full screen background image

முத்தின கத்திரிக்கா – சினிமா விமர்சனம்

முத்தின கத்திரிக்கா – சினிமா விமர்சனம்

இயக்குநர் – நடிகர் சுந்தர்.சியின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. 5 ஆண்டுகளாக ஹீரோவாக நடிக்க முயற்சிக்காமல் ஒதுங்கியிருந்தவர், தனக்கு பொருத்தமான ஒரு கேரக்டர் இருப்பதையறிந்து, இந்தப் படத்தை தானே தயாரித்து தனது சிஷ்யனை இயக்குநராக்கி  நடித்திருக்கிறார். நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்தான்.

2014-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘வெள்ளி மூங்கா’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இது. மலையாளத்தில் பிஜூ மேனன் நடித்த ஹீரோ கேரக்டரில் சுந்தர்.சியும், நிக்கி கல்ரானி கேரக்டரில் பூனம் பாஜ்வாவும் நடித்துள்ளனர். 2014-ம் வருடத்திலேயே மலையாளத்தில் அதிகம் வசூலைக் குவித்த இரண்டாவது படம் இதுதானாம். 2.8 கோடியில் தயாரிக்கப்பட்டு 25 கோடியை கலெக்ட் செய்து பிஜூ மேனனின் கேரியரிலும் ஒரு சாதனைப் புள்ளியை வைத்துள்ளது இந்தப் படம்.

பரம்பரை அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் சுந்தர்.சி. இவருடைய அப்பாவும், தாத்தாவும் இதே அரசியல் களத்தில் குதித்து வீணாய்ப் போனவர்கள். இதனாலேயே இவருடைய அம்மா சுமித்ரா, அரசியல் வாடையில்லாமலேயே மகனை வளர்த்து வந்திருக்கிறார்.

ஆனாலும் ஒரு சுபயோக சுபதினத்தில் பக்கத்து வீட்டு பருவ மங்கையை போலீஸ் பிடித்துச் செல்வதைப் பார்த்து அவளுக்கு உதவி செய்ய நினைக்கிறார் இள வயது சுந்தர். இதனால் அவசரத்துக்கு உதவுகிறதே என்றெண்ணி வேஷ்டியும், சட்டையுமாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் நிற்க.. யாரோ அரசியல்வாதி என்று நினைத்து சட்டென அந்தப் பெண்ணை அனுப்பி வைக்கிறார் இன்ஸ்பெக்டர்.

அந்த ஒரு கணத்தில் அந்த வேஷ்டியும், சட்டையும், அரசியல்வாதி என்கிற கெத்தும் கொடுத்த ஒரு மரியாதையை நினைத்துப் பார்த்த சுந்தர்.சி, இதன் பின்பு முழு நேர அரசியல்வாதியாக மாறுகிறார். அகில இந்திய அளவில் இருக்கும் ஒரு கட்சியின் தமிழகத்து கிளையில் தனது சொந்த ஊரான கோவிலூரின் நகரச் செயலாளராக இருக்கிறார் சுந்தர்.

இந்தப் பதவியை வைத்துக் கொண்டே தங்கை, தம்பியையெல்லாம் கரை சேர்த்து வீட்டையும் கவனித்துக் கொண்டே அலைந்ததில் தனக்கு 40 வயதாகிவிட்டதே என்பதையே மறந்து போய்விட்டார். இப்போதுதான் அவரது அம்மா இவருக்கு மும்முரமாக பெண் பார்த்து வருகிறார். 25 வயதுக்குள்ளதான் பொண்ணு இருக்கணும் என்று சுந்தர்.சி. கண்டிஷன் போட.. திருமணம் எட்டாக்கானியாக இருக்கிறது.

அந்த ஊர் நகராட்சியில் துணைத் தலைவராக இருப்பவர் வி.டி.வி. கணேஷ். இவர் ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளி. இவருடைய தம்பியான சிங்கம்புலி எதிர்க்கட்சியில் முக்கியப் புள்ளி.. இவர்கள் இருவரும் அரசியல் ரீதியாக எதிர்த்துக் கொண்டாலும் கமிஷன்,கட்டிங், லஞ்சம் இதிலெல்லாம் கூட்டுக் களவாணிகள். இவர்களை எதிர்த்து அரசியல் நடத்தும் சுந்தர்.சி.யின் தொல்லை இவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

இந்த நேரத்தில் சுந்தர்.சியின் கண்ணில் படுகிறார் ஹீரோயின் பூனம் பாஜ்வா. பூனத்தைப் பார்த்தவுடன் சுந்தர்.சி.க்கு பிடித்துப் போக.. அவர் பின்னாலேயே அலைகிறார். கடைசியாக அவரது வீட்டுக்குச் சென்று பெண் கேட்கிறார். அங்கேதான் ஒரு பெரிய டிவிஸ்ட்டு..

