full screen background image

விஜய் ரசிகர்களிடையே பெயரெடுத்த இசையமைப்பாளர் குரு கல்யாண்..!

விஜய் ரசிகர்களிடையே பெயரெடுத்த இசையமைப்பாளர் குரு கல்யாண்..!

‘மாத்தி யோசி’, ‘குகன்’, ‘கோட்டி’ போன்ற படங்களில் இசையமைப்பாளராக பணி புரிந்தவர் குரு கல்யாண்.

இதன் பின்பு பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நேரத்தில் வேறு, வேறு வழிகளில் தனது இசைத் திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

யூடியூபில் அவரே சொந்தமாக ‘குரு கல்யாண் மியூஸிக்’ என்கிற பெயரில் ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்திருக்கிறார். அதன் மூலமாக தனிப் பாடல்களையும், ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு பாடல்… மேலும் தமிழகத்தை கதிகலங்க வைத்த ஜல்லிக்கட்டுவை முன்னிறுத்தி ஒரு பாடல் ஆகியவைகளை தனது யூடியூப் லின்க்கில் வெளியிட்டு பரபரப்பாக்கினார்.

சென்ற ஆண்டு காலமான பாடலாசிரியர் அண்ணாமலையின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் பாடல், விவசாயம் தொடர்பான ‘வதுவை நன்மணம்’ என்னும் தனிக் கவிதை பாடல் ஒன்றை வெளியிட்டார்.

இந்தப் பாடலை நடிகர் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியரான பழநிபாரதி எழுதியிருந்ததால் நடிகர் விஜய்யின் ரசிகர்களிடையேயும் அறிமுகமானார். இந்த அறிமுகத்தை வைத்து இன்னும் புகழடைந்தது இவருடைய அடுத்த தனிப் பாடல்.

நடிகர் விஜய்யை வாழ்த்தியும், அவரது ரசிகர்களை பாராட்டும்விதத்திலும் ‘இளைய தளபதி ரசிகன்டா’ என்கிற தலைப்பில் ஒரு பாடலை உருவாக்கினார். இந்தப் பாடலையும் கவிஞர் பழநிபாரதியே எழுதியிருக்கிறார்.

‘கில்லி நாங்கடா; சொல்லியடிப்போம்’ என்னும் அந்தப் பாடல் ‘பெர்பெக்ட் விஜய் ஆன்தம்’ என்கிற பெயரில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

மேலும் தற்போது தலைநகர் தில்லியில் நடைபெற்றும் தமிழக விவசாயிகளின் அறப்போராட்டத்தை ஆதரித்தும் இயற்கை நம்மை கைவிடாது என்பதை வலியுறுத்தியும் ‘விவசாயிகள்’ என்னும் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளாராம். இந்தப் பாடலுக்கு உமா சங்கர் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கப் போகிறார்.

உமா ஷங்கருடன் இவர் பணியாற்றிய ‘ஈஷா’ என்னும் குறும்படம் திருக்குறளின் 146-ன் பொருட் கருவை மையமாக வைத்து உருவானது. இந்தக் குறும்படம் ‘தாதா சாஹேப் பால்கே குறும்பட விருது’க்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பெருமையாகச் சொல்கிறார் குரு கல்யாண்.

மேலும் உமா சங்கருடன் இணைந்து ஸ்ரீசாயி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்திற்கு இசையமைக்கப் போகிறாராம். இந்த இசைக்கு அமெரிக்காவில் வசித்து வரும் அவரது அண்ணன் கல்யாண் இசைக் கோர்ப்பிலும், இசை தொடர்பான தொழில் நுட்ப நுணுக்கங்களுக்கும் உற்ற துணையாய் இருப்பார் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

மென்மேலும் உயர வாழ்த்துகிறோம்..!

Our Score