நடிகை அஞ்சலியை தமிழ்த் திரையுலகம் தேடுகிறதோ இல்லையோ.. அவரைத் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் மு.களஞ்சியம் மட்டும் தேடோ தேடென்று தேடிக் கொண்டிருக்கிறார்.
இயக்குநர் களஞ்சியம் இயக்கிய ‘ஊர் சுற்றிப் புராணம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் திடீரென்று தனது சித்தியுடன் தகராறு செய்து அஞ்சலி தமிழ்நாட்டில் இருந்து எஸ்கேப்பானார். இப்போது அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்து சில தெலுங்கு படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
கூடவே தமிழுக்கு வர இருப்பதை போன்ற செய்திகள் வரவே, அவரைத் தேடி அலுத்துப் போய், களைப்பில் இருக்கும் இயக்குநர் களஞ்சியம் ரொம்பவே சூடாகியிருக்கிறார்.
இது குறித்து அவர் இன்று அளித்திருக்கும் பேட்டியில், “ஊர் சுற்றிப் புராணம்’ன்னு பேர் வெச்சதாலோ என்னவோ, இப்போ அஞ்சலியைத் தேடி ஊர் ஊரா சுத்திக்கிட்டுருக்கேன். போன வருஷம் மார்ச் மாதம் 12 நாட்கள் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் நடித்தார் அஞ்சலி. அதற்கு பிறகு அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டார். நானும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர், கில்டு, பெப்சி, இயக்குனர் சங்கம் என்று புகார் கொடுத்தேன் விடிவுகாலம் வரவில்லை.
அஞ்சலியும் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தை மட்டும் தவிர்க்கிறார். இப்போது அஞ்சலி மீண்டும் தமிழில் நடிக்க வரவிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அப்படி அஞ்சலி திரும்பி கோடம்பாக்கம் வந்து நடிப்பதாக இருந்தால் என் படத்தில் நடித்து முடித்துவிட்டுத்தான் மற்ற படங்களில் நடிக்க வேண்டும். இது பற்றி எல்லா சங்கங்களுக்கும் என் பிரச்சனைகளையும், பணம் முடங்கிக் கிடக்கிற விஷயங்களையும் விளக்கமாக எழுதி கொடுத்திருக்கிறேன்.
முடிவு தெரியவில்லை என்றால் அஞ்சலி நடிக்கிற எந்த படமும் எந்த மொழியிலும் வெளியாக முடியாதபடி நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்க வேண்டியிருக்கும். இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை..” என்று ஆதங்கத்துடன் கூறினார் மு.களஞ்சியம்.
முதல்ல அஞ்சலி சென்னைக்கு டிக்கெட் எடுக்கட்டும். அப்புறமா எந்தக் கோர்ட்டுக்கு போறதுன்னு முடிவெடுக்கலாம் டைரக்டர் ஸார்..!