full screen background image

‘அன்னக்கிளி’ செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம்..!

‘அன்னக்கிளி’ செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம்..!

ஆல்ஃபா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், உருவாகியிருக்கும் படம் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.’

‘அலைபாயுதே’, ‘டும் டும் டும்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘கடல்’ ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குனராய் பணியாற்றியவரும், பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான தினேஷ் செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.

NPNET (17)

‘அன்னக்கிளி’,  ‘கிழக்கே போகும் ரயில்’,  ‘முதல் மரியாதை’,  ‘கடலோரக் கவிதைகள்’,  ‘உதயகீதம்’,  ‘சின்னக் கவுண்டர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியவரும்,  பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, மணிரத்னம்,  எஸ்.பி.முத்துராமன்,  ஆர்.வி.உதயகுமார் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றியவருமான கதாசிரியர் ஆர்.செல்வராஜ் இப்படத்திற்கு தினேஷுடன் இணைந்து கதை அமைத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபிஸ்’ தொடரில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கேயன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷரியா,  இவன்ஸ்ரீ,  ஜெகதீஸ்,  ஜார்ஜ் விஜய், அரவிந்த், அருள் ஜோதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஏ.டி.பகத்சிங், இசை – நவீன் மற்றும் பியோன் சுரோ, படத்தொகுப்பு –சேவியர் திலக், பாடல்கள் – கலை சாய் அருண், கலை இயக்கம் – க்ராஃபோர்டு, சண்டை பயிற்சி – ‘ரன்’ ரவி, மக்கள் தொடர்பு – நிகில், ஸ்டில்ஸ் – மனோகர், நடனம் – சான்டி, இணை தயாரிப்பு – காஞ்சனா சிவக்குமார் மற்றும் பத்மபிரியா கோபாலகிருஷ்ணன், கதை – ஆர்.செல்வராஜ் மற்றும் தினேஷ் செல்வராஜ், தயாரிப்பு மற்றும் இயக்கம் –தினேஷ் செல்வராஜ்.

NPNET (16)

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்.. இந்த பஞ்சபூதங்களுடன் தன்னை ஆறாவதாய் இணைத்துக் கொண்ட மெகா பூதம் ‘பணம்’. இதுதான் நாம் தூக்கத்தில்கூட முணுமுணுக்கின்ற வார்த்தை.

நமக்கு நடக்கத் தெரியாமல் இருக்கலாம். பாடத் தெரியாமல் இருக்கலாம். நீந்தத் தெரியாமல் இருக்கலாம். எது தெரியாமல் இருந்தாலும் நம்மால் வாழ முடியும். ஆனால், பணம் சம்பாதிக்கத் தெரியாமல் இருந்தால் நம்மால் வாழவே முடியாது.

விவசாயம் பண்ணினால்தானே அறுவடை செய்ய முடியும். வியர்வை சிந்தி உழைத்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும். அந்தளவுக்கு உழைக்க நம்மில் சிலருக்கு பொறுமையில்லை. பசிக்கும்போது பாஸ்ட் புட் சாப்பிடுவதை போல உடனேயே பணக்காரனாக வேண்டும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள்.

NPNET (2)

அப்படிப்பட குணாதிசயம் உடைய நான்கு பேர் இதுதான் கடைசி எல்லைன்னு நன்றாகவே தெரிந்தும் ‘நோ எண்ட்ரியில்’ செல்வது போன்ற சம்பவம்தான், இந்தப் படத்தின் மையக் கரு.

அனைத்து விளையாட்டுக்களிலும் ஒரு விதி இருக்கும். எல்லைக் கோடு இருக்கும். அதை மீறினால் ஆட்டத்தைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள். அதுபோல நம் வாழ்க்கையும் ஒரு விளையாட்டுதான். வாழ்க்கையின் விதியை மதிக்காமல் எல்லை தாண்டி விளையாடும் நான்கு பேரின் கதைதான் இந்த ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ திரைப்படம்.

NPNET (1)

23 வயதான பிரபுவின் அப்பா ஒரு சப்-இன்ஸ்பெக்டர்.  பணியில் நேர்மையானவர். அம்மா இல்லாத பிள்ளை. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த பைக் விபத்தில் இறந்து போன அண்ணனின் நண்பர்களான அணில்,  ஸ்ரீதர், ஜானி  ஆகிய மூவர் மட்டும்தான் இப்போதைக்கு பிரபுவின் உறவுகள்.

மலேசியாவில் இருக்கும் நண்பன் ஆனந்த் உதவியுடன் கோலாலம்பூரில் செட்டில் ஆக வேண்டும் என்கிற தன்னுடைய எண்ணத்திற்கு தேவைப்படும் பணம் நேர்மையான அப்பாவின் மூலம் கிடைக்காது என்பது பிரபுவிற்கு நன்றாகவே தெரியும்.

அதனால், தன் நண்பர்களான அணில், ஜானி மற்றும் ஸ்ரீதருடன் சேர்ந்து சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வரும் பிரபு, அதன் முலம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பித்தான். சந்தோஷமாகவும் இருந்தான். ஆனால் ஒருநாள் எல்லாம் தலைகீழாய் மாறியது.

‘கூடா நட்பு கேடில் முடியும்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப,  இந்த மூவரின் நட்பே பிரபுவிற்கு எமனாக மாறியது. தன் கழுத்தை வெட்ட வந்த அருவாளிடமிருந்து பிரபு குனிந்து தப்பினானா,  அல்லது அருவாளுக்கு கழுத்தை கொடுத்தானா என்பதினை விறுவிறுப்பான திரைக்கதையிலும், சுவாரஸ்ய முடிச்சுகளுடனும் சொல்லும் படமே இந்த ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல.’

இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா, கடந்த பிப்ரவரி 27 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Our Score