சில பெரிய இயக்குநர், நடிகர்கள் படத்தை பார்க்கப் போகும்போதே அது பற்றிய ஒரு பிம்பம் நம் மனதில் விழுந்துவிடும். நிச்சயம் நல்ல படமாகத்தான் இருக்கும் என்று நினைப்போம். அவைகளில் பல படங்கள் நம்மை ஏமாற்றியிருக்கும். சில படங்கள் மட்டுமே எதிர்பார்ப்புக்கு ஏற்ப நம்மை மகிழ்வித்ததுண்டு. ஆனால் எந்தவித வியாபார கணக்கிலும் இடம் பெறாத சில திரைப்படங்களும் இப்படித்தான் திடீரென்று சர்ப்ரைஸ் அதிர்ச்சியைக் கொடுக்கும். அதில் ஒன்றுதான் இந்த ‘மொசக்குட்டி’..!
‘சாட்டை’, ‘மைனா’ போன்ற தரமான படங்களைத் தயாரித்திருக்கும் ஷலோம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் மூன்றாவது தரமான படைப்பு இது.
வழக்கமான கதைதான். ஆனால் ட்ரீட்மெண்ட்டில்தான் அசத்தியிருக்கிறார் இயக்குநர். கதாநாயகன் வீரா வழக்கம்போல திருடன்தான். இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் ஓடும் வண்டிகளில் தாவிக் குதித்து உயிரை பணயம் வைத்து கொள்ளையடிக்கும் ஒரு திருடன். இவருடைய உற்ற நண்பன் சென்ட்ராயன். திருடியவைகளை உள்ளூர் பெரியவர் ஜோ மல்லூரியிடம் கொடுத்து அவர் கொடுக்கும் பிச்சைக்காசை வாங்கிப் பிழைப்பை நடத்துகிறார் ஹீரோ.
தூத்துக்குடி செல்லும் ஒரு லாரியில் இருந்து பிரவுன்சுகரை திருடிச் சென்று அவை வெறும் பவுடர் என்று நினைத்து ஊர் முழுக்க விநியோகித்து போதை பவுடரை முகப் பவுடராக நினைத்து பூசிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்கள் இருவரும்.
ஒரு நாள் ஜோ மல்லூரியின் மகளான ஹீரோயின் மஹிமாவுக்கு லவ் லெட்டர் கொடுக்கும் அஸைன்மெண்ட்டோடு ஒருவன் வருகிறான். அவனிடமிருந்து பணத்தைக் கறக்கும் பொருட்டு ச்சும்மா விளையாடுவது போல இரண்டு பக்கமும் பேசி பணத்தைக் கறக்கிறார்கள்.
இது தெரிந்து மஹிமா இவர்களை தன் அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி தனது படிப்பு சம்பந்தமான பிராஜெக்ட்டுகளுக்கு இவர்களை வேலை வாங்குகிறாள். அந்த நேரத்தில்தான் உண்மையான மொசக்குட்டி போலிருக்கும் மஹிமா மீது ஹீரோவுக்கு காதல் வருகிறது.
இந்த நேரத்தில் ஒரு பெரிய அளவிலான கொள்ளையை ஹீரோவும், நண்பனும் செய்கிறார்கள். இது தெரிந்து உள்ளூர் போலீஸ் அலெர்ட்டாக.. கொள்ளையடித்த்தை ஜோ மல்லூரி மதுரைக்குக் கொண்டு சென்று பதுக்கி வைக்க.. இங்கே போலீஸ் ஜோ மல்லூரியின் வீட்டுக்குள் நுழைகிறது. அவரது மகளை இழுத்துச் செல்லும்போது அங்கே வரும் ஹீரோ தான்தான் அந்தக் கொள்ளையைச் செய்த்தாகச் சொல்கிறான். உடனே ஹீரோயினைவிட்டுவிட்டு ஹீரோவை தூக்கிச் சென்று லாடம் கட்டுகிறது போலீஸ்.
இதே நேரத்தில் போலீஸ் ஸ்கெட்ச் போட்டுவிட்டதை அறிந்து பயந்து போன ஜோ மல்லூரி வேறு நபர்கள்தான் கொள்ளையடித்ததாகச் சொல்லி அவர்களையும் போலீஸில் சரணடைய வைக்கிறார்.
இதே நேரம், ஜோ மல்லூரியின் வீட்டில் பெரிய கலவரமே நடக்கிறது. ஊரே சுற்றி வேடிக்கை பார்க்க.. இனிமேல் திருட்டுத் தொழில் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய். இல்லையானால் நான் தீக்குளித்துவிடுவேன் என்று மிரட்டுகிறார் ஜோ மல்லூரியின் மனைவி. வேறு வழியில்லாமல் இதனைக் கைவிடுவதாக ஜோ மல்லூரி சொல்லும் நேரத்தில் ஹீரோவும் நண்பனும் அங்கே வருகிறார்கள்.
