full screen background image

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க – சினிமா விமர்சனம்

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க – சினிமா விமர்சனம்

‘உப்பு கருவாடு’, ‘பசங்க-2’, ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்று கடைசி மாதத்தில் சில தரமான படங்களை பார்த்து தமிழ்ச் சினிமா தர்பார் நடை போடுகிறது என்று பெருமிதப்பட்டிருக்கும் நேரத்தில், வருடத்தின் துவக்கத்திலேயே இப்படியொரு படம்..!

சென்னைக்கு வந்தேறி ஒரு வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார் ஹீரோ. அவருடைய அறையில் இவருடன் சேர்த்து 3 நண்பர்கள் தங்கியிருக்கிறார்கள். காதல் என்றாலே பிடிக்காத நிலையில் இருக்கும் ஹீரோவைப் பார்த்து அறை நண்பன், “நீ யாரையாவது காதலிச்சுக் காட்டு பார்ப்போம். உன்னையெல்லாம் எவ பார்க்கப் போறா..?” என்று உசுப்பேத்திவிட.. வெறியாகிறார் ஹீரோ.

கோவிலுக்கு போன இடத்தில் ஹீரோயினை பார்க்கிறார். தான் இப்போது பொண்ணு பார்க்கப் போவதாக முன்பின் தெரியாத அன்றைக்கு மட்டுமே பார்த்த ஹீரோயினிடம் சொல்லிவிட்டு ‘எஸ்’ ஆகிறார். பொண்ணு பார்க்கப் போன இடம் கலவரமாக.. அறைக்குத் திரும்பி அட்ரஸை மாத்திக் கொடுத்த நண்பனை வகுந்தெடுக்கிறார்.

மறுநாள் கோவிலுக்கு சோகமாக வர ஹீரோயின் இப்போதும் ஹீரோவிடம் வந்து, “என்ன ஆச்சு..? என்று கேட்க நடந்த கதையைச் சொல்கிறார். ஹீரோயின் ‘அச்ச்ச்சோ’ என்று பரிதாபப்பட.. இருவருக்குள்ளும் வழக்கப்படியாக காதல் ஸ்டார்ட் ஆகிறது.

வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்கும்படி ஹீரோயின் சொல்ல.. அதன்படியே ஹீரோ ஹீரோயினின் வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறார். ஹீரோயினின் அப்பா இதுவரையிலும் எந்தத் தமிழ் சினிமாவிலும் சொல்லப்படாத ஒரு விஷயமாக தனது வருங்கால மாப்பிள்ளை ஆண்மையுள்ளவரா என்பதை கண்டறிய. ஹீரோவுக்கு மயக்க மருந்து கொடுத்து சோதிக்கிறார்.

மயக்கம் தெளிந்த ஹீரோ கோபமாகி வருங்கால மாமனாரை கன்னாபின்னாவென்று கத்துகிறார். இப்போது ஹீரோயினுக்கு ஒரு பேக் கிரவுண்ட் கதையை ஸ்டார்ட் செய்கிறார் அப்பா. “என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்,  என் மகளை தத்தெடுத்தேன்.  அதேபோல் என் மகளுக்கும் வரக்கூடாதே என்பதற்காக இதைச் செய்தேன்..” என்கிறார். என்னவொரு கிரியேட்டிவிட்டி..? அற்புதமான சிந்தனை..! எங்கயோ போயிட்டாரு இயக்குநர்.

கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிய நிலையில் புத்தாடைகள் வாங்கிக் கொண்டு அறைக்கு வருகிறார்கள் நண்பர்கள். பாத்ரூமில் நம்பர் ஒண்ணுக்கு போன ஹீரோ திடீரென்று பேயாய் கத்துகிறார். அவர் ரெடிமேட் துணிக் கடையிலேயே டிரெஸ்ஸை மாற்றிவிட்டுத்தான் வீட்டுக்கு வந்திருந்தார். ஜிப் சரியாக வேலை செய்யாமல் இருக்க.. இப்போது இழுத்த வேகத்தில் “அது” ஜிப்பில் மாட்டிக் கொண்டதாம்..!

கல்யாணத்துக்கு இன்னும் 4 நாள் இருக்கேன்னு பதறியடிச்சு ஹீரோவைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுறாங்க நண்பர்கள். அங்கே “ஒண்ணும் செய்ய முடியாது..” என்கிறார் அலோபதி மருத்துவர். சரி. சித்த மருத்துவத்தில் பார்க்கலாம் என்று சித்தாவுக்கு செல்கிறார்கள். அவரோ ஹீரோயினின் அப்பாவின் சீடர்.

“இது கிரிட்டிக்கலான கேஸ்.. பெரிய கை வந்துதான் பார்க்கணும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்று சொல்லிவிட்டு ஹீரோயினின் அப்பாவையே மேல் சிகிச்சை செய்ய அழைக்கிறார் சித்தா மருத்துவர். வருவது வருங்கால மாமனார் என்று அறிந்து இங்கேயிருந்தும் எஸ்கேப்பாகிறார்கள் ஹீரோவும், நண்பர்களும்.

எப்படியோ சமாளித்து திருமண மேடைவரையிலும் வந்துவிடுகிறார்கள். திருமணத்திற்கு அலோபதி மருத்துவரும், சித்தா மருத்துவரும் ஒருசேர வந்து நிற்க.. கல்யாணம் அலங்கோலமாகிறது. செய்தியறிந்து மாமனார் பதட்டத்துடன் வருங்கால மருமகனை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதிக்கிறார். “என் மருமகனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை..  சகஸஸ்..” என்கிறார்.  கல்யாணம் நல்லபடியாகவே நடந்து முடிகிறது.

இதுதாங்க இந்தப் படத்தோட சிறந்த கதை, திரைக்கதையின் சுருக்கமான வடிவம்.

இயக்குநர் ஏதோ 25 வருஷமா வெளிநாட்டில் குடியிருந்துவிட்டு இப்போதுதான் கோடம்பாக்கத்தில் கால் வைத்திருக்கிறார் போலும். நாட்டில் இப்போது என்ன மாதிரியான படங்கள் வருகிறது என்கிற குறைந்தபட்ச பொது அறிவுகூட இல்லாமல் இப்படி பொறுப்பற்ற முறையில் படமெடுத்தால் எப்படி..?

ஹீரோவே தயாரிப்பாளர் என்று நினைக்கிறோம். அவரது அண்ணன்தான் இயக்குநர் போலிருக்கிறது. ஹீரோயின் மட்டுமே நடிப்பில் கொஞ்சம் திருப்திபடுத்தியிருக்கிறார். அலோபதி டாக்டரான லொள்ளு சபா சுவாமிநாதனும், சித்தா மருத்துவரான சிங்கமுத்துவும், கத்திக் கத்தி பேசியே காதை கிழிக்கிறார்கள். நகைச்சுவை இருந்தும் இப்படியொரு கதையில் என்னத்த ரசிக்கிறது..?

ரிஷால் சாயின் இசையில் ‘கல்கோனா கண்ணழகி’ என்கிற பாடல் மட்டுமே இந்தப் படத்தின் ஒரேயொரு ஆறுதல். பாடலும், பாடல் காட்சியும் ஓகே.. இந்தப் பாடலுக்காக மட்டுமே இந்தப் படம் நினைவில் வைத்திருக்கப்படலாம் என்று தெரிகிறது..!

Our Score