full screen background image

மிடில் கிளாஸ் – சினிமா விமர்சனம்

மிடில் கிளாஸ் – சினிமா விமர்சனம்

பணக்காரர்களும், மிகப் பெரும் வசதி படைத்தவர்களும் வாழும் இந்த உலகில் அதிகம் பேசப்படாத இந்தியாவின் மிடில் கிளாஸ் ஹீரோக்களைப் பற்றி பேச வந்திருக்கிறது இந்த ‘மிடில் கிளாஸ்’ என்ற புதிய திரைப்படம்.

இந்தப் படத்தில் ‘மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனீஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதாரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல.ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம்: கிஷோர் முத்துராமலிங்கம், தயாரிப்பு: தேவ் மற்றும் கே.வி.துரை, ஒளிப்பதிவு: சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், இசை: ப்ரணவ் முனிராஜ், படத்தொகுப்பு: சான் லோகேஷ், கலை இயக்குநர்: MSP மாதவன், சண்டைப் பயிற்சி: டான் அசோக், ஆடை வடிவமைப்பாளர்: ஜே. நந்தா, ஒப்பனை: வினோத் சுகுமாறன், ஒலிக்கலவை: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், விஎஃப்எக்ஸ்: ரெசோல் எஃப்எக்ஸ், டிஐ: வர்ணா டிஜிட்டல் ஸ்டுடியோ, மார்க்கெட்டிங் & புரோமோஷன் மேற்பார்வை: கேவி மோதி & DEC, பப்ளிசிட்டி டிசைன்ஸ்: வியாகி, சட்ட ஆலோசனை: எம்.வி.பாஸ்கர்.

மாதத் தவணை, தள்ளுபடி, 2 பெட்ரூம் வீடு பற்றிய கனவு என நகைச்சுவை, எமோஷன்ஸ் என பல விஷயங்களை கொண்டது மிடில் கிளாஸ் வாழ்க்கை. இந்தப் படம் வெறும் கதை மட்டுமல்லாது, ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பார்த்து, சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டு, வீட்டுக் கடனைவிட அதிக சுமையாய் இருக்கும் மாதத் தவணை என மிடில் கிளாஸ் வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி பேசுகிறது. பார்வையாளர்கள் பலரின் வாழ்வையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் படம் உருவாகியுள்ளது.

கதையின் நாயகனான முனீஸ்காந்த் ஒரு சாதாரண நிறுவனத்தில் பணியாற்றும் மிடில் கிளாஸ் மாதவன். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு பிள்ளைகள். இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள்.

முனீஸ்காந்தின் மனைவி விஜயலட்சுமி எப்படியாவது பணம் சம்பாதித்து சென்னையிலேயே கொஞ்சம் பெரிய வீடாக வாங்கிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

முனீஸ்காந்துக்கோ தன்னுடைய சொந்த ஊருக்கே திரும்பி போய் அங்கே ஒரு விவசாயி நிலத்தை வாங்கி விவசாயம் செய்து, சின்ன வீடு கட்டி நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

முனீஸ்காந்தின் சம்பளம் வீட்டு செலவுகளுக்கே போதுமானதாக இருந்தாலும் பட்ஜெட்டில் அவ்வப்பொழுது துண்டு விழுகிறது. அந்த துண்டு பட்ஜெட்டை சமாளிக்க வேண்டி விஜயலட்சுமி தன்னால் முடிந்த அளவுக்கு பல்வேறுவிதமான வேலைகளையும் செய்து வருகிறார். அப்படியும் பணம் ஈட்ட முடியாமல் திணறுகிறார்.

இந்த நேரத்தில் தம்பதிகளுக்கு இடையே அவ்வப்பொழுது சண்டைகள் எழும்போது முனீஸ்காந்த் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு சென்று விடுவார். பின்பு கோபம், தாபம் எல்லாம் தீர்ந்த பின்பு மறுபடியும் வீட்டுக்கு வருவார். இது இந்த மிடில் கிளாஸ் குடும்பத்தில் ஒரு தொடர்கதையாக இருக்கிறது.

