full screen background image

46 இடங்களில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் ‘முந்தல்’!

46 இடங்களில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் ‘முந்தல்’!

ஒரு திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் ரிஸ்க் எடுப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், படம் முழுவதையுமே ஆபத்துகள் பலவற்றை கடந்து படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயந்த். இவரது முதல் படமான ‘முந்தல்’ தலைப்புக்கு ஏற்றவாறு பல ரிஸ்க்குகளை முந்தியபடி படமாக்கப்பட்டிருக்கிறது.

ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் (Harvest Moon Pictures) நிறுவனம் சார்பில், டாக்டர்.கே.பாலகுமரன் தயாரித்துள்ள இப்படத்தில் அப்பு கிருஷ்ணா என்ற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ருக்‌ஷா நடித்துள்ளார். இவர்களுடன் நிழல்கள் ரவி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அழகு, ‘மகாநதி’ சங்கர், போண்டா மணி, வெங்கல்ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே.ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார். சாய்சுரேஷ் படத் தொகுப்பு செய்துள்ளார். ஜாய்மதி நடனம் அமைக்க, வெ.மதன்குமார், அண்ணாமலை, தர்மபுத்திரன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள். மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்.

mundhal-poster-2

அடிப்படையில் ஸ்டண்ட் இயக்குநரான ஜெயந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் மட்டும் ஒன்றி, ஒரு சில ஆங்கிலப் படங்கள் என சுமார் 250 படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும், பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியிருந்தாலும், அவரது நீண்ட நாள் விருப்பமான இயக்குநர் கனவு ‘முந்தல்’ படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

புற்றுநோய் விழிப்புணர்வு சம்மந்தமான கருவை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க டிராவல் மற்றும் ஆக்‌ஷன் பார்மட்டில் இப்படத்தை இயக்கியிருப்பதாக கூறிய இயக்குநர் ஜெயந்த், படம் குறித்து நம்மிடையே மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

“எதிலுமே நாம் முன்னோடியாக இருக்க வேண்டும், ஒரு ரயிலைப் பிடிக்க போக வேண்டும் என்றால்கூட, அது கிளம்புவதற்கு முன்பாக சென்றால்தான் பிடிக்க முடியும், அதன் அர்த்தமாகத்தான் இந்தப் படத்திற்கு ‘முந்தல்’ என்று தலைப்பு வைத்துள்ளேன், முந்துதல் என்றால்தான் தமிழ் வார்த்தை என்று நினைப்பார்கள், ஆனால், ‘முந்தல்’ என்பதே சுத்த தமிழ் வார்த்தை.

முதல் பாதி காதல், காமெடி என்று நகரும் படம், இரண்டாம் பாதி முழுவதுமே ஆக்‌ஷல், திரில்லர் என்று நகரத் தொடங்கிவிடும். புதுமுக ஹீரோ, இயக்குநர் என்று இருந்தாலும், கதைக்கு தேவைப்பட்டது என்பதால், கிராபிக்ஸ் எதையும் பயன்படுத்தாமல் காட்சிகளை ஒரிஜனலாக படமாக்கியுள்ளோம்.

படத்தின் முக்கிய கருவே ஓலைச்சுவடிதான். புற்றுநோயை குணப்படுத்தும் சித்த மருந்து தயாரிப்புக்கான பார்முலா ஒரு ஓலைச்சுவடியில் இருக்கிறது. ஆனால், அந்த ஓலைச்சுவடி கம்போடியாவில் பெரும் பாதுகாப்புக்கிடையே உள்ளது. அதனைத் தேடி ஹீரோ செல்கிறார். ஆனால், ஹீரோவிடம் இருந்த அதை கைப்பற்ற மேலும் பலர் கிளம்ப, யாரிடம் அந்த ஓலைச்சுவடி கிடைத்தது, அதை வைத்து என்ன செய்தார்கள், என்பதுதான் கதை.

இந்தப் படத்திற்காக, கம்போடியா, வியட்நாம், பாங்காக், அந்தமான், குலுமணாலி, கேரளா, ராமேஸ்வரம் உள்ளிட்ட மொத்தம் 46 லொகேஷன்களில் இப்படத்தை படமாக்கியுள்ளோம்.

கம்போடியாவில் உள்ள அங்கோலா கோவிலில் தொடர்ந்து 3 நாட்கள் படம் பிடித்துள்ளோம். லொக்கேஷன் பார்ப்பதற்கு மட்டும் 5 நாட்களானது. இதுவரையிலும் எந்தவொரு தமிழ் சினிமாவிலும் இடம் பெறாத அங்கோலா நாட்டின் கோயில் பகுதிகளை இதில் படம் பிடித்திருக்கிறோம்.

மேலும் அங்கோலா கோயிலைத் தவிர்த்து, சில கம்போடியா காடுகளிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அதிலும், விஷ்ணு படுத்தியிருக்கும் சிலையும், அதில் இருந்து தொடங்கும் அருவி ஒன்றில் படமாக்கப்பட்டுள்ள காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறும். 

கம்போடியாவுக்கு செல்லும் ஹீரோவுக்கு கதைப்படி சிக்கல் அதிகம் என்பதால், அவர் தமிழகத்தில் இருந்து கடல் வழியாகவே கம்போடியா செல்வதுபோலவே கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடல் சம்மந்தமான காட்சிகள் படத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளன. அத்தனையும் ஒரிஜனல் காட்சிகள். இப்படத்தில் நடித்த ஹீரோவே டூப் ஏதும் போடாமல் அண்டர் வாட்டர் காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்த ரிஸ்க் அனைத்தும் படத்தை பார்க்கும்போது எங்களுக்கு ரக்ஸ் சாப்பிடுவது போல சாதாரணமாக தெரிகிறது. காரணம், படம் அந்த அளவுக்கு தரமானதாக வந்துள்ளதுதான்..” என்றார் இயக்குநர் ஜெயந்த்.

தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், ’முந்தல்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Our Score