full screen background image

மிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்

மிஸ்டர் லோக்கல் – சினிமா விமர்சனம்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரோபோ சங்கர், ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, சதீஷ், ஜான் விஜய், ஹரிஜா, லிசா ஆண்டனி, தாடி பாலாஜி, நக்ஷ்த்ரா, ஷாலு, இயக்குநர் மாரிமுத்து, அனில் முரளி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்.B, இசை – ஹிஃபாப் தமிழா, படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், சண்டை இயக்கம் – அன்பறிவ், ஸ்டில்ஸ் – D.நரேந்திரன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, எழுத்து, இயக்கம் – ராஜேஷ்.M, தயாரிப்பாளர் – கே.ஈ.ஞானவேல்ராஜா, தயாரிப்பு நிறுவனம் – ஸ்டூடியோ கிரீன்.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் சிறையில், திறமையான ஃப்ரென்ச் போலீஸ் கோல்கீப்பரை மீறி கோல் போடுகிறார் மனோகர் என்னும் சிவகார்த்திகேயன். தனது பிளாஷ்பேக்கை ஒரு போலீஸ்காரரிடம் சொல்லத் தொடங்குகிறார். சென்னையில் ஒரு கார் ஷோ ரூமில் வேலை செய்யும் அவரும், அவரது அம்மா ஈஸ்வரி என்னும் ராதிகா சரத்குமாரும், சீரியல் நடிகை செளமியா எனும் நக்ஷ்த்ராவைப் பார்க்க பைக்கில் சென்று கொண்டிருக்கும்பொழுது, ட்ராஃபிக் சிக்னல் பிரச்சனையின் காரணமாக இவர்கள் மீது தவறுதலாகக் காரில் வரும் கீர்த்தனா வாசுதேவன் என்னும் நயன்தாரா மோதி விடுகிறார். மன்னிப்பு கேட்கும்படி சிவகார்த்திகேயன் சொல்ல, தவறு செய்யாத தான் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என நயன்தாரா திமிராக மறுத்துவிட்டுக் கிளம்பிவிடுகிறார்.

நக்ஷ்த்ராவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, படப்பிடிப்புத் தளத்தில் இருந்து கிளம்ப யத்தனிக்கையில், மாங்கல்யம் எனும் அந்த நெடுந்தொடரின் தயாரிப்பாளரான நயன்தாரா அங்கே வருகிறார். நக்ஷ்த்ராவைப் போல் மென்மையாக இருக்கவேண்டும் என்று சிவகார்த்திகேயன் அறிவுறுத்த, நக்ஷ்த்ராவை அந்த சீரியலிலிருந்தே தூக்கிவிடுகிறார் நயன்தாரா. மீண்டும் அந்த சீரியலில் நக்ஷ்த்ராவையே நடிக்க வைக்கும்படி நயன்தாரா அலுவலகத்திற்கே சென்று கேட்கிறார் சிவகார்த்திகேயன். பேச்சுவார்த்தை முற்றிக் கோபத்தில் சிவகார்த்திகேயனை அறைய கையை ஓங்குகிறார் நயன்தாரா. அறைய ஓங்கிய அவரது கையைப் பிடித்துத் தடுத்து, எச்சரித்து விட்டுக் கிளம்புகிறார் சிவகார்த்திகேயன்.

கோபம் கொள்ளும் நயன்தாரா, காவல்துறையினர் மூலம் கைது செய்து தன்னிடம் மன்னிப்புக் கேட்கும்படி நிர்பந்திக்கிறார். சிவகார்த்திகேயனோ மன்னிப்புக் கேட்பதாக மேடையேறி நயன்தாரா மீது கை வைத்தேன் எனச் சொல்லிவிடுகிறார். தனது புகழுக்கு அவதூறு ஏற்பட்டுவிட்டதாக நீதிமன்றம் செல்கிறார் நயன்தாரா. நீதிபதி முன்பு தன் மேல் சாட்டப்பட்ட குற்றத்தை மறுத்து வாதாடும் சிவகார்த்திகேயன், ஒரு படி மேலே சென்று, எப்படி அவர்களுக்கு ‘ஸ்கீம்’ என்றால் என்ன்வொன்று தெரியாதோ அப்படித் தனக்கும் ‘அவதூறு’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என வழக்கு தொடுப்பேன் என்கிறார்.

