ஒரு சஸ்பென்ஸ்-திரில்லர் டைப் கதையை மிஷ்கின் பாணியில் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன்.
ஹீரோ சிபிராஜ் கோவையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவியான அருந்ததி, சிபி போலீஸ் வேலை பார்ப்பது பிடிக்காமல் தனது தாய் வீட்டிற்குப் போய்விட்டார். சிபியின் ஒரே தங்கை பள்ளிக்குச் செல்லும் மாணவி.
ஒரு நாள் ஒரு பெண்ணை கடத்த முயற்சித்த ஒரு கும்பலை பிடிக்கப் போய் அதில் தவறுதலாக சக இன்ஸ்பெக்டர் ஒருவரையே சுட்டு கொன்றுவிடுகிறார் சிபிராஜ். இந்தச் சண்டையில் தன்னுடைய காலில் குண்டு காயம் பட்டு சிகிச்சையெடுத்த நிலையில் வீட்டில் ரெஸ்ட் எடுக்கிறார் சிபி.
இந்த நேரத்தில் அவரது பக்கத்து வீட்டுக்காரர் தான் வெளியூர் போவதால் “தான் வரும்வரையில் தனது வீட்டு நாயை பார்த்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்கிறார். சிபிராஜ் “முடியாது” என்று சொன்னாலும், அவர் தன் நாயை தனியே விட்டுவிட்டு வெளியூர் போய்விடுகிறார். அக்கம்பக்கத்தில் இருக்கும் சிறார்கள் அந்த நாயின் அருகே வெடி வெடித்து அதனை கலகலக்க வைக்க.. சப்தம் கேட்டு வரும் சிபி அவர்களை விரட்டிவிட்டு நாயை காப்பாற்றுகிறார்.
ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த அந்த மணி என்ற நாய் அப்படியே சிபியின் வீட்டுக்குள்ளேயும் வந்துவிடுகிறது. அந்த நாயை தன் வீட்டை விட்டுத் துரத்த எல்லா வழிகளிலும் முயல்கிறார். அது பலனளிக்கவில்லை. ஒரு நாள் அந்த நாய் மிலிட்டரியில் பயிற்சி பெற்று பணியாற்ற நாய் என்பது சிபிக்கு தெரிய வர.. அதற்கு பின்னர் அந்த நாயை பத்திரமாக பாதுகாக்க ஆரம்பிக்கிறார் சிபி.
இந்த நேரத்தில் சிபியின் மனைவி அருந்ததி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த அதே நாளில் ஒரு கும்பல் அருந்ததியை கடத்திச் செல்கிறது. மனைவியை காணாமல் துடிக்கும் சிபியிடம் அந்தக் கும்பல் பல வழிகளில் டார்ச்சர் செய்து அருந்ததியை கொலை செய்ய முயல்கிறது. சிபி அந்தக் கும்பலிடமிருந்து தனது மனைவியை மீட்டாரா என்பதுதான் படம்..
தனது முந்தைய படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகியும் அடுத்த படத்தில் நடிக்காமல், நல்ல கதையம்சம் உள்ள படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று பலரிடமும் கதை கேட்டு சலித்தெடுத்து இந்தக் கதையில் நடித்ததாகச் சொன்னார் சிபிராஜ். மகனுக்காகவே நடிகர் சத்யராஜ் சொந்தச் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
கதை ஓகேதான்.. திரைக்கதைதான் பல இடங்களில் சொதப்புகிறது.. கதை-திரைக்கதையில் டிங்கரிங் வேலைகளை இன்னமும் நன்றாகவே செய்திருக்கலாம்..
சமீப காலமாக இது போன்ற துறை சம்பந்தமான கதைகளை கையாள்பவர்கள் அவசர கோலத்தில்.. தரவுகளை சரி பார்க்காமல்.. அந்தத் துறையைப் பற்றிய ஆழமான படிப்பு இல்லாமலேயே கதையெழுதி வருகிறார்கள்.
சிபிராஜ் ஒரு இன்ஸ்பெக்டர் என்றால், அவருடைய பயிற்சி காலத்திலேயே போலீஸ் துறையில் இருக்கும் மோப்ப நாய்கள் பற்றியும் அவைகளின் பொதுவான பழக்க வழக்கங்கள் பற்றியும் ஒரு தனி பாடத்தையே போலீஸ் டிரெயினிங் காலேஜில் நிச்சயம் படித்திருப்பார்.
நாயை பார்த்தவுடன் முதலில் பயப்படும் கேரக்டரே சிபிராஜின் போலீஸ் வேலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ரொம்பவே இடிக்கிறது. வீட்டில் வளர்க்க விரும்ப மாட்டார்களே ஒழிய பயப்பட மாட்டார்கள்.. அந்தக் காட்சியை காமெடியாக எடுப்பதாக நினைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் போடுவது காக்கி டிரெஸ்ஸாச்சே..?