சுந்தர்.சி. அதே ஊர் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படிக்கும்போது உடன் படித்தவர் கிரண். இவர்தான் பூனம் பாஜ்வாவின் அம்மா. கிரணுக்காக ஒரு நாள் தன் சக மாணவன் ஒருவனின் தலையில் கல்லைப் போட்டு மண்டையை உடைத்திருக்கிறார் சுந்தர்.சி. அந்த அப்பாவி மாணவன்தான் பூனத்தின் அப்பா. இதையே காரணமாக வைத்து பெண் தர மறுக்கிறார் அப்பாவான இன்ஸ்பெக்டர் ரவி மரியா.

இன்னொரு பக்கம் தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இதில் சுந்தர் இருக்கும் கட்சிக்கு ஒரேயொரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. இதே நேரம் கட்சியின் மாநிலத் தலைவர் அந்த ஒரு தொகுதிக்கு அடிபோடுவதை உணர்ந்த சுந்தர், அவரை கவனமாக காய் நகர்த்தி அவருக்கு எம்.பி. பதவி மீது ஆசை வருவது போல டிராமா போட்டு தானே வேண்டாவெறுப்பாக எம்.எல்.ஏ.வாக நிற்பதாக அறிவித்துக் கொள்கிறார்.

தான் நிச்சயமாக தோற்பேன். எம்.பி. சீட்டு எனக்குத்தான் என்று சுந்தர் வெளியில் சொல்ல.. இதைக் கேட்டு டென்ஷனாகும் கட்சியின் மாநிலத் தலைவரான ஸ்ரீமன், தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து சுந்தர்.சி.யை ஜெயிக்க வைக்கப் போராடுகிறார். இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.

விறுவிறுப்பான நகைச்சுவை கலந்த திரைக்கதையும், அதற்கு ஈடான வசனங்களும், இயக்கமும் இருந்தால் ஒரு படம் நிச்சயம் ஜெயிக்கும். இதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம். அடுத்தடுத்து நடக்கும் சுவையான நகைச்சுவையான திரைக்கதை டிவிஸ்ட்டுகளும் இதற்கேற்றாற் போன்ற சரவெடி வசனங்களுமே படத்தை ரசிக்க வைக்கின்றன.

சுந்தர்.சி. வழக்கம்போல அந்த வயதுக்கேரிய கேரக்டரை புரிந்து செய்திருக்கிறார். ஹீரோயிஸ படமாக இதையும் கொண்டு போகாமல் நகைச்சுவையோடு கலந்தடித்திருப்பதால் பெரிய அளவுக்கு நடிப்பையெல்லாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரேயொரு சண்டை காட்சியைக்கூட கடைசி நிமிடத்தில் காமெடியாக்கி அதையும் மிக எளிதாக பாஸ் செய்ய வைத்திருக்கிறார்.

பூனம் பாஜ்வா பொருத்தமான தேர்வுதான். 25 வயது கேரக்டர்தான் என்றாலும் அம்மணிக்கு அம்மா கிரண் என்னும்போது நமக்கு கிர்ரென்றாகிறது. மலையாளத்தில் லேனா இந்தக் கேரக்டரை அழகாக செய்திருக்கிறார். கிரணுக்கு பதிலாக வேறு அழகான ஆண்ட்டிகளை அமர்த்தியிருக்கலாம்.

பூனத்தின் அழகை காட்சிக்கு காட்சி பதிவு செய்திருக்கிறார் கேமிரா. முழுக்கவும் மூடாமல், அவிழ்த்துப் போடவும் இல்லாமல், கிளாமர் என்றால் என்ன என்பதற்கு இந்தப் படத்திலேயே ஒரு கிளாஸே எடுத்திருக்கிறார்கள் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும்..!  பெரிய அளவுக்கு நடிப்புக்கு ஸ்கோப் இல்லையென்றாலும், அம்மணியை ரசிக்க முடிகிறது.

ஹீரோ, ஹீரோயினை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் நடிப்பில் அலப்பறையைக் காட்டியிருப்பவர்கள் வி.டி.வி. கணேஷும், சிங்கம்புலியும்தான்.  நகராட்சித் தலைவியுடன் கணேஷ் தொடர்பில் இருக்கிறாரா இல்லையா என்பதை கடைசி ரீல்வரையில் சஸ்பென்ஸாகவே கொண்டு போய் கடைசியில் தங்கச்சி என்று முடித்திருக்கும் திரைக்கதைக்கு ஒரு சபாஷ். இதற்காக அந்த அப்பாவி கணவன் கடைசிவரையிலும் படும் பாடும் ஒரு காமெடிதான்..

நகராட்சி கல்யாண மண்டபத்தில் ஒரு நங்கையுடன் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சியில் தியேட்டரை அதிர வைக்கிறது கணேஷின் நடிப்பு. இதேபோல் ஆளும்கட்சியை எதிர்த்து நடை யாத்திரை செய்ய ஏற்பாடு செய்துவிட்டு லோக்கல் சேனல்காரர்களுக்கு போன் மேல் போன் போட்டு அழைக்கும் சிங்கம்புலியின் காமெடி ரசிக்க வைக்கிறது.

