full screen background image

பெண் காவலர்களின் பிரச்சினையை பற்றிப் பேசும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படம்

பெண் காவலர்களின் பிரச்சினையை பற்றிப் பேசும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படம்

‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்த ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் மூன்றாவது திரைப்படம் ‘மிக மிக அவசரம்’.

இந்தப் படத்தின் கதையின் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ் குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் E.ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், ‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவண சக்தி,  வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன், காவேரி மாணிக்கம், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – பாலபரணி, கலை இயக்கம் – பாலமுருகன், கதை, வசனம் – கே.பி.ஜெகன், தயாரிப்பு, இயக்கம் – சுரேஷ் காமாட்சி.

மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும்  தன் உரிமைக்காகவும்,  மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் / பெண் காவலர்களும்  தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள். அவ்வாறு அடித்து விரட்டிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக் கூடும்..!

‘மதுக் கடை வேண்டாம்’ என்று மாரிலடித்து போராட்டம் நடத்திய ஒரு பெண்ணின் கன்னத்தில் ‘பளார்… பளார்’ என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் கிடைக்கிறது. அதே இடத்தில் தாய்மார்கள் பலரையும் ஆண் / பெண் போலீஸ்  அடித்து விரட்டியது. அடி வாங்கிய தாய்மார்களில் அடித்தவர்களின் சொந்தக்காரர்களும் இருந்திருக்கக் கூடும்.

இதில் மறுக்க முடியாத, வீதிக்கு வராத உண்மைகள் நிறைய உண்டு. பார்க்கும் வேலையைத் தக்க வைக்க துரத்தி அடித்துவிட்டு, ‘என் உறவை அடிக்கவா காக்கிச் சட்டை போட்டேன்’ என்று அன்றைய இரவு உறக்கம் தொலைத்த காவலர்களும் உண்டு.

காக்கிச் சட்டையைக் கழட்டும்போது மனசையும் சேர்த்து கழட்டிப் போடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம்தான். அவர்களை அடையாளம் காண காக்கிச் சட்டை போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை…! உறவுகளை நேசிக்கத் தெரிந்த மனிதனாக இருந்தால் மட்டும் போதும்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து ‘மிக மிக அவசரம்’ படத்தின் கதையை செதுக்கியுள்ளார். காவலர்களுக்கும் மனிதாபிமானம், சொந்த மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும், வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது.

அதிலும் பெண் காவலர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், ஒரு சொட்டு கண்ணீருடன் இந்த படம் உண்மையை பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள். காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கு  இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி. 

Our Score