‘வைகாசி பொறந்தாச்சு’, ‘கிழக்கே வரும் பாட்டு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராதாபாரதி நீண்ட இடைவெளிக்கு பின்பு இயக்கியிருக்கும் படம் ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று காலை ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
தயாரிப்பாளரின் சொந்த ஊரில் இருந்து இந்த விழாவுக்காகவே படையெடுத்து வந்திருந்த கிராமத்து மக்கள் கூட்டம் இயக்குநர் பாக்யராஜின் பேச்சை கேட்க கடைசிவரையிலும் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் இடம் பெற்ற ‘விளக்கு வச்ச நேரத்துல’ பாட்டின் ரிக்கார்டிங்கின்போது நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை விவரித்தார்.
“ஒரு படத்திற்கு டைட்டில் மாதிரியே பாடல்களும் முக்கியமான ஒன்று.. அது நல்லாயிருந்தால் ரசிகர்களை பாதி அளவுக்கு திருப்தி செஞ்சிரலாம். அதுனால அதை கடைசிவரையிலும் இன்னமும் நல்லா பண்ண முடியுமான்னு பார்க்கணும்.
நான் படமெடுக்கும்போது பாடல்களை பதிவு செய்கிறவரைக்கும் அந்தப் பாடலை அசை போட்டுக்கிட்டேயிருப்பேன். ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்றுகூட யோசிப்பேன்.
‘முந்தானை முடிச்சு’ படத்துல வர்ற ‘விளக்கு வச்ச நேரத்துல’ பாட்டு ரிக்கார்டிங் பண்ணிக்கிட்டிருக்காரு இளையராஜா. 5, 6 டேக்குகள் போயிருச்சு. இந்த நேரத்துல எனக்கு அந்தப் பாட்டோட துவக்கத்தில் வரும் சில வரிகள் பிடிக்கலை. அதுக்கு பதிலா வேற ஒண்ணு தோணுச்சு..
உடனே அங்கேயே உட்கார்ந்து அந்த பல்லவியைத் திருத்தி புதுசா ஒண்ணு எழுதி இளையராஜாகிட்ட கொடுத்து ‘இதை பாடுங்க’ன்னு சொன்னேன். அவர் ரொம்ப டென்ஷனாயிட்டார். ‘அதெல்லாம் முடியாது. இப்போ 6 டேக்வரைக்கும் போயிருச்சு. இப்போ போய் மாத்துறீங்க?’ன்னு கோப்ப்பட்டார்.
‘எனக்கு அது பிடிக்கலை ஸார். இப்போ இந்த வரிகள் நல்லாயிருக்கும்ன்னு தோணுது. இதைப் பாடுங்களேன்’ என்றேன். முதல்ல ‘முடியாது’ன்னாரு. அப்புறம் நான் ரொம்ப வற்புறுத்தவே சரின்னுட்டு அதைப் பாடிப் பார்த்தார். பாடிப் பார்த்துட்டு இந்த வரியெல்லாம் நான் பாட மாட்டேன்னுட்டாரு..
நான் அதுல எழுதியிருந்த பல்லவி,
‘விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்..’
இப்படித்தான் எழுதியிருந்தேன்.
‘நான் சாமிக்கு மாலை போட்டிருக்கேன். அதுனால இந்த மாதிரி பாட்டெல்லாம் பாட மாட்டேன்’னார் இளையராஜா. நான் கேட்டேன். ‘யாரைக் கேட்டு மாலை போட்டீங்க..? இத்தனை இயக்குநர்கள் மியூஸிக் போட காத்திருக்கும்போது இப்படி திடீர்ன்னு மாலைய போட்டுட்டேன்னு சொல்லி அதைப் பாட மாட்டேன். இப்படி மியூஸிக் போட மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்..?’னு கேட்டேன். அப்பவும் முடியாதுன்னாரு இளையராஜா.. “ஏங்க நீங்க மாலை போட்டிருக்கீங்கன்றதுக்காக நான் என்ன சாமி படமா எடுக்க முடியும்..?”ன்னு கடைசியா சண்டையே போட்டேன்.
அப்புறம் ஒரு வழியா சமாதானமாகி அந்தப் பாட்டை பாடினார். அப்பவும் பல்லவியை ‘மாமன் வந்தான்’னு பாடலை முதல்ல சரியா பாடினவரு, கடைசில ‘தந்தானனா’ன்னு மாத்தி பாடிட்டார். அதே மாதிரி ‘மறைஞ்சு நின்னு பாக்கையிலே தாகம் என்றான்’னு பாடுறதுக்கு பதிலா ‘மறைஞ்சு நின்னு பாக்கையிலே தரனானனா’ன்னு பாடிட்டார்.
பாடி முடிச்சிட்டு வெளில வந்துட்டு ‘இதுக்குத்தான் சொன்னேன்.. ஒரு பத்து தடவையாச்சும் அதைப் படிச்சு பார்த்தாதான் வரிகள் மனசுல நிக்கும். இப்போ பார்த்தியா கடைசில மாறிருச்சு.. இப்போ திரும்பவும் பாடவா?’ என்றார் இளையராஜா. ‘இல்ல.. இல்ல.. இதுவே நல்லாத்தான் இருக்கு.. விட்ருங்க’ என்றேன். ‘ஏன்..?’ என்றார். ‘இல்ல.. நான் எழுதினதைவிட நீங்க இப்போ பாடின தந்தானனா, தரனானனாவை கேட்கும்போதுதான் செக்ஸ் பீலிங்கா இருக்கு.. இத இப்படியே விட்ருங்க’ன்னு சொன்னேன்..” என்றார்.
ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஒரு கதை இருக்கும் போலிருக்கு..!