full screen background image

“என்னை தூக்கிவிடப் போகும் படம் முப்பரிமாணம்..!” – ஹீரோ சாந்தனுவின் நம்பிக்கை..!

“என்னை தூக்கிவிடப் போகும் படம் முப்பரிமாணம்..!” – ஹீரோ சாந்தனுவின் நம்பிக்கை..!

சாந்தனு, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள புதிய படம் ‘முப்பரிமாணம்’. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இயக்குநர்கள் பாலா, கதிர் ஆகியோருடன் பணியாற்றிய அதிரூபன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

Mupparimanam Press Meet Still (8)

அப்போது ‘முப்பரிமாணம்’ குறித்த சுவாரசியமான தகவல்களை இயக்குநர் அதிரூபன் பகிர்ந்து கொண்டார்.

இயக்குநர் அதிரூபன் பேசும்போது, “நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் கடந்து அவற்றால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லும் படம்தான் ‘முப்பரிமாணம்’.

இந்தப் படத்தில் சாந்தனு மூன்று தோற்றங்களில் நடித்துள்ளார். அவரை இந்தப் படத்தில் வேறுவிதமாகப் பார்க்கலாம். இப்படத்திற்காக அவர் ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். அவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு தொழில் நுட்ப வல்லுநராகவும் வேலை பார்த்தார்.

director adhiroopan

அதேபோல், இதுவரையிலான படங்களில் துருதுரு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, இதில் பெரிய நடிகைகள் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து இசையமைக்க ஒப்புக் கொண்டார். இப்படத்தில் ஒரு இரவு நேர பார்ட்டிக்கான பாடல் ஒன்றை அவர் இசையமைத்திருக்கிறார். இந்த ஒரு பாடலுக்காக மட்டும் கிட்டத்தட்ட 3 மாத காலம் நேரம் ஒதுக்கி, நிறைய டியூன்களை போட்டுக் காட்டினார். கடைசியில் அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்தோம்.

இந்தப் பாடலில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கே.பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், விவேக், ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, பிரசன்னா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட 27 நடிகர்களை ஒன்று சேர்த்து படத்திற்காக புரோமோ சாங் ஒன்றை உருவாக்கியுள்ளோம். மேலும், இப்படத்தின் பின்னணி இசைக்காக 85 நாட்கள் செலவிட்டுள்ளோம்.

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். வரும் மார்ச் 3-ம் தேதி படம் வெளியாகிறது..” என்றார்.

படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே பேசும்போது, “இயக்குநர் அதிரூபன் என்னிடம் ‘முப்பரிமாணம்’ படத்தின் கதையை கூறியபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனாலேயே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

srusti dangea

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் எனக்கு வேதனை அளித்தன. படப்பிடிப்பு தளத்தில் யாரும், யாருடனும் பேசக் கூடாது, செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று இயக்குனர் ஓவராக கெடுபிடி போட்டார். குடும்பத்தாருடன்கூட போனில் பேச முடியவில்லை.

படப்பிடிப்பு தளத்தில் யாரும் சரியாக குளிக்காமல், அழுக்கு உடையோடு திரிந்தார்கள். இயக்குநரின் இந்தக் கெடுபிடி தாங்க முடியாமல் நான் அழுதுவிட்டேன். இனியும் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என என் அப்பாவிடம் போனில் சொன்னேன்.. அவரோ ‘இயக்குநரிடம் சொல்லிவிட்டு வா’ என்றார். ‘நான் இந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன்’ என இயக்குநரிடம் கோபப்பட்டேன். ஆனால் அவர் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார். இப்போது படம் முடிந்து அதை பார்த்தபோது திருப்தியா இருக்கு. என் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் எனக்கே திருப்புமுனையாக இருக்கும்…” என்றார் சிருஷ்டி டாங்கே.

ஹீரோ சாந்தனு பேசுகையில், “இந்த படத்தின் கதையை முதலில் அதிரூபன் கொண்டு வந்தார். அப்போது நான் கதைக்குள் சேர்ந்தேன். அதன் பிறகு கேமராமேன் ராசாமதி சேர்ந்தார். பின்னர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதைக்குள் வந்த பிறகுதான் படம் அடுத்த லெவலுக்கு போனது.

saanthanu

எல்லோருக்குமே அவங்கவங்க வாழ்க்கைல ஒரு சரிவு வரும்போது தூக்கிவிட யாராவது ஒருத்தர் வேணும். அந்த மாதிரி நம்மளை தூக்கிவிடுறது நம்மளோட பேமிலிதான். எனக்கு என்னோட அப்பா – அம்மா, என் சிஸ்டர், என் மனைவி எல்லோரது சப்போர்ட்டும் இருந்திருக்கு.

