full screen background image

நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் – சினிமா விமர்சனம்

நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் – சினிமா விமர்சனம்

JSK ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7-C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள  திரைப்படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்.’ 

சென்ற மே மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டிய திரைப்படம் பல பெரிய திரைப்படங்கள் குறுக்கே வந்ததால், தள்ளித் தள்ளிப் போடப்பட்டு இன்றைக்குத்தான் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க.. இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் இவர்களுடன் யோகிபாபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். என்.ஜெ.ஸ்ரீகிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

இந்தியாவிலேயே மிகச் சிறந்த கிராமம் என்று ஜனாதிபதியின் கையால் 5 முறை தேசிய விருது பெற்ற ராமநாதபுரம் அருகேயிருக்கும் பொற்பந்தல் கிராமம். அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருமே நல்லவர்கள். திருடர்களே இல்லை. சுத்தம், சுகாதாரத்தில் நம்பர் ஒன்னாக விளங்குகிறது. குடி, சீதாட்டம், புகையிலை என்று எதுவுமே இல்லை.

சுத்தப்பத்தமான இந்தக் கிராமத்திலும் கண்துடைப்புக்காக ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. ஸ்டேஷனில் வேலை செய்ய 2 கான்ஸ்டபிள்கள் 1 ஏட்டு, 1 சப் இன்ஸ்பெக்டர், 1 இன்ஸ்பெக்டர் என்று வேலையாட்களும் உண்டு. ஆனால் கேஸ்தான் வரவில்லை. இதனால் இந்த ஸ்டேஷனுக்கு வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்தான். ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பான விடுமுறைதான்.

ஒரு வழக்குக்கூட இல்லையெனில் அந்த ஊருக்கு போலீஸ் ஸ்டேஷன் எதற்கு என்று காவல் துறையின் மேலிடத்திற்கு ரிப்போர்ட் செல்கிறது. அந்த ஸ்டேஷனை இழுத்துப் பூட்டிட்டு அங்கே இருப்பவர்களை ராமநாதபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவு வருகிறது.

இத்தனை நாட்கள் இதே ஊரில் ஜாலியாக ஊரைச் சுற்றி வாழ்ந்து வந்த போலீஸாருக்கு ராமநாதபுரத்தில் கலவரத்தோடு வாழ பயம் வருகிறது. இதே ஊரிலேயே இருக்க திட்டம் தீட்டுகிறார்கள். ஏதாவது திருட்டு நடந்தாலோ, யாரையாவது கைது செய்து சிறையில் அடைத்தாலோ கேஸ், கோர்ட், வாய்தா என்று அலைய வேண்டி வரும். ஸ்டேஷனை இடமாற்றம் செய்ய மாட்டார்கள் என்று நினைத்து அதற்கான வழிகளில் இறங்குகிறார் ஸ்டேஷன் ஏட்டு சிங்கம்புலி. ஆனால் அனைத்துமே சொதப்பலாகிவிடுகிறது.

கடைசியாக ஹீரோவான கான்ஸ்டபிள் அருள்நிதி வைத்த ஒரு ஆப்பு குண்டு சரியான சமயத்தில் வெடித்துவிட.. பிரச்சினையும் வெடிக்கிறது. விசாரணை முடியும்வரையிலும் ஸ்டேஷன் அங்கேயே இருக்கட்டும் என்று உத்தரவு வர.. சந்தோஷப்படுகிறார்கள் போலீஸ்காரர்கள்.

ஆனால் இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினைகள், அதுவரையில் அமைதியின் திருவுருவமாக இருந்த அந்த ஊரையே இரண்டாக்குகிறது. பிரச்சினை மேல் பிரச்சினை வர.. கடைசியில் போலீஸார் கதி என்ன ஆனது என்பதுதான் மிச்சம், மீதிக் கதை.

