கோலிவுட்டை தற்போது திரும்பி பார்க்க வைத்திருக்கும் இளம் இசையமைப்பாளர் ‘மெல்லிசை’ திரைப்படத்தின் அறிமுக இயக்குனர் C.S.சாம்-தான்.
அறிமுக இசையமைப்பாளருக்கு எளிதில் கிடைத்திடாத வாய்ப்பாக இசையை மையமாக அதிலும் மெல்லிசை என பெயரிடப்பட்ட அழகான கதையம்சம் கொண்ட படத்தில் தான் அறிமுகமானது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக சாம் புன்னகைக்கிறார்.
அடிப்படையின் மென்பொருள் வல்லுநரான இவர் சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்டிருந்தவர். இசை மீதிருந்த அதீத ஆர்வத்தால் சொந்த ஊரான மூணாரிலிருந்து சென்னைக்கு வந்த இவர் தன்னுடைய கணிப்பொறியாளர் வேலையை விட்டுவிட்டு இசையமைக்க துவங்கினார். jingles, ஆல்பம் மற்றும் பல விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ‘மெல்லிசை’க்காக, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பல பிரபல இசையமைப்பாளர்களிடம் பேசி வந்துள்ளார். ஆனால் ‘மெல்லிசை’ திரைப்படம் இசையை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் புதிய இசை தேவைப்பட்டதால் சாம் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.
‘இசைஞானி மற்றும் இசைப் புயலும் சேர்ந்த கலவைதான் சாம்’ என்று ‘மெல்லிசை’ படத்தின் அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பேட்டிகளில் குறிப்பிட்டு வருவதை தற்போது ‘மெல்லிசை’ பாடல்களை கேட்ட பின்பு பலரும் சரிதான் என்று சொல்லி வருகிறார்கள்.
பாடல் வெளியானது முதல் பல பிரபலங்கள் தன்னை அழைத்து பாராட்டி வருவதாக சாம் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார். மேலும் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே பிரபல பின்னணி பாடகர்கள் பாடியுள்ளதை சுட்டிக் காட்டினார்.
“ஹரிஹரண், ஷ்ரேயா கோஷல், ஹரிணி, ஸ்ரீனிவாஸ், ஆண்ட்ரியா, ஹரிசரண் என ரசிகர்களின் அபிமான பாடகர்கள் தனக்கு பாடியுள்ளதும் குறிப்பிட வேண்டிய விஷயம்..” என்கிறார் சாம்.
சாமின் சிறப்புகளாக அவரின் குழுவினர் குறிப்பிடுவது, சாம் முழுக்க முழுக்க லைவ்வாக instruments music-ஐ பயன்படுத்துகிறார் என்றும், ஒரு பாடலை இசையமைக்கும்போது யாருடைய தழுவலும் இல்லாத வகையில் புதிய இசையில் மெட்டுக்களை அமைப்பது அவரின் தனித்துவம் எனவும் கூறுகின்றனர்
‘மெல்லிசை’, இசை வெளியீட்டிற்குப் பின் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட இசையமைப்பாளர் சாம், தற்போது ஒரு மலையாளப் படம் உட்பட மொத்தம் ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
ஒரு குறிப்பிட்ட திரைப்பட ஆல்பமில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே அனைவருக்குமான விருப்பப் பாடல்களாக அமையும் ஆனால் இந்த ‘மெல்லிசை’ படத்தினை பொருத்தவரை தீம் மற்றும் ஒரு ஆங்கில பாடல் உட்பட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
“படம் திரைக்கு வந்த பின் இன்னும் 100 மடங்கு ‘மெல்லிசை’ பாடல்கள் மக்களுக்கு பிடிக்கும்..” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சாம்.