தமிழ் சினிமாவில் இப்போது பேய்களின் காலம். மனிதர்களை காட்டி, காட்டியே போரடித்து பேய்களோடு மாரடித்துக் கொண்டிருக்கிறா்கள் இயக்குநர்கள்..!
‘யாவரும் நலம்’, ‘இருக்கு ஆனா இல்ல’ போன்ற படங்களின் தொடர்ச்சியாக ‘மூச்’ என்றொரு படமும் இப்போது தயாராக இருக்கிறது..
கிரேட் B புரொடெக்சன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த வினுபாரதி இயக்கியிருக்கிறார். நித்தின், மிஷா கோஷல் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர்.
இரு குழந்தைகளிடம் பாசம் காட்டிப் பழகிவிட்டு அவர்களை பிரிய முடியாமல் தவிக்கும் ஒரு பேய்க்கும், அந்த குழந்தைகளின் அம்மாவுக்கும் நடக்கும் பாசப் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதையாம்..
படத்தில் பாரதிராஜாவின் தம்பியான ஜெயராஜ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பே இவர் ‘கத்துக்குட்டி’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
“பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து கொண்டு உங்களுடைய முதல் படத்தை பேய் படமாக எடுத்திருக்கிறீர்களே..?” என்று கேட்டபோது, “எல்லாருமே இதைத்தான் கேட்டாங்க.. இந்தக் கதை ரொம்ப வருஷமா என் மனசுக்குள்ள நின்ன கதை.. முதல் முதல்லா படத்தை இயக்குகிறோம்ன்னு நினைச்சப்ப மனசைவிட்டுப் போக ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சிருச்சு.. அதான் இதையே எடுத்திரலாம்னு முடிவு பண்ணி்டடேன்..” என்கிறார் இயக்குநர்.
தனது தம்பியை நடிக்க வைப்பது பற்றி தெரிந்தவுடன் பாரதிராஜா “ஏன்யா என்னையெல்லாம் நடிக்க கூப்பிடல?” என்று உரிமையோடு கோபித்துக் கொண்டாராம்.. “அடுத்த படத்துல நீங்க இருக்கீங்கன்னு சொல்லி அந்தக் கதையையும் அவர்கிட்ட சொல்லி கூல் செஞ்சேன்..” என்கிறார் வினுபாரதி.
குன்னூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பம், மற்றும் சென்னையில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
படத்தின் டிரெயிலரை பார்க்கும்போது மிரட்டலாகத் தெரிகிறது.. ஒரு வீட்டுக்குள்ளேயே பேய்களோடு வாழும் குழந்தைகளை வைத்து ஒரு தம்பதிகள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை பயமுறுத்தும்விதமாக காட்டினார்கள்..!
இதே ஸ்பீடு முழு படத்திலும் இருந்தால் நிச்சயம் இந்தப் படம் பேசப்படும்..!