உண்மையில் படத்தை முழுமையாகத் தாங்கியிருப்பவரும், ஹீரோவாக நடித்திருப்பவரும் சிங்கம்புலிதான். காட்சிக்குக் காட்சி உருகியிருக்கிறார். உருக்கியிருக்கிறார். பல இடங்களில் சிரிக்க வைத்து, சில இடங்களில் ‘போதும்டா’ என்று முனங்கவும் வைத்திருக்கிறார்.

டயலாக் டெலிவரியில் உடன் நடித்த மூவருமே அவரிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. காட்டுக்குள் போய் கண்ணீர் வடிய அழுவதில் துவங்கி தலைக்கறியை ஆவலோடு சாப்பிட அமர்ந்து நிஜமான தலையே டேபிளில் வைத்தவுடன் ஒரு அலறு அலறி எழுகிறாரே.. பார்ப்போரையும் கண நேரத்தில் சிரிக்க வைக்கிறார். ஏட்டு, ஏட்டு என்று அனைவருமே மரியாதையுடன் அழைக்கும்வகையில் நடந்து கொண்டு, அதே ஊரில் இருக்க வேண்டி அவர் போடும் திட்டங்களெல்லாம் பணாலாகின்றபோது காமெடியாகத்தான் இருக்கிறது..!

ஒரிஜினல் ஹீரோவான அருள்நிதிக்கு சிறப்பான வேடமில்லை. ஆனால் நல்லவராகவே நடித்திருக்கிறார். ரொம்ப நல்லவராக இருக்கும் அவரைப் புரிந்து கொள்ளாமல் தத்தளிக்கும் சக போலீஸ்காரர்களின் நிலைமையையும், இவரும் அவர்களைப் புரிந்து கொள்ளாமல் நாயை வைத்து தீவிரவாதிகளைப் பிடிக்க ஐடியா போடும் காட்சியும் ரசிக்கத்தக்கது. ஆனால் எப்போதும் இப்படியே இருந்தால் எப்படி..? ஏதாவது புதுசா செய்யுங்க எசமான்..!

இவருடைய காதலியான ரம்யா நம்பீசன் வரும் காட்சிகளெல்லாம் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்கிறது.. அத்தனை அழகான முகம்.. மகேஷ் முத்துசாமியின் கேமிராவில் இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கிறது. முதல் டூயட் பாடல் காட்சியை மட்டுமே ரம்மியமாக எடுத்திருப்பதால் அதிலும் ரம்யாவின் அழகு தெறிக்கிறது. நடிக்க சிறிதளவே வாய்ப்பு தரப்பட்டிருப்பதால் வேறொன்றும் சொல்வதற்கில்லை..

 

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளைத் தவிர்த்து மற்றவைகள் சாதாரணமானவைகள்தான். படத்தின் களமே ரோடு, தெருக்கள் என்று இருப்பதால் இதற்கு மேல் எதிர்பார்ப்பதில் நியாயமில்லைதான். இசையமைப்பாளர் ரஜினின் இசையில் முதல் பாடல் ஓகே. கதையை நகர்த்த வேண்டி பிற்பாதியிலும் ஒரு பாடலின் ஊடேயே கதையை நகர்த்தியிருக்கிறார்கள். பட் ஓகேதான்..!

ஒட்டு மொத்த திரைப்படமாக பார்க்கப் போனால் இது, சீரியஸ் படமா இல்லை..? காமெடி படமா என்கிற ஒரு சிறிய குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. சீரியஸ் படமென்றால் கதையின் அடிநாதமே தவறாக இருக்கிறது. காமெடியென்றால் இன்னும் அதிகமாக சிரிக்க வைத்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

போலீஸ் வேலையில் பல ஆண்டுகளாக பணியாற்றுபவர் எப்படி ஒரு பயந்த சுபாவத்துடன் இருக்க முடியும்..? ராமநாதபுரத்தில் நடக்கும் கலவரத்திற்கு பயந்து டிரான்ஸபரை கேன்ஸல் செய்ய வைக்கத்தான் இத்தனை நாடகமும் என்றால் இது அவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச் மீதே நம்பிக்கையில்லாதது போல தோன்றுகிறது.

