full screen background image

“என் கதையைக் காப்பியடித்துவிட்டார்” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது எழுத்தாளர் அஜயன் பாலா புகார்

“என் கதையைக் காப்பியடித்துவிட்டார்” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது எழுத்தாளர் அஜயன் பாலா புகார்

கதையைக் காப்பியடிப்பது சினிமாவில் என்றில்லை; இப்போது ஓடிடிக்கான திரைப்படங்களிலும் வந்துவிட்டது.

அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேற்றைக்குத்தான் 5 இயக்குநர்கள் இயக்கிய அந்தாலஜி திரைப்படமான புத்தம் புதுக் காலை’ வெளியானது.

வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாக “அந்த ஐந்துக் கதைகளில் ஒன்றான ‘மிராக்கிள்’ என்ற குறும்படத்தின் கதை என்னுடையது….” என்று போர்க் கொடி தூக்கியிருக்கிறார் பிரபல திரைப்பட வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அஜயன் பாலா.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “நேற்று நண்பர் இலங்கைவேந்தன் போன் செய்து உடனே அமோசானில் ‘புத்தம் புதுக் காலை’ படம்  பாருங்க” என பதட்டத்துடன் சொன்னார். ‘என்ன…?’ என கேட்டபோது அவர் சொன்ன தகவல் ஷாக்கா இருந்தது.

அதில் கடைசியாக வரும் மிராக்கிள்’ படம் அப்படியே நான்  நடிக நிலம் நடிப்பு பயிற்சி மாணவர்களுக்காக கடந்த வருட இறுதியில் உருவாக்கி கொரானாவால் போஸ்ட் ப்ரொட்க்‌ஷன் தாமதமாகி கடந்த மாதம் யூட்யூபில் வெளியான என்னுடைய ‘சச்சின் கிரிக்கட் கிளப்’ குறும் படம். ‘இந்தக் கதையை  அப்படியே சுட்டுவிட்டார்கள்’ என்றார் அவர்.

நானும் இரவே அந்தப் படத்தைப் பார்த்தேன். என் கதையில் பத்து பேர்.. அவர்கள் கதையில் இரண்டு பேர். கதைக் களம் என்னுடையதில் பகல். அவர்களுடையதில் இரவு.

மத்தபடி ‘பேராசை; பெரு நட்டம்’ என்னும் என் கதைக் கருவும், பணத் தேவைக்காக தவறு செய்யப் போய் இருக்கும் பணத்தை கோட்டை விடுவதுமான கதை அமைப்பும்… இறுதியில் ‘டம்மி பணம்’ என்னும் கதையின் முக்கிய திருப்பம், கிளைமாக்சாக அமைந்திருப்பதும் அப்படியே இருக்கிறது. 

படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா என் நட்பு வட்டத்தில் இருப்பவர். 12 வருடங்களாய் என்னிடம் நெருங்கிப் பழகியவர். இதை  சட்டப்பூர்வமாய் எதிர்கொள்ள வழி இருக்கிறதா  தெரியவில்லை.

ஒரு குறும் படத்தின் முக்கிய தகுதியே அதன் தனித்த  ஐடியாதான். இருபது வருடங்களாய் போராடியும் ஒரு படத்தினை இயக்க முடியவில்லை. சரி, ஒரு குறும் படமாவது எடுக்கலாம் என்று பார்த்தால், அதையும் இப்படி காப்பியடித்து ஓ.டி.டி.க்கு விற்று லாபம் சம்பாதிக்கும்  அளவுக்கா தமிழில் கதை பஞ்சம் ஏற்பட்டுள்ளது..?

எத்தனையோ சிறுகதைகள் கொட்டிக் கிடக்கின்றன.. எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளனின் கதையை முறையாக வாங்கிப் பயன்படுத்தும் எண்ணம் வருவதில்லை. இது சினிமாவுக்கும் ஆரோக்கியமானதல்ல.