அவர்களைப் பார்த்து ஜோ மல்லூரியின் குடும்பத்தினர் திட்டத் துவங்க.. ஜோ மல்லூரியும் “இனிமேல் இங்கே வர வேண்டாம். நீங்க திருட்டுப் பசங்க..” என்கிறார். இதைக் கேட்டு கோபமாகும் சென்ட்ராயன் “நாங்க திருடி கொண்டு வந்த காசுலதான நீ இப்படி வீடு கட்டியிருக்க.. பணக்காரனாயிருக்க..?” என்று பழைய கதைகளையெல்லாம் எடுத்துக் கொடுக்க இப்போதுதான் ஹீரோயினுக்கு தன் அப்பாவின் சம்பாத்தியம் எங்கேயிருந்து வந்தது என்று தெரிகிறது. திடீரென்று எழுந்து ஹீரோவிடம் செல்லும் ஹீரோயின் தன்னையும் அழைத்துச் செல்லும்படி செல்ல.. அங்கே நண்பர்களுக்கு மண்டகப்படியே நடக்கிறது..
தொடர்ந்து ஹீரோவை கொலை செய்ய ஜோ மல்லூரி ஆட்களை ஏற்பாடு செய்ய.. அந்தக் கொலை முயற்சியில் ஹீரோவை கொல்ல முடியாவிட்டாலும் ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் தங்க வேண்டியதாகிவிட்டது.. சிகிச்சை முடிந்து ஊருக்குத் திரும்ப எத்தனிக்கும்போது ஊரில் ஹீரோயின் இல்லையென்றும், அவர் கேரளாவில் இருக்கும் அவளுடைய சித்தப்பாவின் வீட்டிற்கு போயிருப்பதாகவும் செய்தி வர.. ஹீரோ கேரளா சென்று தனது காதலியை மீட்க முடிவெடுக்கிறார். மீட்டாரா இல்லையா என்பதுதான் தொடரும் கதை.
படத்தில் ‘மொசக்குட்டி’ கேரக்டரில் நடித்திருக்கும் ஹீரோ வீராவுக்கு இது முதல் படம் என்றே சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார். ரவுடிகளுக்கேற்ற முக பாவனையும், உடல் மொழியுடன் கச்சிதமாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகள், நடனக் காட்சிகளிலும் பல படங்களில் நடித்த அனுபவத்துடன் நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.. வசன உச்சரிப்புகள் அனைத்தும் ‘பருத்திவீரன்’ ஸ்டைலில் இருந்தன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். திண்டுக்கல், மதுரை வட்டார மொழி என்பதால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டாராம் இயக்குநர்.
ஹீரோயினாக சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த மஹிமா. இதில் கல்லூரி மாணவி. ஆனால் பாடல் காட்சிகளில் மிகவும் சின்னப் பெண்ணாகத் தெரிவது ஒரு குறை. ஆனால் நடிப்பில் குறைவில்லை.. “எங்கப்பாகிட்ட இருக்குற சொத்துக்கள்ல ஒண்ணுக்கு மட்டும்தான் உசிருக்கு. அது நான்தான். என்னைய எடுத்துக்க..” என்று படத்தின் டர்னிங் பாயிண்ட் சீனில் குறைவில்லாமல் நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ‘ல’, ‘ழ’-கரங்களை உச்சரிக்கும் பாவனையுடன் நடித்திருப்பது படத்திற்கு சிறப்பு. அதிலும் குறையில்லை..
சென்றாயன். ஹீரோவின் நண்பன். சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். பல இடங்களில் காட்சிகளை நகர்த்த உதவியிருக்கிறார். விருமாண்டியாக நடித்திருக்கும் ஜோ மல்லூரியும் படத்திற்கு ஒரு தூண்.. வில்லனா.. நல்லவரா.. என்கிற குழப்பத்தையே முதல் சில காட்சிகளில் காட்டியிருக்கிறார்.
பசுபதியை மிக நீண்ட நாட்கள் கழித்து திரையில் சந்திக்கிறோம். நல்லவர் மாதிரியான கெட்டவர். கேரளாவில் இடுக்கி மலைப் பகுதிக்கே காட்பாதர் இவர்தானாம்.. அவர்களுக்காக கொலையும் செய்யத் துணியாதவர். இது ஒன்றுதான் இடிக்கிறது.. இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் கொலைகளை சர்வசாதாரணமாகச் செய்து மறைப்பதெல்லாம் முடியிற காரியமா..?