நான் எதிர்பார்த்த வெற்றி இன்றுவரை எனக்கு கிடைக்கலேன்னாகூட என்னை ஆரம்ப காலத்தில் பத்திரிகையாளர்கள் எந்த லெவலுக்கு தூக்கி வச்சீங்களோ அந்த மாதிரி நடித்த படம் ஓடுதோ இல்லையோ என்னை கொண்டாடுறீங்க. அதுக்காக என்னோட நன்றியை தெரிவிச்சுக்குறேன்..

ஒரு விழாவில் விஷால் என்னை மேடையில் வைத்துக் கொண்டே சொன்னார்.. ‘விஷால் படம் ஜெயிச்சா விஷால் ஜெயிச்ச மாதிரி; ஆர்யா படம் ஜெயிச்சா ஆர்யா ஜெயிச்ச மாதிரி; ஆனால் சாந்தனு ஜெயிச்சா, இந்த இன்டஸ்ட்ரியே ஜெயிச்ச மாதிரி. அந்த அளவுக்கு பொறுமையும், திறமையும் சாந்தனுகிட்ட. அவரின் நிலைமை இந்த படத்தோடு மாறும்’ என்றார். இப்படி எல்லோருடைய வாழ்த்துக்களும் எனக்கு இருக்கு.

இப்ப மட்டும் இல்லை. இன்னும் எத்தனை வருசமானாலும் கடின உழைப்பை நான் கொடுத்துக்கிட்டே இருப்பேன். இந்த படம் கண்டிப்பாக எனக்கு பிரேக் கொடுக்கும். நான் ஏன் இவ்ளோ உறுதியாக சொல்றேன்னா, இதுவரைக்கும் நான் பண்ணின படங்களிலேயே ரொம்ப ஸ்ட்ராங்கான கதையம்சம் உள்ள படம் இந்த ‘முப்பரிமாணம்’தான்.

இனிமே நான் எந்த மாதிரி கதைகள் கதாபாத்திரங்கள் பண்ண வேண்டும் என்பதில் ரொம்பத் தெளிவாக இருக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர் அதிரூபன் ‘நீங்க ஹீரோ இல்லை… ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டா நினைச்சிக்குங்க’ என்றார். நான் அந்த மாதிரிதான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.

இனிமேல் நான் பண்ற எல்லா படங்களிலுமே ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாதான் மூவ் பண்ணப் போறேன். இன்றைக்கு மக்களோட பாய்ண்ட் ஆப் வியூவே மாறிடுச்சு. மக்கள் எதிர்பார்க்கிற ஒரு நடிகராக ஆகனும்னா அவங்க எதிர்பார்க்கிற அவங்க பக்கத்து வீட்டு பையன் மாதிரி மாறனும். அப்பத்தான் அவங்க மனசுல போய் உட்கார முடியும். அப்படி ஒரு கதாநாயகனாக அவங்க மனசுல போய் உட்காரனும்ங்கிறதைதான் நான் எதிர்பார்க்கிறேன்.

இனிமேல் நான் பண்ற படங்களில் நம்ம லைப்ல நடந்த மாதிரி ஒரு விசயத்தை சாந்தனு பண்ணியிருக்கிறாரு அப்படின்னு சொல்ற மாதிரியான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

இந்த ‘முப்பரிமாணம்’ இளைஞர்களுக்கான படம். படம் பார்க்கும் எல்லோருமே நம்ம லைப்லயோ, ப்ரண்டோட லைப்லயோ இந்த மாதிரிதானே நடந்ததுன்னு கண்டிப்பா யோசிப்பாங்க. அதோடு, இந்த படம் பார்த்தால் எந்த காதலர்களுக்கும் இந்த மாதிரி நடக்கவே கூடாதுன்னு  நினைப்பாங்க…” என்றார்.

இந்தப் படத்தை வரும் மார்ச் 3-ந்தேதி உலகமெங்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Our Score