full screen background image

தமிழ்த் திரையுலகின் மூத்த படைப்பாளியான முக்தா வி.சீனிவாசனுக்கு அஞ்சலி..!

தமிழ்த் திரையுலகின் மூத்த படைப்பாளியான முக்தா வி.சீனிவாசனுக்கு அஞ்சலி..!

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், கதை, வசனகர்த்தா, எழுத்தாளர் என்று பன்முகத் திறன் கொண்ட முக்தா வி.சீனிவாசன் நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

வயது மூப்பின் காரணமாக சமீப ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவாக இருந்த முக்தா சீனிவாசன், தி.நகரில் உள்ள தனது வீட்டிலேயே நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.

தமிழ் சினிமா துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உடன் தொடர்புடைய திரையுலகப் பிரமுகர்களில் இவரும் ஒருவர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் 1929 அக்டோபர் 31-ம் தேதியன்று பிறந்தவர் முக்தா சீனிவாசன். பெரும் சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு வந்தவர்.

1947-ம் ஆண்டு இவர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அன்றிலிருந்து அடுத்த பத்தாண்டுகளில்  1957-ம் ஆண்டுவரையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் வேலை பார்த்தபோது பழம் பெரும் இயக்குநர்களான கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர், எல்லீஸ் ஆர்.டங்கன், டி.ஆர்.சுந்தரம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

மேலும், அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படங்களில் பணியாற்றி வந்த கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., பத்மினி, பானுமதி, கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் என்று பல முன்னணி நாயகர்களுடன் பணியாற்றினார்.

இதற்குப் பிறகு கலைத் துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர்.

MUKTHA-SRINIVASAN

இவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமியுடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் முக்தா சீனிவாசன். கூடவே தெலுங்கில் புகழ் பெற்ற 12 திரைப்படங்களை தமிழில் டப்பிங் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.

‘முதலாளி’, ‘பாஞ்சாலி’, ‘தாமரைக்குளம்’, ‘நாலு வேலி நிலம்’, ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘இதயத்தில் நீ’, ‘பூஜைக்கு வந்த மலர்’, ‘தேன் மழை’, ‘நினைவில் நின்றவள்’, ‘பொம்மலாட்டம்’, ‘நிறைகுடம்’, ‘அருணோதயம்’, ‘தவப்புதல்வன்’, ‘சூரிய காந்தி’, ‘அன்பைத் தேடி’, ’சினிமா பைத்தியம்’, ‘அந்தரங்கம்’, ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘பேரும் புகழும்’, ‘அவன் அவள் அது’, ‘பொல்லாதவன்’, ‘கீழ் வானம் சிவக்கும்’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘தம்பதிகள்’, ‘சிவப்பு சூரியன்’, ‘இரு மேதைகள்’, ‘கோடை மழை’, ‘நாயகன்’, ‘கதாநாயகன்’, ‘வாய்க்கொழுப்பு’, ‘சின்னச் சின்ன ஆசைகள்’, ‘பிரம்மச்சாரி’, ‘ராஜபாண்டி’, ‘பத்தாயிரம் கோடி’, ’சிவப்பு’ என்று தமிழ்த் திரையுலகின் பல முக்கிய திரைப்படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார் முக்தா வி.சீனிவாசன்.

இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தின் மூலம்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தயாரித்து, இயக்கிய ‘சூரியகாந்தி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டது அப்போதைக்கு மிகப் பெரிய பரபரப்பு செய்தி.

கவியரசன் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலான ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது என்பதும், இத்திரைப்படம் ஜெயலலிதாவின் 100-வது திரைப்படம் என்பதும் சிறப்புக்குரியது.

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் உற்ற நண்பரான இவர், ‘அருணோதயம்’, ‘தவப்புதல்வன்’, ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை நடிகர் திலகத்தை நடிக்க வைத்து இயக்கினார். இதில் ‘அந்தமான் காதலியும்’, ‘இமயமும்’ நூறு நாள் ஓடிய திரைப்படங்கள். ‘அந்தமான் காதலி’யின் கிளைமாக்ஸ் காட்சி வசனங்கள் இன்றளவும் மறக்க முடியாதவை. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘பொல்லாதவன்’, ‘சிவப்புசூரியன்’ திரைப்படங்களைத் தயாரித்து, இயக்கியவரும் இவரே.

