full screen background image

முத்தம் பிடிக்கலைன்னா கண்டுக்காம போயிருங்க – முத்த எதிர்ப்பாளர்களுக்கு நடிகர் மோகன்லாலின் அட்வைஸ்..!

முத்தம் பிடிக்கலைன்னா கண்டுக்காம போயிருங்க – முத்த எதிர்ப்பாளர்களுக்கு நடிகர் மோகன்லாலின் அட்வைஸ்..!

கொச்சியில் கடந்த வாரம் நடந்த முத்தப் போராட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து மக்கள் கட்சி என்று இந்து மதம் சார்ந்த அமைப்புகளின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளன.

மேலும் இன்றைக்கு கோவையில் ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் இந்த முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக செய்திகள் வர.. அங்கேயும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு கோஷங்களுடன் திரண்டு வந்திருக்கின்றனர்.

ஆனால் போலீஸார் அந்த முத்தப் போராட்டத்திற்கு கடைசி நிமிடத்தில் அனுமதி அளிக்க மறுத்துவிட்டு அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸையும் மூடும்படி சொல்லிவிட்டார்கள். இதனால் முத்தக் காட்சிகளை பார்க்க திரண்டு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் இந்த முத்தப் போராட்டம் சரியா, தவறா என்ற சர்ச்சையைக் கிளப்பி வரும் வேளையில் நடிகர் மோகன்லால் இந்த முத்த கலாச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

“பொதுமக்கள் தினமும் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அது பற்றியெல்லாம் அரசியல்வாதிகள் அக்கறை காட்டுவது இல்லை. கலாச்சாரத்தை காப்பாற்றுவதாகக் கூறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். சில அமைப்புகளும் இதில் தங்களை இணைத்து கொள்கின்றன.

மாணவர்களும், மாணவிகளும் பேசி கொள்வதற்கு தடை விதிப்பது சரி அல்ல. அதே நேரம் முத்தப் போராட்டம் என்ற பெயரில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனால் யாருக்கு என்ன பயன்?

ஆண், பெண் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. நட்பு, அன்பு, சகோதர பாசம், தாய்–மகன் உறவு என எத்தனையோ பாச உறவுகள் உள்ளன. அவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், இதில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசியல் கட்சிகள் அக்கறை காட்டவில்லை. இது போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக போராட வேண்டும்.

முத்தமிடுவதும், முத்தமிடாமல் போவதும் அவரவர் உரிமை. ஆனால், என் பார்வையில், நீ முத்தமிடக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஒருவேளை இது போன்ற காட்சிகளை பார்ப்பவர்களுக்கு அது, அநாகரீகமாக தெரிந்தால் அவர்கள் அந்த இடத்தைவிட்டு விலகிப் போய் விடலாம். இதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கும்…” என்று எழுதியிருக்கிறார் மோகன்லால்.

ஆக.. மோகன்லாலும் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

முத்தங்களை யாரும், யாருக்கு வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம். இதனை யாரும், யாருக்கும் தடை போட முடியாது. ஆனால் பொது இடங்களில் அதனைச் செய்ய வேண்டாம் என்றுதான் சிலர் சொல்கிறார்கள். இதுல குழந்தைகள் மற்றும் இளம் பிராயத்தினர் மத்தியில் கவனச் சிதறல் ஏற்படுமே என்று கவலைப்படுகிறார்கள் எதிர்ப்பாளர்கள்.. இதிலொன்றும் தப்பில்லையே..?

Our Score