எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘முன்னோடி’.
இந்த ‘முன்னோடி’ படத்தில் நாயகனாக தெலுங்கு தேசத்தை சேர்ந்த ஹரிஷ் நடிக்கிறார். இவர் ‘பாகுபலி’ பிரபாஸின் உறவினர் ஆவார். நாயகியாக அதே தெலுங்கு தேசத்தை சேர்ந்த யாமினி பாஸ்கர் நடிக்கிறார். இவர்கள் இருவருமே தெலுங்குலகில் நடித்துக் கொண்டிருப்பவர்கள். தமிழுக்கு புதிதாக அறிமுகமாகிறார்கள்.
படத்தில் வில்லன்களாக ‘கங்காரு’ படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனதைக் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தாரா, ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்ய, கே.பிரபு ஷங்கர் இசையமைக்கிறார். படத்தின் எடிட்டிங்கை என்.சுதா கவனிக்க, நடனம் அமைத்திருக்கிறார் ஏபி.சந்தோஷ். ஸ்டண்ட் – டேஞ்சர் மணி. படத்தின் எக்ஸிகியூடிவ் புரடியூஸராக சக்ரவர்த்தியும் புரடக்ஷன் மேனஜராக ரகுவும் பணிபுரிந்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.பி.டி.ஏ.குமார்.
தொழிலதிபரான இவர் சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் அசிஸ்டெண்டாக பணிபுரியாமல் இயக்குநராகியிருக்கிறார். இதற்கு முன் இவர் ஷூட்டிங்கைகூட வேடிக்கை பார்த்தது இல்லையாம்.
படத்தின் டைட்டிலுக்கேற்ப இயக்குநர், தயாரிப்பாளர் இருவரும் தங்கள் முன்னோடிகளான தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களையும் தங்கள் இனிஷியலில் சேர்த்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநராக இருந்தாலும் படத்தில் ஒரு பாடல் காட்சியை மட்டும் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் எடுத்து தன் திறமையைக் காட்டியிருக்கிறார் எஸ்.பி.டி.ஏ.குமார். இந்த பாடலை படமாக்க மட்டுமே ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறது படக் குழு. படத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்திருக்கிறது.
எந்தவொரு மனிதனும் பிறக்கும்போதே ரவுடியாக பிறப்பதில்லை. அவன் வளரும் சூழல்தான் அவனை ரவுடியாக மாற்றுகிறது. அப்படி சூழ்நிலையால் ரவுடியாக வளரும் ஒருவன் வேறொரு சூழ்நிலையில் மனம் திருந்தி நல்லவனாக மாற முயற்சிக்கிறான். அவன் முயற்சி வெற்றி பெற்றதா..? இல்லையா…? என்பதை உணர்ச்சிகரமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லும் படம்தான் இந்த ’முன்னோடி’.