சிபிராஜ் பல காட்சிகளில் அவரது அப்பாவை நினைவுபடுத்துகிறார். அவருடைய பாடி லாங்குவேஜும், சில இடங்களில் வசன உச்சரிப்பும் சத்யராஜையே நினைவூட்டுகிறது..! ஆனாலும் கண் கலங்க வேண்டிய காட்சிகளில் மட்டும் சுமாராக நடித்திருக்கிறார். மனைவியின் கதறலைக் கேட்டு கணவனின் ரியாக்சன் எப்படியிருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட தமிழ்ச் சினிமாக்களை பார்த்து மனப்பாடம் ஆகியிருக்கும் நாம் எதிர்பார்த்த அந்த எமோஷனல், சிபியிடம் மிஸ்ஸிங் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
மற்றபடி நாயிடம் மாட்டிக் கொண்டு முழிப்பதிலும், அதனைச் சமாளிக்க அவர் படும் பாடும் நிறையவே சிரிக்க வைக்கிறது.. அதிலும் மனோபாலாவின் மாமனான அந்தச் சின்னப் பையன் சொல்லும் மொத்த வித்தையையும் இறக்கிட்டான் போலிருக்கு என்ற வசனத்திற்கு… முடியல..!(லிங்குசாமி கோச்சுக்க மாட்டாரா?)
ஹீரோயின் அருந்ததி.. அதிகம் காட்சிகளில்லை. ஆனால் கிளைமாக்ஸ் காட்சிகளில் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார்.. பாடல் காட்சிகளில் அழகாகத் தெரிகிறார். அவருடைய அறிமுகக் காட்சியில் சஸ்பென்ஸுடன் பேசும் ஒவ்வொரு டயலாக் டெலிவரியும் சூப்பர்..
காமெடி பாலாஜி இதில் வில்லனாகியிருக்கிறார். என்னதான் இத்தனை கொடூரங்களை அசால்ட்டாக செய்யும் ‘அசால்ட் சேது’ கேரக்டரில் வாழ்ந்துவிட்டு கடைசி காட்சியில் “யாராச்சும் காப்பாத்துங்களேன்..” என்று கதறுவது அவரது கேரக்டரையே சிதைத்துவிட்டது..!
படத்தில் அதிகம் நடித்திருப்பது அந்த நாய் மணிதான்.. ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயான இவைகள்தான் அதிகமாக காவல்துறையிலும், ராணுவத்திலும் மோப்பம் பிடிப்பதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. நாய்களிலேயே அதிகம் கீழ்ப்படிதல் உள்ளவையும், அதிக புத்திக்கூர்மை உள்ளவையும் இவைகள்தான் என்று நாய் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
எப்படியோ இந்த நாய்க்கும் ஒரு கசமுசா செய்ய வாய்ப்பு கிடைத்து அதனை படமாக்கியிருக்கும் விதம் சற்றும் ஆபாசமில்லாமல் வந்திருப்பதில் மகிழ்ச்சி. இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நடிகர் மயில்சாமி கலகலக்க வைத்திருக்கிறார்.
படம் கோவை, சத்தியமங்கலம், ஊட்டி பகுதிகளில் நடைபெறுவதால் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் அழகு மயம். ஷாட் பை ஷாட் ஒளிப்பதிவு மிளிர்கிறது. இதற்கேற்றாற்போல் இசையமைப்பிலும், பின்னணி இசை வயலினுடனேயே அதிக நேரம் பயணித்த்தால் ஒரு திரில்லர் படம் என்கிற பீலிங்கையும் கொடுத்துக் கொண்டேயிருந்தது..
படத்தில் குறைகள்.. லாஜிக் மீறல்கள் என்று இருக்கவும் செய்கின்றன. வழக்கம்போல போலீஸ் உடை. சிபிராஜுக்கே சற்றும் பொருந்தாதவகையில் உடையை தைத்துக் கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் உயரதிகாரிகளையே கண்ணில் காட்டாமல் இந்த போலீஸ் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு துப்பாக்கியில் எத்தனை குண்டுகள் இருக்கும் என்பதைக்கூட எண்ணாமல் சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இன்ஸ்பெக்டரின் மனைவி கடத்தப்பட்டால் அது எவ்வளவு பெரிய செய்தியாகும்? மேலிடத்தில் இருந்து கேட்க மாட்டார்களா..? ஒரு இன்ஸ்பெக்டரே மேலதிகாரிகளின் இன்ஸ்ட்ரக்சன் இல்லாமல் தன் வீட்டிலேயே சென்சார் டேபிளை அமைக்க முடியுமா..? இது போன்ற பல கேள்விகளுக்கு முத்தாய்ப்பாக வில்லனின் தம்பி யார் என்று தெரியும் சஸ்பென்ஸ்கூட நம்ப முடியாதவகையில்தான் இருக்கிறது..!
ஒரு சிறந்த சஸ்பென்ஸ்-திரில்லர் படமாக வந்திருக்க வேண்டும்.. ஹீரோயிஸ படமாக ஆக்கிவிட்டதினால் பாதியைத்தான் ரசிக்க முடிந்திருக்கிறது..!