கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு காதலைத் தவிர வேறு ஒரு விஷயமும் இல்லை என்பதை தமிழக இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் சினிமாக்களின் வரிசையில் இந்தப் படமும் இடம் பெற்றுள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவரான ஹீரோ ஹரிபாஸ்கர் கல்லூரியில் படிக்கும் பொழுதே, தன்னுடைய சக மாணவியான நாயகி லாஸ்லியாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், லாஸ்லியா அவரை சுத்தமாக விரும்பவில்லை.
கல்லூரியின் கடைசி நாள் தன் மனதில் ஹரி பாஸ்கர் இல்லவே இல்லை என்று சொல்லும் நாயகி அவரை நான் வெறுப்பதாக சொல்கிறார். இதைக் கேட்டு கோபப்படும் ஹீரோ, “இன்னும் சில வருடங்கள் கழித்து என்னை நினைத்து நீ ரொம்ப வருத்தப்படுவ… உன் முன்னாடி நான் ஒரு பெரிய ஆளாக இருந்து காட்டுறேன்”
என்று சவால் விட்டுவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வருகிறார்.
ஹரி பாஸ்கர் இப்போது கல்லூரி படிப்பை முடித்தாலும் அதிகாரப்பூர்வமாக முடிக்காமல் பல அரியர்ஸ்களை கையில் வைத்துக்கொண்டு வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.அவருடைய அப்பா போக்குவரத்து துறையில் வேலை பார்க்கிறார் அவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சின்ன வீட்டில் குடியிருக்கும் அவருக்கு எதிர்காலம் பற்றிய ஒரு சிந்தனையே இல்லை.
இந்த நேரத்தில் ஹீரோ ஒரு நாள் தன்னுடைய நெருங்கிய நண்பரான சாராவின் ஐடியாவின்படி இன்ஸ்டாகிராமில் கிளர்ச்சியூட்டும் வீடியோக்களை பார்ப்பதற்காக ஒரு இடத்திற்கு அப்ளிகேஷன் போடும்போது… தெரியாத்தனமாக அவருடைய தந்தையை படம் பிடித்துவிட இது நேரலையில் இருந்த முகம் தெரியாத அந்த அனானிமஸ் கிரிமினஸலின் வீடியோவில் பதிவாகிவிடுகிறது.
இப்பொழுது அந்த வீடியோ வெளியாகாமல் இருக்க வேண்டும் என்றால் கேட்கின்ற பணத்தை கொடுக்க வேண்டும் என்று அந்த ஹீரோவை அந்த நபர் மிரட்டுகிறார்.
இதனால் உடனடியாக பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும் ஹீரோ, வீட்டு வேலைக்கு செய்ய ஒரு நிறுவனத்தின் மூலமாக ஒரு வீட்டுக்கு வேலை செய்யப் போகிறார். அந்த வீடு லாஸ்லியாவின் வீடு.
அவருடைய அம்மாவும், அப்பாவும் வெளிநாடு போயிருப்பதால் லாஸ்லியா மட்டுமே வீட்டில் இருக்கிறார். எதிர்பாராத சூழலில் இருவரும் சந்தித்துக் கொண்டாலும் பழசை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் லாஸ்லியா அவரை வீட்டுக்குள் அனுமதிக்க… ஹீரோவும் அந்த வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலையை மட்டும் செய்கிறார்.
லாஸ்லியாவை பார்ப்பதற்காக தினந்தோறும் வேலைக்கு போவது போல் ஹீரோ பிலிம் காட்ட பையன் ஏதோ பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதாக அம்மாவும் நினைத்துக் கொண்டு அவருக்குப் பெண் பார்க்கவும் தொடங்குகிறார்கள்.
தொடர்ந்த சந்திப்புகளால் ஹரி பாஸ்கருக்கும், லாஸ்லியாவுக்கும் ஒரு புரிதல் வந்து வீட்டுக்கே வந்து பேசுகின்ற அளவுக்கும், நாயகன் பெண் பார்க்கப் போகும்போது லாஸ்லியாவும் கூடவே வருவது போலவும் ஒரு சூழ்நிலை அமைகிறது.
இந்த நேரத்தில் உதவி செய்யும் பொருட்டு தன்னுடைய அலுவலகத்திலேயே ஹரிபாஸ்கரு வேலை வாங்கி தருகிறார் லாஸ்லியா. இதைத் தொடர்ந்து லாஸ்லியா தன் மீது காதலில் இருப்பதாக தப்பாக நினைத்துக் கொள்கிறார் ஹரிபாஸ்கர்.
