாண்டிபஜாரில்தான் அதிக நாட்கள் இருந்தேன்.

director teja

சினிமாவில் சேர ஆசைப்பட்டு அலைந்து திரிந்தபோது இதே பாண்டிபஜாரின் பூக்கடைகளுக்கு நடுவில் பிளாட்பாரத்தில்தான் இரவு நேரங்களில் படுத்து உறங்குவேன். இப்போதுகூட நான் இயக்கிய ஒரு படம் ஓடவில்லையென்றாலோ, மனம் சரியில்லாமல் போனாலோ சத்தமில்லாமல் அடுத்த பிளைட்டை பிடித்து சென்னை வந்து பாண்டிபஜாரில் அதே பிளாட்பாரத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்பேன். பட்டென்று எல்லா கவலைகளும் என்னைவிட்டு விலகிவிடும்.

இந்தப் படம் அரசியல் படம் என்றாலும் நான் வைத்திருந்த திரைக்கதையின்படி எம்.எல்.ஏ.க்களை ஒட்டு மொத்தமாய் கடத்திச் சென்று ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைக்கும்படி காட்சியுள்ளது. இந்தக் காட்சிகளை நான் படமாக்கிய பின்புதான் இங்கே தமிழ்நாட்டில் கூவத்தூர் கூத்தெல்லாம் நடந்தது. இது நாங்களே எதிர்பாராத விஷயம். மற்றபடி சிச்சுவேஷனுக்கேற்றாற்போன்று இந்தக் காட்சி படத்தில் இருப்பதால் எங்களுக்கும் கூடுதல் சந்தோஷம்தான்.

படம் முழுவதையும் எடுத்து முடித்த பிறகு ‘ரிசார்ட்’ என்று சொல்லுமிடத்தில் எல்லாம் ‘கூவத்தூர்’ என்று மாற்றினோம். அது மட்டும்தான் இந்தப் படத்திற்காக நாங்கள் செய்த ஒரேயொரு மாற்றம்.

எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்பவும் புடிக்கும். அவருடைய வெறியனும்கூட. என்னுடைய அனைத்து படங்களிலும் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தையோ அல்லது அவருடைய பாடல்களையோ ஒரு காட்சியிலாவது வைத்துவிடுவேன். இந்தப் படத்தில் அவர் பாடி நடித்த பாடலின் தலைப்பான ‘நான் ஆணையிட்டால்’ என்கிற பாடல் வரியே என் படத்தின் தலைப்பாக கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அதேபோல் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் இடம் பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடலையும் இந்தப் படத்தில் அனுமதி வாங்கி பயன்படுத்தியுள்ளேன். ஓட்டு போட்ட மக்களால் அரசியல்வாதிகளை அதிகப்பட்சம் என்ன செய்துவிட முடியும்..? என்ன கேள்வி கேட்க முடியும்..? எப்படி தட்டிக் கேட்க முடியும் என்பதற்கு ஒரு பதிலை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன்…” என்றார்.

Our Score