ஒரு நாள் தன்னுடைய அப்பாவின் பழைய டிரங்க் பெட்டியை திறந்து பார்த்த பொழுது பத்திரம் ஒன்று முனீஸ்காந்தின் கையில் கிடைக்கிறது. அதைப் படித்து பார்த்த பொழுது அவருடைய தந்தை சிவபுண்ணியம் சென்னை ராயப்பேட்டையில் தான் நடத்தி வந்த ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையை ஒரு வடக்கத்திய இளைஞனுக்கு தாரை வார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளது தெரிய வருகிறது. பல வருடங்கள் கழிந்து சிவபுண்ணியமோ அல்லது அவரது வாரிசுகளோ இந்தப் பத்திரத்தை திருப்பி கொண்டு வந்தால் அப்போது அந்தக் கடை இருக்கும் நிலையில் கடையின் பாதி உரிமையாளராக அவரே இருப்பார் என்றும் அதில் எழுதப்பட்டிருக்கிறது.

முனீஸ்காந்துக்கு ஜாக்பாட் அடித்த சந்தோஷம். அந்த ஓனரை சந்தித்து பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கி அந்த பணத்தை வைத்து தான் பெரும் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் அல்லது வீடாது வாங்கிவிடலாம் என்று நினைப்பில் அந்த கடையின் தற்போதைய ஓனரை தேடி ஓடுகிறார். அந்த எலக்ட்ரானிக்ஸ் கடையை தேடி கண்டுபிடிக்கிறார். அது இப்போது மிகப் பெரிய வர்த்தக நிலையமாக இருக்கிறது.

அந்தக் கடையின் உரிமையாளரை சந்திக்கிறார். விஷயத்தைச் சொல்கிறார். நல்ல மனசுள்ள அவர் பத்திரத்தைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டு நாளை இதே இடத்துக்கு, இதே நேரம் வா.. 1 கோடி ரூபாய் தருகிறேன்..” என்கிறார்.

மறுநாளே முனீஸ்காந்த் அங்கே ஓடி வர 1 கோடிக்கு செக் ஒன்றைத் தருகிறார் அந்தக் கடையின் உரிமையாளர். அதை வாங்கிக் கொண்டு வங்கிக்குச் சென்று டெபாசிட் செய்ய முயலும்போது செக் காணாமல் போனது முனீஸ்காந்துக்குத் தெரிய வர அதிர்ச்சியாகிறார்.

இதற்கடுத்து என்ன நடந்தது.. செக் கிடைத்த்தா இல்லையா.. அவருடைய வீடு வாங்கும் கனவு நிறைவேறியதா.. இல்லையா.. என்பதுதான் இந்த மிடில் கிளாஸ் படத்தின் திரைக்கதை.

முனீஸ்காந்தை ஹீரோவாக வைத்து இந்தக் கதையை படமாக எடுத்திருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குருக்கும் நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். கதையின் மீதும், திரைக்கதையின் மீதும் இயக்குர் மீதும் ஒரு அசாத்தியமான தைரியத்தை முன் வைத்துதான் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் தயாரித்திருக்கிறார்கள் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

ஒரு சாதாரண மிடில் கிளாஸ் மாதவன் எந்த நிலையில் இருப்பானோ அதை அப்படியே தன்னுடைய கதாப்பாத்திரத்தின் மூலமாகப் படம் முழுவதும் காண்பித்திருக்கிறார் முனீஸ்காந்த். ஒவ்வொரு முறையும் பணம் இல்லை என்பதை சமாளித்துக் கொண்டே பேசும்விதமும் மனைவி கோபத்தில் கத்தும்போதெல்லாம் பிள்ளைகள் இருக்கிறார்களே.. அவர்களுக்காக அடிபணிந்து போக வேண்டும் என்று நினைக்கும் ஒரு சாதாரண குடும்பஸ்தனின் நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

எப்படியாவது பணத்தை வாங்கி தானும் ஒரு லட்சாதிபதி ஆகிவிடலாம் என்று நினைக்கும் அப்பாவித்தனமான நடிப்புக்களை இந்தப் படத்தில் அழகாக கொடுத்திருக்கிறார் முனீஸ்காந்த்.