சில காட்சிகளே வந்தாலும் சுமித்ரா, ரவி மரியா இருவரும் கவர்கிறார்கள். சதீஷ் தோழமைக்குக் கை கொடுப்பவர் தனக்கென்று ஒரு தனி காதல் டிராக்கையும் வைத்திருக்கிறார். ஆனால் அது பாதியிலேயே அம்போவென நிற்கிறது. பின்பு எதற்கு அதற்காக ஒரு ரீல் அளவுக்கு நேரத்தை செலவழித்தார்கள் என்று தெரியவில்லை.  சில காட்சிகளே என்றாலும் யோகி பாபுவின் ரவுடித்தனம் அலப்பறை. “பக்கத்துல வந்து அவனே பார்த்து சொல்றவரைக்கும் நிக்குறீயேடா..?” என்ற அவரது வசனம் தியேட்டரில் லந்தை கொடுக்கிறது..!

அப்படியே அரசியலோடு போய்விடக் கூடாது என்பதற்காக பேமிலி செண்டிமெண்ட்டிற்காக சுமித்ரா-சுந்தர்.சி பாசத்தைக் காட்ட வேண்டி காபியில் சர்க்கரை போடாமல் கொடுக்க வைத்து, இதற்கு குடும்பத்தினர் பதில் மரியாதை தரும் காட்சியை வைத்து சமன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இதைப் பாராட்டும் அதே சமயம் சுந்தர்.சி., கிரண் முன்பாக வேஷ்டியை அவிழ்த்துக் காட்டி நிற்பது.. கிரண் கீழே விழுகப் போய் அவரைத் தாங்கிப் பிடிக்கும் காட்சியெல்லாம் ரொம்பவே ஓவர் இயக்குநர் ஸார்.. இதனை முற்றிலுமாக நீக்கியிருக்கலாம்.  அதேபோல் சில இடங்களில் இருக்கும் இரட்டை அர்த்த ஆபாச வசனங்களையும்கூட தயவு தாட்சண்யமே இல்லாமல் நீக்கியிருக்கலாம்…!

பாடல் காட்சிகளிலும், ஹீரோயின் வரும் காட்சிகளிலெல்லாம் இளசுகளை சொக்க வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் பானு முருகனுக்கு ஒரு ‘ஜே’ போடுவோம். என்.பி.ஸ்ரீகாந்தின் எடிட்டிங் கடைசி நேர பரபரப்பிற்கு பெரிதும் உதவியிருக்கிறது. தேர்தல் நிலவர செய்திகளை சொல்லியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது. 

சித்தார்த் விபினின் இசையில் ‘எனக்கென்ன ஆச்சோ’, ‘சும்மா சொல்லக் கூடாது’ பாடல் காட்சிகள் ஓகே ரகம். தேர்தல் பாடல் காட்சியில் காட்சிகளை மனதை ஆக்கிரமித்ததால் பாடல் நினைவில்லாமல் போய்விட்டது.

இன்றைய சமகால அரசியல் களத்தை வெளிப்படையாக்கி சொல்லியிருப்பதில் இந்தப் படத்தின் இயக்குநருக்கு இன்னொரு பாராட்டு. எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களும் வாயைத் திறக்க்க் கூடாது என்பதற்காக டெண்டர் விட்டாச்சு. அவர்கிட்ட போய் உன் கமிஷனை வாங்கிக்க என்று எதிர்க்கட்சித் தலைவருக்கு போன் செய்து சொல்லும் ஒரு நாகரிகத்தையும் படம் சுட்டிக் காட்டுகிறது.

இதேபோல் வி.டி.வி. கணேஷ் பூசணிக்காயை கொண்டு வந்து சாக்கடையில் போட்டுவிட்டு நம்மளை பாத்து எல்லாரும் இதுல எல்லாத்தையும் கொட்டுவாங்க. சாக்கடை அடைச்சுக்கும். அப்பத்தான் சாக்கடையை தூர் வாற நாம டெண்டர் விட்டு காசு சம்பாதிக்க முடியும் என்கிறார். இப்படித்தான் இன்றைய ஊழல்கள் தினம்தோறும் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தேர்தல் நிலவரங்களை அடுத்தடுத்து ஒளிபரப்பியும் சுந்தர் சியின் வெற்றியை கடைசியில் ஒரு டென்ஷனோடு கொண்டு வந்து சொல்லியும், இறுதியில் தனக்கான துறையை தானே தேர்ந்தெடுக்கும் வித்தையையும் சுந்தர் சி. சொல்வதுகூட இன்றைய நயமான அரசியல்தான். ஆனால் கடைசியில் சுந்தர்.சி.யும் அதே ஆதாய அரசியல்வாதியாகத்தான் ஆகப் போகிறார் என்பதுதான் கொடுமை. இதற்கு திரைப்படத்தில் ஒரு தீர்வும் இல்லையே இயக்குநர் ஸார்..!?

தனது மனைவியிடம் மட்டும் தான் ஆடிய டிராமாவுக்காக மன்னிப்பு கேட்கும் சுந்தர், தான் என்ன மாதிரியான அரசியல்வாதியாக ஆகப் போகிறேன் என்பதை சொல்லாமல் காட்சியிருப்பது முரணான விஷயம்..!

ஒரு நகைச்சுவை படத்திற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி கடைசிவரையிலும் தனது சிறப்பான இயக்கத்தினால் சிரிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

Our Score