நீதிமன்றம் சென்றும் ஒன்றும் ஆகவில்லையே என்ற கோபத்தில், சிவகார்த்திகேயன் வேலை செய்யும் கார் ஷோ ரூமை வாங்கி, அவரை வேலையில் இருந்து தூக்கிவிட்டதாக நேரில் வீட்டிற்குச் சென்று அறிவிக்கிறார். வேண்டுமென்றால் டிரைவர் வேலை தருகிறேன் என்கிறார். சிவகார்த்திகெயனும் வேலையில் சேர்ந்ததும், ‘ஐ லவ் யூ’ என்கிறார். அந்த வேலையும் அவருக்குப் போய்விடுகிறது. தங்கையின் மைண்ட்-கேமை விளையாடும் சிவகார்த்திகேயன், தான் நயன்தாராவைத்தான் உண்மையிலேயே காதலிக்கிறோம் எனப் புரிந்து கொள்கிறார். இரண்டாவது முறையாகக் காதலைச் சொல்ல, நயன்தாரா கடுப்புடன் அவ்விடத்தை விட்டுச் செல்கிறார். சிவகார்த்திகேயன் கண் முன்பே நயன்தாரா விபத்துக்குள்ளாகிறார். மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அதன் பின் நயன்தாராவைத் தொந்தரவு செய்யாமல் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சில மாதங்களுக்குப் பின் சிவகார்த்திகேயனைத் தேடி வரும் நயன்தாரா, குடுபத்துடன் பிரான்ஸ் வரும்படி அழைப்பு விடுக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு மட்டும் பாஸ்போர்ட் இருப்பதால் அவரும், நயன் தாராவும் மட்டும் பிரான்ஸ் செல்கின்றனர். நயன்தாரா அவரை ஃப்ரென்ச் போலீஸிடம் திட்டம் போட்டுச் சிக்க வைக்கிறார். நயன்தாரா ஏன் அப்படிச் செய்தார், சிவகார்த்திகேயனின் காதல் என்னானது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சிவகார்த்திகேயன் மிடில் கிளாஸ் இளைஞனாக வருவதாலும், சமாளிக்க ஏதோ ஒரு வேலை இருந்தால் போதும் என்று ஆடல், பாடல், ஃபுட்பால் என வாழ்க்கையில் பெரிய லட்சியமின்றி இருப்பதாலும், மிஸ்டர் லோக்கல் என்ற தலைப்புப் படத்திற்குப் பொருந்துகிறது. சிவகார்த்திகேயன் நன்றாக நடனம் ஆடுகிறார், சண்டை போடுகிறார், டைமிங்கில் நன்றாக நடிக்கவும் செய்கிறார். குழந்தைகளுக்குப் பிடிக்கும்படி பேசவும் செய்கிறார். எல்லாம் இருந்தும், வலுவான திரைக்கதை இல்லாததால், ஏதோ குறையும் உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நாயகனால் காதலிக்கப்பட மட்டும் நயன்தாராவை உபயோகப்படுத்தியுள்ளனர். மன்னன் படம் போல், நாயகன், நாயகி அறிமுகமே மோதலில் தான் தொடங்குகிறது. ஆனால் அதன் பின்னான ஈகோ சண்டைகள் எழ வலுவான காட்சிகளையோ காரணங்களையோ உருவாக்காமல், தொடர்ந்து நயன்தாரா கோபப்பட்டுக் கொண்டே இருப்பதால், கீர்த்தனா வாசுதேவன் என்ற அந்தப் பாத்திரம் மனதில் பதிய மறுக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். நாயகனின் அம்மா கதாபாத்திரங்களில், நகைச்சுவை கைவரப்பெற்ற மூத்த நடிகை ஒருவரை இயக்குநர் ராஜேஷ் நடிக்க வைத்துவிடுவார். நகைச்சுவைக்கோ, சென்ட்டிமென்ட்டுக்கோ அதிக வாய்ப்பில்லாமல் போய்விட்டது அவர் ஏற்றிருந்த ஈஸ்வரி எனும் பாத்திரத்திற்கு. சிவகார்த்திகேயனின் தங்கையாக ஹரிஜா நடித்துள்ளார். அவரது சுட்டித்தனமான முகபாவனைகள் கதாபாத்திரத்திற்குப் பொருந்திவருகிறது.

ஆட்டோ சேகராக யோகிபாபு நடித்துள்ளார். எந்த நகைச்சுவை நடிகரையும் படம் முழுவதும் பயன்படுத்தாமல், வீட்டிலிருந்தால் யோகிபாபு, அலுவலகத்தில் இருந்தால் ரோபோ சங்கரும், சதீஷும் எனப் பிரித்து வைத்துவிட்டார் ராஜேஷ். வயிற்றைப் பதம் பார்க்கும் நகைச்சுவை வசனங்களுக்குப் பெயர் போன ராஜேஷ்க்கு இம்முறை அது சாத்தியமாகவில்லை. என்ன ஆச்சு இயக்குநரே? நகைச்சுவைப் படம் எடுப்பது மிகக் கடினம். அதற்குப் பெயர் போன ராஜேஷ், வசனங்களில் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். சமகால அரசியலை வசனங்களில் பகடியாக்கி இருக்கிறார். பலது ரசிக்க வைத்தாலும், கதையோடு பொருந்தாமல் அவ்வசனங்கள் இடம்பெறுவதால் வயிற்றைப் பதம் பார்க்கத் தவறிவிடுகிறது.

ஹிப்ஹாப் தமிழாவின் இளமைத் துள்ளலான இசையும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் படத்திற்கு உதவி புரிந்துள்ளன. கால்பந்து மைதானத்தில் நடக்கும் சண்டைக் காட்சியில் ஸ்டன்ட் இரட்டையர்களான அன்பறிவ் அசத்தியுள்ளனர்.

படத்தில் எல்லாம் இருந்துமே ஏதோ ஒரு குறை தொடக்கம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகள், வசனங்கள், செண்ட்டிமென்ட் என ஒன்றோடு ஒன்று கதையினோடு பொருந்தாமல் போனதை இயக்குநர் கவனமாகத் தவிர்த்திருக்கலாம். நல்ல நகைச்சுவைப் படமாக வந்திருக்கவேண்டியது, அழுத்தமற்ற திரைக்கதையினால் ஆங்காங்கே சில காட்சிகளில் மட்டும் படம் கவர்கின்றன.

Our Score