கொஞ்சம் காமெடிக்கு எம்.எஸ்.பாஸ்கர்.. டைமிங்சென்ஸில் மனுஷனை அடிச்சுக்க முடியாது போலிருக்கு.. தமிழும், மலையாளமும் கலந்தடித்திருக்கிறார். இவருக்கும் பசுபதிக்கும் என்ன பிரச்சினை..? இவர் யார் என்பதையெல்லாம் கொஞ்சம் சேர்த்து சொல்லியிருந்தால் இன்னமும் அதிகமாகவே ரசித்திருக்கலாம்..!
ஒளிப்பதிவும், இசையும்தான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். இடைவேளைக்கு பின்பு முழுக்க முழுக்க கேரளா பகுதியில்தான் ஷூட்டிங் என்பதால் மைனா சுகுமாரின் கேமிராவுக்கு நிறைய வேலைகள் கிடைத்திருக்கிறது. பசுபதியின் வீட்டு அமைப்பு துவங்கி.. இடுக்கி வட்டார மலைப்பகுதியை இண்டு இடுக்குவிடாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ரமேஷ் விநாயகத்தின் இசையில் அனைத்து பாடல்களுமே கேட்கும் ரகம். ஒரு திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே கேட்கும்படியாக இருப்பது இந்த வருடத்தில் இந்தப் படத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறோம். பாடல் காட்சிகளைகூட மிக ரசனையாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். கள்ளப் பயலே.. வாடா டேய் பாடல் காட்சிகளை உதாரணமாகச் சொல்ல்லாம்.. அதே போல முதல் பாடலான ஒத்தையிலே பாடல் காட்சியை படமாக்கியவிதத்தில் ஒளிப்பதிவாளருக்கும், இயக்குநருக்கும் ஒரு பூங்கொத்து பார்சல்..! புதுமையான படமாக்கம்..!
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் எழுதி இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.ஜீவன் தனது இறுக்கமான இயக்கத்தினால் படத்தை கட்டிப் போட்டிருக்கிறார். இயக்கம் சிறப்பாக இருந்ததினால் நடித்தவர்கள் சோடை போகவில்லை.. திரைக்கதையில் மட்டுமே சில ஓட்டைகள் இருப்பினும் படத்தின் முற்பாதி வேகத்தில் அது பெரிதாகத் தெரியவில்லை.
ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய செய்திகளைக்கூட திரைக்கதையில் நைச்சியமாக திணித்திருப்பதற்கு பாராட்டுக்கள். வீரா தனக்குத்தான் திருமணமோ என்றெண்ணி மணமேடையில் அமர்ந்திருக்க அப்போது நடக்கும் டிவிஸ்ட் நினைத்திராதது. மாப்பிள்ளையின் அப்பாவான அந்த ஐயர் நொடியில் தனது எண்ணத்தை மாற்றுவதும் பலே நகைச்சுவை.. அசத்தல் திரைக்கதை..!
செல்போனில் ஆங்கிலத்தில் செய்தியனுப்ப தெரியாதவர்கள் வரும் செய்திகளை மட்டும் எப்படி படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.. கேரளாவில் மரத்தில் ஜீப்புடன் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை ஹீரோ தனியாளாகக் காப்பாற்றுவது என்பது காதில் பூச்சுற்றும் வேலை. இதனைலேயே பசுபதிக்கு அவர் மீது பாசம் அதிகமாகவும், வீட்டுக்குள் உட்கார்ந்து சாப்பிடும் சூழலை ஏற்படுத்துவதும் திரைக்கதைக்காக அமைக்கப்பட்ட சீனோ என்று சந்தேகப்பட வைக்கிறது..
இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே படத்தை முடித்துவிட்டதால் அநாவசியமாக கதையை எந்தப் பக்கமும் திசை திருப்பாமல் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸில் ஏற்பட்டிருக்கும் சொதப்பல்தான் படம் சூப்பர் என்று சொல்ல முடியாமல் செய்துவிட்டது.. என்னதான் ‘பேட்மேன்’, ‘ஸ்பைடர்மேன்’ என்ற ஹீரோக்களை உதாரணம் காட்டினாலும் தமிழில் இப்படியொரு காட்சியை வைப்பதற்கு முன் யோசித்திருக்கலாம்..
திருடும்போது செய்கின்ற அதே வித்தையை ஹீரோயினுடன் தப்பிச் செல்லும்போது செய்து காட்டுவது ஒரு திரில்லிங்காக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இது போன்ற காதல் படங்களுக்கு அது உணர்வைத் தராது. ‘மைனா’ படத்தின் இறுதியில் தந்த உணர்வு ஒன்றைத்தான் இந்தப் படம் பார்வையாளர்களுக்கு தரவில்லை. இது நிச்சயம் இயக்குநரின் தவறுதான். இது ஒன்று மட்டும் இருந்திருந்தால் மூன்றாவது ஹிட் படம் என்ற பெயர் தயாரிப்பாளருக்குக் கிடைத்திருக்கும்..! ஜஸ்ட் மிஸ்ஸிங்..!
ஆனாலும் அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்..!