‘இனம்’ திரைப்படத்தை நேற்றோடு வாபஸ் பெற்றுக் கொள்வதாக அதன் விநியோகஸ்தர் லிங்குசாமியின் அவசர அறிவிப்பிற்கு பின்னால் நேற்றைய தினம் அவர் இயக்கிக் கொண்டிருந்த ‘அஞ்சான்’ படப்பிடிப்பில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டமும் ஒரு காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் லிங்குசாமி இயக்கிவரும் ‘அஞ்சான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று மும்பை வி.டி. பகுதியில் உள்ள பலார்ட் ஸ்டேட் அருகே நடிகர் சூர்யா வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
இதை அறிந்த மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியினர் 50–க்கும் மேற்பட்டோர் மதியம் 3 மணி அளவில் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் திரண்டனர். இயக்குனர் லிங்குசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘அஞ்சான்’ பட உதவி இயக்குனர்கள் இதனை எதிர்க்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் நாம் தமிழர் கட்சியினரை சமாளிக்க முடியாததால் மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த முடியாமல் படப்பிடிப்பை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.
அப்போது நடிகர் சூர்யாவை காண அவரது ரசிகர்களும் அங்கு திரண்டு இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறினார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவது ‘இனம்’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சந்தோஷ்சிவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், அவரது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் மும்பையில் இருந்து தகவல்கள் பறந்தனவாம். ஆனாலும் லிங்குசாமிக்கு ஆதரவான வாய்ஸ் இவர்களிடமிருந்து கிடைக்கவில்லை என்கிறார்கள். மீண்டும் மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமெனில் இது போன்ற சிக்கல்கள் வராமல் இருக்க வேண்டும் என்று படக் குழுவினர் பயந்திருக்கின்றனர்.
ஏற்கெனவே உலகம் முழுவதும் இருக்கும் ஈழத்து மக்கள் தன் மீது கோபத்தில் இருப்பதையும் லிங்குசாமி உணர்ந்திருக்கிறார். இது அவரது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் அனைத்து படங்களையும் வசூல் ரீதியாக பெரிதும் பாதிக்கும் என்கிற யதார்த்த உண்மையை சிலர் அவருக்கு உணர்த்தியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கமலஹாசனின் ‘உத்தமவில்லன்’ படத்திற்கும் இதேபோல் சிக்கல் வந்தால் அது கமல்ஹாசனுக்கு அவமானமாகிவிடும் என்பதால் இதனை இப்போதே பேசித் தீர்த்துவிடும்படி அங்கேயிருந்தும் அறிவுரைகள் வந்ததாம்..
இதையெல்லாம் யோசித்துப் பார்த்துதான் லிங்குசாமி, ‘இனம்’ படத்தை வாபஸ் வாங்கும் முடிவை எடுத்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.