அந்த ஊரில் எந்த வேலையும் செய்யாமல், சோம்பேறியாகவே இருந்து தொலைத்துவிட்டு, இப்போது வேறு ஊரில், வேறு ஸ்டேஷனில் வேலை செய்ய வேண்டுமே என்று நினைத்து இவர்கள் இதனைச் செய்திருந்தால் நிச்சயமாக ஏற்றுக் கொண்டிருக்கலாம்..

இவர்களையும் நல்லவர்களாக காட்ட வேண்டுமே என்பதற்காக இயக்குநர் செய்த சதி வேலை அவருக்கே சதியாகிவிட்டது. கடைசியில் ராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தி ஊர்க் கலவரத்தை அடக்குவது போன்ற திரைக்கதையெல்லாம் ரொம்பவே டூ மச்சுதான் இயக்குநரே..!?

இவர்களின் திரைக்கதை வேலையை போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்குள் நடக்கும் அலுவல்படியே நகர்த்தியிருக்கலாம். சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இயக்குநர் ஏனோ இதில் அக்கறை காட்டாமல் எஸ்.பி.யைகூட அனுபவம் இல்லாதவராக காட்டியிருப்பது ஏனென்றுதான் தெரியவில்லை.

அத்தனை நாட்கள் நல்லவராக இருக்கும் ஊர் பஞ்சாயத்து தலைவரும், மளிகைக் கடை அண்ணாச்சியும் ஒரு நிமிடத்தில் பரஸ்பரம் சந்தேகப்பட்டு சண்டையிட்டுக் கொள்வதையெல்லாம் ஏற்க முடியவில்லை. ஸாரி இயக்குநர் ஸார்.. ஆனால் இதற்குப் பின்னான தொடர்ச்சியான திரைக்கதை டிவிஸ்ட்டுகள் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கின்றன என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

 

ஒரு தமிழ்ச் சினிமாவின் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்குமென்ற ஒரு சூழலை இந்தப் படத்தில் உடைத்திருப்பது இன்னொரு சிறப்பு. அதற்காக ஹீரோயினைகூட அப்படியே அம்போன்னு விட்டுட்டீங்களே ஸார்..?

யோகிபாபுவை தேடாமலேயே அவருடைய புகைப்படத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒட்டுவது.. அந்த கோவில் பசங்களையும் அதே கிரிமினல் லிஸ்ட்டில் வைப்பது.. யோகிபாபுவின் அசுரத்தனமான தீவிரவாத வளர்ச்சி.. இதெல்லாம் சிரிப்பாய்தான் வருகிறதே தவிர.. சீரியஸாக எடுபடவில்லை.

‘பாபநாசம்’ படத்திற்கெப்படி வரிவிலக்கு அளிக்க முடியாது என்று அரசு சொன்னதோ, அதே காரணங்கள் இந்தப் படத்திற்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. போலீஸே திருடச் சொல்வது.. சரோஜாதேவி புத்தகங்களை கோவிலில் ஒளித்து வைப்பது.. தெரு விளக்குகளை உடைப்பது.. மளிகைக் கடையை தீயிட்டுக் கொளுத்த நினைப்பது.. இதெல்லாம் தப்பானது என்றும், இதற்கான தண்டனை அந்த காவலர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லாததும் ஏனோ..?

அவ்வப்பொழுது எழும் குறைந்தபட்ச காமெடி உத்தரவாதத்துடன் இந்த வாரத்திய படங்களில் முதலிடத்தில் இருக்கிறது இந்தப் படம்.  

அடுத்தப் படத்தில் முழு மூச்சாக வெற்றி பெற இயக்குநரை வாழ்த்துகிறோம்.

Our Score