திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் என்றாலே படம் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது நாம் அறிந்ததுதான்..
இதோ அவர்கள் அடுத்து வெளியிட இருக்கும் ‘முண்டாசுப்பட்டி’யும் அதே மாதிரியான கதைதான்..!
‘முண்டாசுப்பட்டி’ என்ற கிராமம்.. அங்கே பல மூட நம்பிக்கைகள் தலைவிரித்து ஆடுகின்றன. அதில் ஒன்று கிராம மக்கள் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது. ஆனால் இதில் ஒரு சின்ன விதிவிலக்கு.. ஒருவர் இறந்து போனால் அந்தச் சடலத்தை மட்டுமே புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்பதுதான்..
பக்கத்து ஊரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் ஹீரோ விஷ்ணுவும், அவர் நண்பன் காளியும் இப்படித்தான் ஒரு சடலத்தை புகைப்படம் எடுக்க ஊருக்குள் வருகிறார்கள். வந்த பின்பு உடனேயே வெளியேற முடியாத ஒரு சூழல்.. புகைப்படக் கலைக்கு வந்த சோதனையா என்றெண்ணி அனைவரையும் புகைப்படமெடுக்க நினைக்கிறார் விஷ்ணு. இதில் அந்த ஊர்க்கார நந்திதாவோட காதலும் சேர்ந்து கொள்ள.. இதில் நடக்கும் குட்டிக் கலாட்டாக்கள்தான் படம்..
முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாகக் கொண்டு படத்தை எடுத்திருக்கிறாராம் இயக்குநர் ராம். குறும்படமாக வெளிவந்தபோதே பலரது கவனத்தையும் ஈர்த்தது இந்தப் படம். குறும்படத்தில் காளிதான் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இதில் ஹீரோவுக்கு நண்பன். “படத்தின் மார்க்கெட் என்ற ஒரு விஷயம் இருக்குல்ல.. அதனாலதான் விஷ்ணு…” என்றார் இயக்குநர். பக்கத்தில் இருந்த காளியும் அதை சிரிப்போடு ஆமோதித்தார். பிழைக்கத் தெரிந்தவர்..!
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இடம் தேடிய கதையை வைத்தே இன்னொரு சினிமா எடுத்துவிடலாம் என்றார் இயக்குநர். 1980-களின் மத்தியில் இந்தக் கதை நடப்பதாக எடுத்திருப்பதால் அதற்கேற்றாற்போன்ற வீடுகள் கொண்ட கிராமத்தை சல்லடை போட்டுத் தேடி கடைசியாக சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அந்த மாதிரியான ஒப்பனையி்லலா வீடுகளைக் கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்..!
தயாரிப்பாளர் சி.வி.குமார் புதிய தயாரிப்பாளர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கிறார். குறும்பட இயக்குநர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தந்து அவர்களிடத்தில் இருந்து சிறந்த ரசனையான படங்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.. வாழ்த்துகள்..!
‘முண்டாசுப்பட்டி’ வரும் ஜூன் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது..!