மனைவியிடம் சண்டையிட்டு நண்பனின் வீட்டுக்குச் சென்று, பிறகு மறுபடியும் திரும்பி வந்து அப்படி ஒரு சம்பவமே நடக்காததுபோல மனைவியுடன் பேசுவதும், கெஞ்சுவதுமாய் ரசிக்க வைத்திருக்கிறார் முனீஸ்காந்த். வீட்டைவிட்டு மனைவி விரட்டும்போது அவர் படுகின்ற அவஸ்தையும் துயரமும் கவலையும் நிச்சயமாக முனிஷ்காந்த் ஜெயித்தே தீர வேண்டும் என்று படம் பார்ப்பவர்களைக்கூட சொல்ல வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் முனீஸ்காந்துக்கு ஜோடியாக நடிக்க இப்போது முன்னணியில் இருக்கும் ஆன்ட்டி நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ளவில்லையாம். கடைசியாக விஜயலட்சுமி மட்டுமே நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். இதற்காகவே அவருக்கு நமது ஸ்பெஷல் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..!

ஒரு மிடில் கிளாஸ் மனைவி எப்படி இருப்பாரோ என்ன செய்வாரோ.. அதைத்தான் விஜயலட்சுமி இந்தப் படத்தில் அழகாக செய்து இருக்கிறார். மிரட்டலாக நடித்திருக்கிறார். ஊரில் வீடு என்று பேச்சு எடுத்தாலே வள் என்று விழுகும் அந்த விஜயலட்சுமியின் வாய்ஸ் கேட்டவுடனே தியேட்டரில் நான்கு ஆண்கள் சிரிக்கிறார்கள். எட்டு பெண்கள் ரகசியமாக பேசி சிரிக்கிறார்கள். உண்மை அதுதான்.

அதேபோல் கணவர் பெரும் பணத்துடன் வரப் போவது தெரிந்தவுடன் அந்தப் பணத்தை முன் பமாக வைத்து விஜயலட்சுமி செய்யும் பலவித பணக்கார வேலைகள் எல்லாம் நகைக்க வைக்கின்றன.

நிச்சயம் இந்த படத்தில் வேறு ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால்கூட விஜயலட்சுமி அளவுக்கு ஒரு ஈர்ப்பை கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் இந்தப் படத்திற்கு விஜயலட்சுமி தேர்வு கச்சிதமானது.

வயதான வக்கீலாக நடித்திருக்கும் ராதாரவி இது போன்ற பல பிரச்சனைகளை சந்தித்த அந்த அனுபவத்தினால் முனீஸ்காந்தின் செக் தொலைந்து போனது என்ற விஷயத்தை அவர் வித்தியாசமான முறையில் அணுகும்விதம் இந்தப் படத்திற்கு இன்னொரு பலமாக அமைந்திருக்கிறது.

அதேபோல் தான் திருமணம் செய்யப் போகும் மனோவியல் நிபுணர் மாளவிகா அவினாஷிடம் இவர்களை அனுப்பி மனதத்துவ ரீதியாக முனீஸ்காந்தின் தொலைந்த செக்கை கண்டுபிடிக்க செய்யும் ஒரு யுக்தியும் ருசிகரமானது.

முனீஸ்காந்துக்கு பக்கப்பலமாக படத்தில் கடைசிவரையிலும் வம் வந்திருக்கும் வடிவேல் முருகன் கொஞ்சம் கொஞ்சம் புன்னகைக்க வைப்பதுபோல சில காமெடிகளை வீசியிருக்கிறார். இவருடன் ஆட்டோ ஓட்டுநர் குரேஷியும் ஒரு பக்கம் சென்டிமென்ட் வசனங்களை பேசி நம்மை உஷார்படுத்தி இருக்கிறார். கிராமத்திலிருந்து அவ்வப்போது முனீஸ்காந்திடம் பேசி தைரியத்தையும் கிராமத்துக்கு திரும்பி வருவதற்கான ஒரு முன்னோட்டத்தை கொடுக்கவும் காளி வெங்கட்டும் படத்தில் இருக்கிறார்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சுதர்சன் சீனிவாசனின் திறமை இந்தப் படத்தின் முதல் ஷாட்டிலேயே தெரிந்துவிட்டது. டிரோன் ஷாட்டில் அவ்வளவு பெரிய வயல் வெளியில் ஒரு சின்ன பிம்பமாக வயக்காட்டில் வானத்தைப் பார்த்தபடி அண்ணாந்து படுத்திருக்கும் முனீஸ்காந்தை காட்டுகின்ற அந்த ஒரு காட்சியிலேயே கை தட்ட வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர். இதே காட்சிதான் படத்தின் முடிவாகவும் இருப்பது ஒரு சுவையான டிவிஸ்ட்டுதான்.