ஆனால், லாஸ்லியாவோ தன்னுடன் வேலை பார்க்கும் ராயனை தான் காதலிப்பதாகவும் அவரைத்தான் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்கிறார்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத ஹரி பாஸ்கர் காதல் தோல்வியால் துவண்டு போகிறார். இதனால் அவருடைய வீட்டிலும், அலுவலகத்திலும் பல பிரச்சனைகள் எழுகின்றன.
இதற்குப் பின் என்ன ஆனது? இவர்களது காதல் கல்யாணத்தில் முடிந்ததா? அல்லது தனித்தனியாக திருமணம் செய்து கொண்டார்களா? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
நாயகன் ஹரி பாஸ்கர் youtube-ல் கொஞ்சம் புகழ் பெற்றவர்ய அவரை எதற்காக இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை அவரே பணம் போட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒரு புது ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் ஹரிபாஸ்கரிடம் இருக்கிறது. மிக சிறப்பாகவும் நடித்திருக்கிறார். அல்லது நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்.
லாஸ்லியாவின் காதலை விரும்புவது போல நடிப்பதும், லாஸ்லியாவுக்குப் பிடித்ததுபோல தான் இருக்க வேண்டும் என்று நினைத்து ஹவுஸ் கீப்பிங் வேலையை மனசார ஏற்றுக் கொண்டு செய்வதும்… லாஸ்லியாவின் லவ் யூ என்கின்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு லாஸ்லியா தன்னை காதலிப்பதாக கற்பனை கோட்டையை கட்டிக் கொண்டு காதலில் திளைப்பதுமாக, ஒரு வயதுக்கு வந்த வாலிபன் காதலுக்காக ஏங்கும் இளைஞன் என்ன செய்வானோ… அதை அப்படியே திரையில் தன்னுடைய நடிப்பாக காண்பித்திருக்கிறார் ஹீரோ ஹரி பாஸ்கர்.
எதிர்பார்க்காத தருணத்தில் தோல்வி கிடைத்தவுடன் ஹீரோ அந்த தோல்வியை தாங்க முடியாமல் தவிக்கின்ற பொழுதும்.. தன்னுடைய தாய், தந்தையிடம் இதுவரையில் தவறாக நடந்து கொண்டதற்காக ஒரு மன்னிப்பு கேட்டு சகஜமாக்கி தன் குடும்பத்தை மறுபடியும் ஒரு சந்தோஷ உணர்வு கொண்டு வருவதற்காக அவர் செய்கின்ற சில செயல்களும் “இப்படி ஒரு தம்பிக்கு எப்படி ஒரு நிலைமையா?” என்று நம்மையே இடைவேளைக்கு பின்பு கேட்க வைத்து விட்டார்.
ஹரி பாஸ்கர் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் லாஸ்லியா. அவருக்கு இந்தப் படத்தில் முதன்மையான கதாபாத்திரம். படத்தை மிகவும் தங்கி இருக்கிறார் என்றே. சொல்லலாம். லாஸ்லியாவின் முகம் ரொம்பவும் அழகு அல்ல. அவரும் அழகி அல்ல. ஆனாலும், இந்தப் படத்தின் புதுமுக நடிகருக்காக வேற எந்த நடிகையும் நடிக்க மறுத்து இருப்பார்கள். அதனால் இயக்குநர் லாஸ்லியாவை நடிக்க வைத்து விட்டார். போலிருக்கிறது அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பை கொட்டி இருக்கிறார்.
தான் காதலிப்பதாக நினைத்து தன்னைத் தொடர்ந்து டார்ச்சர் செய்யும் ஹீரோவை நாசுக்காக தவிர்த்து வருவதும், அதற்கு பிறகு ராயனுடன் காதல் திருமணம் ஆகப் போகின்ற சந்தோஷத்தில் தன்னை தவறாக புரிந்து கொண்டிருக்கும் ஹீரோவிடம் தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொல்லும்போதும் ஒரு பக்குவப்பட்ட ஒரு பெண்ணாக நமக்கு காட்சியளிக்கிறார். அந்த இடத்தில் இவரது நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம்.
ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் இளவரசு இன்னொரு பக்கம் படத்திற்கு மிகப் பெரிய பூஸ்ட்டை கொடுத்திருக்கிறார். “இப்படி ஒரு மகனை பெற்றதற்கு..” என்று அவர் சொல்லுகின்ற வசனத்தை இதுவரையில் எத்தனையோ படங்களில் உச்சரித்துவிட்டார். இந்தப் படத்திலும் உச்சரித்து இருக்கிறார் அதோடு அவரை வைத்து நடத்தப்படும் அந்த சின்ன காட்சிதான் அந்தப் படத்தின் முடிச்சு. இந்தக் காட்சியில் நடிக்க இளவரசு எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை அந்த தைரியத்திற்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
தன் மகனை மலை போல நம்பி இருந்த அம்மா தன் மகனின் அத்தனை திருவிளையாடல்களும் தெரிந்த பின்பு எதுவுமே பேசாமல், அமைதியாக உட்கார்ந்திருக்கும்போது என்னமோ நமக்கு அவரைப் பெரிதும் பிடித்துப் போய்விடுகிறது.
அவரை சமாதானப்படுத்துவதற்காக ஹீரோ என்னன்னமோ செய்து, அம்மாவை சிரிக்க வைத்து மறுபடியும் பழையபடி குடும்பத்தை சஜக நிலைமைக்குக் கொண்டு வருவது ஒரு அழகான ஒரு கவிதையான நிகழ்வு. அம்மா கேரக்டரில் நடித்தவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ராயனாக நடித்தவரும், சாராவும் இன்னொரு பக்கமும் படத்தினை மிக அழகாக நகர்த்தி கொண்டு சென்று இருக்கிறார்கள் இதில் அறிவுரை சொல்வதற்காக அவருடைய தங்கச்சி கதாபாத்திரத்தைக் கச்சிதமாக இயக்குநர் பயன்படுத்தி இருக்கிறார்.
தொழில் நுட்பத்திலும் இந்த படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஒளிப்பதிவாளர் குலோத்துங்க வர்மாவின் ஒலிப்பதிவு அவ்வளவு அட்டகாசம். காட்சிகள் அனைத்தும் அவ்வளவு அழகான வெளிச்சத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. நாயகன், நாயகியை கிளோசப் காட்சிகளில் மிக மிக அழகாக படம் பிடித்து காண்பித்து இருக்கிறார். பாடல் காட்சிகளில் மாண்டேஜ் சாட்சிகளையும் மிக அழகாக தொகுத்து வழங்கிய படத்தொகுப்பாளுக்கும் நமது நன்றிகள். அதே சமயம் அந்த மாண்டேஜ் காட்சிகளை வடிவத்தை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
ஓஷோ வெங்கட் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். பாடல்களை இன்னொரு முறை கேட்கலாம் என்று நினைத்தால் நினைவுக்கு வரவில்லை என்பது ஒரு சோகம்தான். ஆனால், பின்னணி இசையை கொஞ்சம் அடக்கி வாசித்து நம்மைப் பெரிதும் தப்பிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
கடந்த கால இயக்குனர்களில் ஒருவரான பி வாசுவின் உதவி இயக்குநரான இந்த படத்தின் இயக்குநர் அருண் ரவிச்சந்திரன், இந்தக் கால இளைஞர்களின் காதல் வாழ்க்கை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை சொல்வதற்காக வந்தவர் காதலை தூக்கிப் பிடித்து அதைப் பின்பற்றுவதில் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு மெச்சூரிட்டியே இல்லை என்பதாக படத்தை முடித்து இருக்கிறார்.
முதலில் இந்த படத்தின் அடிப்படை கதையே, கதை கருவே தவறாக இருக்கிறது கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் காதல் மட்டும்தான் வருமா.. வேற ஒன்றுமே இல்லையா.. ஒரு இளைஞனுக்கு காதலை தவிர வேறு எந்த ஒரு சிந்தனையும் கல்லூரி காலத்தில் இருக்காதா?
பின்பு எதற்காக கல்லூரிக்கு வந்து படிக்க வேண்டும்? இதுபோன்ற சிந்தனைகளையே வளர விடாமல் வெறும் காதலை மட்டுமே சொல்லிக் கொண்டு வருவதில் இருந்த இயக்குநர்கள் என்னதான் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
கல்லூரி படிப்பு முடித்துவிட்டு, அரியர்ஸை முடிக்காமல் சாதாரணமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோவுக்கு, அப்பாவின் பணத்தில் சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒரு குற்ற உணர்வே இல்லாதது போல காட்சிகளை வைத்திருப்பது ஏன் என்றும் தெரியவில்லை.
லாஸ்லியா திடீரென்று தன்னுடைய அலுவலகத்திலேயே ஹீரோவுக்கு விலை வாங்கி தருகிறார். அரியர்ஸை முடிக்காத ஒரு நபருக்கு எப்படி அங்கே வேலை கிடைத்தது என்பது நமக்குத்தான் தெரியவில்லை. ஒருவேளை இயக்குநருக்கு மட்டும் தெரிந்த ரகசியமோ என்னவோ.?