இன்றளவிலும் உலகின் மிகச் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக ‘டைம்’ பத்திரிகையால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மணிரத்தினத்தின் ‘நாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்ததும் இவருடைய ‘முக்தா பிலிம்ஸ்’தான்.

இந்தப் படத்தின் தயாரிப்பின்போது அதிக பட்ஜெட் காரணமாக படத்தின் இயக்குநரான மணிரத்னம் மீதும் அவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஷ்வரன் மீதும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். நாயகன் படத்தை ஜி.வெங்கடேஷ்வரன் வாங்கி தனது ஜி.வி.பிலிம்ஸ் சார்பில் வெளியிட்டார்.

இது குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்பாக நடிகர் கமல்ஹாசன் கொடுத்த ஒரு பேட்டியில் முக்தா சீனிவாசன் சரியாகப் பணம் கொடுக்காததால் படத்தின் மேக்கிங்கில் தொய்வு ஏற்பட்டதாகச் சொல்லியிருந்தார். இதைப் படித்து கோபமான முக்தா சீனிவாசன் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப் போவதாகச் சொல்லி அவருக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பி வைத்தார்.

1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ உருவாக்கப்பட்டது என்பது தமிழ்த் திரைப்பட உலகத்தின் வரலாறு.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தனது 60-வது பிறந்த தினத்தின்போது குறிப்பிட்ட சில திரையுலகப் பிரபலங்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடமிருந்து ஆசிகளைப் பெற்றார் ஜெயலலிதா. அதில் முக்தா சீனிவாசனும் ஒருவராவார்.

1957-ல் இவர் தனித்து இயக்கம் செய்த முதல் திரைப்படம் ‘முதலாளி’ வெளி வந்தது. அவரது இந்த முதல் திரைப்படமே சிறந்த திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1978-ல் இவர் தயாரித்து, இயக்கி வெளியிட்ட ‘பலப்பரிட்சை’ திரைப்படம் சிறந்த படமாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருதளிக்கப்பட்டது.

1980-ம் ஆண்டி இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் அவள் அது’ திரைப்படம் சிறந்த அறிவியல் பூர்வமான கருத்தை உள்ளடக்கியதற்கான தமிழக அரசின் விருதினை பெற்றது.

1982-ம் ஆண்டில் இவர் இயக்கி வெளியிட்ட ‘கீழ்வானம் சிவக்கும்’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டது.

1982-ம் ஆண்டு இவர் இயக்கி வெளியிட்ட ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.

தமிழக அரசு சிறந்த கலைஞர்களுக்கு வழங்கிய ‘கலைமாமணி’ விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.

muktha-srinivasan-Stills-1

துவக்கக் காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்து வந்த முக்தா சீனிவாசன்,  1963-ம் ஆண்டு முதல் கதராடை அணிந்து காங்கிரஸ்காரராக பவனி வர ஆரம்பித்தார். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தார். அதோடு ஜி.கே.மூப்பனாரின் பள்ளித் தோழர். அவருக்கும் சிறந்த நண்பர் இவர்தான். காமராஜர் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவியை வகித்தவர் முக்தா சீனிவாசன்.

ஜி.கே.மூப்பனார் ‘தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி’யை உருவாக்கியபோது அந்தக் கட்சியிலும் துணைத் தலைவர் பொறுப்பை வகித்தார். இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். இவருடைய இன்னுமொரு மிகப் பெரிய தகுதி.. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் கோஷ்டி சேர்க்கத் தெரியாத தலைவராக இருந்ததுதான்.

இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலை சமாளிக்கவும், விசாரிக்கும் செல்லும் நம்பிக்கை தூதுவராகவும் செயல்பட்டார். காங்கிரஸின் மறைந்த முன்னணி தலைவர்கள் பலருக்கும் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர்.

தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்ட முக்தா சீனிவாசன் துவக்கக் காலத்தில் இருந்தே பெரும் படிப்பாளியாகவும், படைப்பாளியாகவும் இருந்திருக்கிறார். இதன் விளைவாக கதை, வசன எழுத்தாளராகவும் உருமாறியிருக்கிறார். கம்யூனிஸ்ட் அனுதாபியாகவும் இருந்திருக்கிறார்.

இதுவரையிலும் சுமார் 350 சிறுகதைகள், மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும் ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு’, ‘கலைஞர்களோடு நான்’, ‘கதாசிரியர்களோடு நான்’, ‘அறிஞர்களோடு நான்’ போன்ற புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய மிக, மிக முக்கியமான புத்தகத் தொகுப்பு ‘தமிழகம் கண்ட இணையற்ற சாதனையாளர்கள்’ என்ற புத்தகம்தான். இதில் ஐந்து பாகங்களாக தமிழகத்தில் பிறந்து வளர்ந்து சாதனை படைத்த அத்தனை முக்கியப் புள்ளிகளின் வாழ்க்கை வரலாற்றையும் தொகுத்து தந்திருக்கிறார்.

மேலும் காளிதாஸனின் ‘சாகுந்தலம்’, ‘மேகதூதம்’, ‘ருது சம்ஹாரம்’, ‘வடமொழி இலக்கியம்’ போன்றவற்றை தமிழில் மொழி பெயர்த்தும் தந்திருக்கிறார். மாணவர்களுக்கான ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை’யும் எழுதியிருக்கிறார்.

இப்படி தனது கலையுலகப் பணிகளுக்கிடையே இப்படி எழுத்துப் பணியையும் விடாமல் தொடர்ந்து வந்திருக்கும் முக்தா சீனிவாசன், இத்தனை ஆண்டு காலமாய் படிப்பதற்காக அவர் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இரண்டு வீடுகள் தேவைப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தி.நகரில் வைத்தியராமன் தெருவில் இருக்கும் இவரது வீட்டின் கீழேயே ஒரு நூலகத்தைத் துவக்கினார். அதில் தன்னிடமிருக்கும் புத்தகங்களை அடுக்கி வைத்து, வெறும் நூறு ரூபாய் அட்வான்ஸாக கட்டிவிட்டால் போதும். புத்தகங்கை எடுத்துப் போய் படிக்கலாம் என்று புத்தக வாசிப்பை பரவலாக்கினார். பலரிடம் இல்லாத பல முக்கிய நூல்கள்கூட இவரது நூலக்ததில் கிடைத்தன என்பது பெருமைக்குரியது.

பபாசி எனப்படும் தென்னிந்திய நூல் பதிப்பாளர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருக்கும் முக்தா சீனிவாசன் ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் தனது புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டாலில் தினமும் காணப்படுவார். தன்னை சந்திக்க வரும் அத்தனை பேரிடமும் சளைக்காமல் பேசி, கையெழுத்திட்டு தருவார்.

புத்தகங்களை நேசித்தபடியே இருந்த முக்தா சீனிவாசன் கடைசிக் காலத்தில் பல பக்தி இலக்கியங்களை எளிய தமிழில் கொடுக்க முனைந்தார். அவருடைய உடல் நலம் அதற்கு இடம் கொடுக்காதது குறித்து பலரிடமும் பேசும்போது குறைபட்டுக் கொண்டார். ஆனால், வயோதிகத்துக்கே உரித்தான வியாதிகள் பலவும் அவரைத் தொற்றியபோது புத்தகக் கண்காட்சிக்கு மட்டும் அவர் வர தயங்கியதே இல்லை.

ஒரு தயாரிப்பாளராக.. ஒரு இயக்குநராக.. ஒரு கதாசிரியராக.. கடைசியில் ஒரு எழுத்தாளனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வாழ்ந்து சாதித்துவிட்டு, தன்னுடைய 88-வது வயதில் இவ்வுலகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார் பெரியவர் ஐயா முக்தா வி.சீனிவாசன்.

அவருக்கு எமது அஞ்சலிகள்..!

Our Score