படம் நெடுகிலும் மிக அழகான ஒளிப்பதிவை கொடுத்து அந்த சின்ன வீட்டின் பல்வேறு இடங்களில் கேமராவை வைத்து கேமரா கோணங்களை மாற்றி, மாற்றி வைத்திருப்பதால் நமக்குப் படம் கொஞ்சமும் போர் அடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பம்.. அந்தக் குடும்பத்திற்குள் நிகழும் மனதை தொடும் சம்பவங்கள்தான் திரைக்கதை என்பதால் அந்த மன மாற்றங்கள் அனைத்தையும் நம்முடைய மனதில் அமர வைப்பது போல கொஞ்சம் எமோஷன்ஸ்.. திடீரென்று இடையில் காமெடி.. அதற்குப் பிறகு மறுபடியும் பரபரப்பு.. மீண்டும் எமோஷன்ஸ்… என்று அனைத்தையும் கலந்துகட்டி வரிசையாக அடுத்தடுத்து கொடுத்திருக்கும் வகையில் படத் தொகுப்பாளர் சான் லோகேஷின் பணி பாராட்டுக்குரியது.

இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜனின் இசையில் பாடல்கள் குடும்பக் கதையோடு மாண்டேஜ் காட்சிகளாக இருப்பதால், பாடல்களையும் ரசிக்க முடிந்திருக்கிறது. அதிலும் தேன் கூடு பாடல் ஒரு தனி ருசி.. காட்சிகளும் அழகு.. பின்னணி இசையிலும் கொஞ்சம் அடக்கி வாசித்து இருந்தாலும் படத்தின் பிற்பாதியில் அந்த செக்கை தேடி அலைகின்ற அந்த தருணத்தில் ஒரு அழகான ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் பரபரப்பை கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் பிரணவ் முனிராஜ்.

மிடில் கிளாஸ் ஃபேமிலிகளுக்கே உரித்தான பம் சம்பாதிக்கும் வேட்கையைத்தான் இந்தப் படம் சொல்கிறது என்றாலும் அதை நேர்மையான முறையில் நாம் பெற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் இயக்குநர். அந்த ஒரு விஷயத்துக்காகவே இந்தப் படத்தின் இயக்குநருக்கு இரு கரம் கூப்பி, பாராட்டியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தாக வேண்டும்.

முனீஸ்காந்த் எப்போதும் பல திரைப்படங்களில் காமெடியனாக வருபவர். படத்தின் ஹீரோயினோ எப்போதோ சினிமாவில் இருந்து வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட் வாங்கியவர். இப்படி இரண்டு வியாபாரமே இல்லாத நடிகர், நடிகையை வைத்து இப்படி ஒரு அழகான குடும்ப காவியத்தை கொடுத்திருக்கும் இயக்குருக்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் நம்முடைய மனமார்ந்த நன்றி.

இப்போதெல்லாம் வாரத்திற்கு ஆறு படங்கள் வந்தால் அதில் ஐந்து படங்கள் வெட்டு குத்து, கொலை, துப்பாக்கி என்று சகலவிதமான ஆயுதங்களையும் முன் வைத்து ரசிகர்களின் தலையில் அடிக்கின்றன. ஏதேனும் ஒரு படம் மட்டுமே வித்தியாசமாக வந்து அதுவும் தரம் இல்லாத இயக்கத்தினால் ரசிகர்களை கவர முடியாமல் போகிறது. ஆனால், இந்த வாரம் அப்படி இல்லாமல் ஒரு அழகான குடும்ப கதையாக இந்த மிடில் கிளாஸ் படம் வெளியாகி இருக்கிறது.

குடும்பப் படங்கள் வரவில்லை.. வரவில்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பதை விடவும், அப்படி ஒரு திரைப்படம் வந்தால் அதை குடும்பத்தோடு சென்று பார்த்து வாழ்த்தி, பாராட்டி ஊக்குவிப்பது நம்முடைய தமிழ் சினிமா ரசிகர்களின் கடமை. அந்தக் கடமையை இந்தப் படத்தை வெற்றிகரமாக ஓட வைத்து தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

RATING : 3.5 / 5

Our Score