‘லவ் யூ’ என்பதற்கும் ‘ஐ லவ் யூ’ என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக நாயகி சொல்கிறார். லவ் என்ற கஸ்மாலமும் அல்லது கருமாந்திரம் இரண்டுமே ஒன்றுதான் எப்படி இருந்தாலும் அதை உணர்ந்து கொள்பவர்கள், பேசுபவர்கள், எப்படி எதிர்கொள்கிறார்களோ அப்படித்தான் அதனுடைய அர்த்தம் விளங்கும்.
இந்த இரண்டுக்குமே அர்த்தம் தெரியாத அளவுக்கு ஒரு சின்ன பையனாக இருக்கும் இந்த ஹீரோவுக்கு எதுக்கு இந்த காதல் கருமாந்திரம் கல்யாணம் எல்லாம்..?
இப்போது பல இளைஞர்களும், இளைஞர்களும் தாங்களே சம்பாதிக்கின்ற திமிரில் லிவிங் டூ கெதர் என்கின்ற ஒரு மோசமான ஒரு கலாச்சாரத்தை மறைமுகமான விபச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதையும் கொஞ்சம் நியாயப்படுத்துவதுபோல இந்தப் படத்தில் இயக்குநர் சொல்லி இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
லிவிங் டு கெதிரில் சேர்ந்து வாழ்வோம். படிக்காவிட்டால் பிரிந்து செல்வோம் என்பதற்கும் விபச்சாரத்திற்கும் என்ன வித்தியாசம்? எதுவும் இல்லையே? அதை ஏன் இந்த படத்தில் கொண்டு வந்து தெரிவித்து “நான் அப்படி இருந்தேன்; இப்போது இல்லை. அதனால் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்” என்று ராயன் சொல்ல, ஹீரோயின் அதை மறுத்து, “எனக்கு அது பிடிக்காது; என்னிடம் என் சொல்லவில்லை” என்ற அவர் சொல்லிவிட்டு போக… கடைசியாக இப்படி ஒரு குழப்பத்தையும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்.
முதலில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் இப்போது நாட்டில் நடக்கின்ற சின்ன வயது காதல் கசமுசா கலாட்டாக்கள் அத்தனைக்குமே காரணம் சினிமா தான் அந்த சினிமா என்ன சொல்கிறதோ அதைத்தான் அவர்கள் வேதவாக்க எடுத்துக்கொண்டு பெண்கள் பின்னாடியே சென்று தங்கள் காதலிக்காத பெண்ணை கூட தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அது மாதிரியான காட்சிகளை வைப்பதே தவிர்த்து விடுவது இந்த நாட்டுக்கு இதை திரைப்பட இயக்குனர்கள் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
இந்தப் படத்தில் அதை சமாளிப்பது போல.. அதை ஈடு கட்டுவதுபோல… தன் தங்கையிடம் அவளை ஒருதலையாய் காதலித்து பின் தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்தவனை பற்றி ஹீரோ கேட்க அதற்கு ஹீரோவின் தங்கை “ஒருவேளை அவன் உண்மையான காதலனாக இருந்திருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருப்பனான்னு தெரியல” என்று அவர் சுத்தி வளைத்து சொல்வதெல்லாம் ஆபத்தான முயற்சியின் முன் வடிவம்.
எப்படி இருந்தாலும் இந்தப் படம் ஒரு தவறான கதைக் கருவை கொண்டு, தவறான விதத்தில், தவறான கதையை சொல்கிறது என்பதுதான் உண்மை.
முதலில் காதல் எதற்காக வேண்டும் என்பதையும், கல்யாணம் எதற்காக வேண்டும் என்கின்ற புரிதலும் என்ற இளைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும். அட்லீஸ்ட் அவர்களுக்கு தெரியாவிட்டாலும் படம் பண்ணும் இயக்குநர்களுக்காவது தெரிய வேண்டும்.
நாங்கள் சொல்வதுதான் படம். கொடுப்பதுதான் சினிமா. நாங்கள் காதல் படங்களைத்தான் எடுப்போம். அப்போதுதான் தியேட்டர்களுக்குப் பெரும் கூட்டம் வரும். எங்களுக்கும் வசூல் குவியும் என்று சொன்னால், இந்த வியாபாரம் உங்களுக்கு எந்த விதத்திலும், எந்த காலத்தில் பலனளிக்காது என்பதையும் சொல்லிக் கொள்கிறோம்.
RATING : 2.5 / 5