சரி.. சுட்டதுதான் சுட்டார்களே… அதற்கு ஒழுங்காகவாவது திரைக்கதை அமைத்தார்களா..? அதுவும் இல்லை.. ஒரு டயரை திருடப் போகும் வீட்டிலும் சுமந்து செல்லும் லாஜிக் இல்லாத மொக்கை காட்சிகளையெல்லாம் ஒரிஜினலாக சிந்திக்கும் படத்தில் வரவே வராது…” என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜயன் பாலா எழுதிய கதையான ‘சச்சின் கிரிக்கெட் கிளப்’பில் இருக்கும் 10 கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய அணியில் இருக்கும் சக தோழரின் குடும்பத் தேவைக்காக 10 லட்சம் ரூபாயை கடனாகப் பெற முடிவு செய்கிறார்கள். ஆளுக்கு 1 லட்சம் போட்டால் 10 லட்சமாகிவிடுமே என்றெண்ணுகிறார்கள்.

ஆனால் இவர்கள் செல்லும் வழியில் மயங்கிக் கிடந்த ஒருவரின் கைப்பையில் இருக்கும் பணத்தைப் பார்த்தவுடன் இவர்கள் மனம் மாறி அந்தப் பணத்தைக் கையாடல் செய்கிறார்கள். கடைசியில் பார்த்தால் அது சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் டம்மி ரூபாய் நோட்டுக்கள்.

‘மிராக்கிள்’ கதையில் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல்.. பிரியாணி சாப்பிட ஆசைப்படுகிறார்கள் பாபி சிம்ஹாவும் அவரது தோழரும். அதே நேரம் ‘ரவுடி லேடி’ என்னும் திரைப்படத்தைத் துவக்கிய ஒரு தயாரிப்பாளர் படத்திற்கு பைனான்ஸ் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

பாபி சிம்ஹா கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் ஒரு காரை தனது நண்பனுடன் இணைந்து சோதனையிடுகிறார். எதுவும் கிடைக்கவில்லை. சரி.. வந்தது வந்துவிட்டோம். காரின் டயரையாவது விற்றால் பணம் கிடைக்குமே என்றெண்ணி.. டயரைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

வரும் வழியில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியைப் பார்த்து அங்கேயிருக்கும் லேப்டாப்புகளை திருட முயற்சிக்கிறார்கள். ஆனால் அந்த நிறுவனம் அந்தத் தயாரிப்பாளரின் சினிமா அலுவலகம். தயாரிப்பாளர் பணம் கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு மயக்க நிலையில் உள்ளார்.

இந்த நேரத்தில் அலுவலகத்தில் நுழையும் பாபி சிம்ஹாவின் கண்களில் மூட்டை, மூட்டையாக பணம் தென்படுகிறது. தாங்கள் கொண்டு சென்ற டயரை அங்கயே விட்டுவிட்டு அந்தப் பண மூட்டையைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள் பாபி சிம்ஹவும் அவரது நண்பனும்.

மறுநாள் காலையில் தயாரிப்பாளரின் அலுவலகத்தில் கீழே விழுந்து மோதியதால் பாபி சிம்ஹா விட்டுச் சென்ற டயரில் விரிசல் ஏற்பட்டு உள்ளேயிருந்து பணக்கட்டுகள் வெளியே தெரிகின்றன. தயாரிப்பாளர் டயரைப் பிரித்துப் பார்க்க.. 2000 ரூபாய் நோட்டுக்களாக இருக்கின்றன. இதை வைத்தே படத்தை எடுத்து முடித்துவிடுவேன் என்று சந்தோஷப்படுகிறார் தயாரிப்பாளர்.

அதே நேரம் தயாரிப்பாளரின் வீட்டில் இருந்து சுட்ட லேப்டாப்பில் ஸ்கிரீன்சேவராக அவரது படத்தின் போஸ்டர் தெரிகிறது. அந்தப் போஸ்டரில் பணக் கட்டுக்கள் தெரிய வர… டம்மி நோட்டுக்களை வைத்து போட்டோ எடுத்து போஸ்டரில் காட்டியிருக்கிறார்கள் என்பதை பாபி சிம்ஹாவும், அவரது நண்பரும் புரிந்து கொள்கிறார்கள். அவர்களிடத்தில் இருக்கும் நோட்டுக்களும் டம்மி நோட்டுக்கள் என்பது அப்போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது.

இந்த இரண்டு கதைகளுக்கும் இருக்கும் அடிப்படை ஒற்றுமை.. திருடப் போய் கிடைக்கும் பணம் டம்மி நோட்டுக்களாக இருப்பதுதான்..!

கார்த்திக் சுப்புராஜ், நீங்களே இப்படி செய்யலாமா.. அஜயனின் கதையையே வாங்கி விரிவாக்கியிருக்கலாமே..!?

Our Score