full screen background image

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் ஒய்.ஜி.மகேந்திராவின் நாடகமா..?

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் ஒய்.ஜி.மகேந்திராவின் நாடகமா..?

அடுத்த கதை திருட்டு சம்பவத்தில் சிக்கப் போகும் படம் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.

இந்த விஷயம்கூட நேற்றைக்கு நடைபெற்ற நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சொப்பன வாழ்வில்’ நாடகத்தின் அறிமுக விழாவில் தற்செயலாக கிடைத்ததுதான்.

இந்த நாடகத்தின் ஆசிரியரான கோபுபாபுவை அறிமுகம் செய்து வைத்து ஒய்.ஜி.மகேந்திரா பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கோபுபாபு, ஒய்.ஜி.மகேந்திராவுக்கு ஏற்கெனவே இரண்டு நாடகங்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒரு நாடகத்தில் கடவுள் மனிதனாக அவதாரமெடுத்து பூமியில் வந்து தங்கி கஷ்டப்படுவது போன்ற கதையாம். இந்த நாடகமே பின்பு ஒரு சினிமாவாக உருவெடுத்ததாம். அப்போதெல்லாம் காப்பி ரைட்ஸ் விஷயங்கள் அதிகமாக தெரியாததால் அதை விட்டுவிட்டார்களாம்.

கடந்த 2007-ம் வருடம் கோபுபாபு எழுதிய ‘மாதவன் கேசவன்’ என்ற நாடகத்தையும் ஒய்.ஜி.மகேந்திரா நடித்து இயக்கியிருந்தார். இந்த நாடகமும் இப்போது சினிமாவாக உருவாகியிருப்பதாகக் கூறினார் ஒய்.ஜி.மகேந்திரா.

இரண்டு போலீஸ்காரர்கள் ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் பணியாற்றுவார்கள். ஊரில் எல்லோரும் ஒழுக்கமாக இருப்பதால் ஸ்டேஷனுக்கு எந்த கேசும் வராது.  எனவே அந்த காவல் நிலையத்தை மூடி விட்டு, இருவரையும் வேறு ஊருக்கு மாற்ற காவல் துறை முடிவு செய்யும்.

அதுவரையில் வேலையே செய்யாமல் சும்மா இருந்தே சம்பளம் வாங்கி சுகம் கண்ட அந்த இரண்டு போலீஸ்காரர்களும் வேறு ஊருக்குச் சென்று வேலை பார்க்கும் சூழலை விரும்பாமல் அங்கேயே தொடர்ந்து இருபதற்காக அந்த ஊரில் தாங்களே புதிது, புதிதாக குற்றங்களை உருவாக்குவார்கள். அதன் தொடர்ச்சியாக என்னென்ன நடக்கிறது என்பதுதான் இந்த நாடகத்தின் கதை. இந்தக் கதையின் அடிப்படையில் ஒரு படம் இப்போது உருவாகி இந்த மாதம் ரிலீசுக்கு காத்திருக்கிறது..” என்றார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா.

கதையைக் கேட்டவுடன் அனைவருக்கும் சட்டென்று தெரிந்தது இது ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படத்தின் கதையாச்சே என்று..! நாடகத்தில் இருந்த இரண்டு போலீஸ்காரர்களை படத்தில் நான்கு போலீஸாராக மாற்றியிருக்கிறார்கள் போலும்.

“படத்தைப் பார்த்துட்டுதான் என்ன செய்யறதுன்னு யோசிக்கணும்…” என்றார் கதாசிரியர் கோபுபாபு.

நாமும் காத்திருப்போம்…!

Our Score