full screen background image

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்.-பாண்டியன்’ திரைப்படம்

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்.-பாண்டியன்’ திரைப்படம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து, இயக்கும் புதிய படம் ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’. 

பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் – என்ற சூப்பர் ஸ்டாரின் திரைப்பட பெயரையும் இணைத்து, ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படம் டைட்டிலிலேயே அதிரடியை கிளப்பியிருக்கிறது.

இத்திரைப்படத்தில் இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கிறார். ‘555’ படத்தில் நடித்த சாந்தினி ஹீரோயினாக நடிக்கிறார்.

மற்றும் நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மற்றும் மகாநதி சங்கர், ராஜ்கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மணன், வின்சென்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா,  சரவண சக்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, வைரமுத்து, பா.விஜய் இருவரும் பாடல்களை எழுத வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். 

தமிழ் திரையுலகில் இயக்குநர் அமீர் ஒரு சிறந்த இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் நடிகர் என்று மூன்றிலுமே சிறந்து விளங்குகிறார். அவரது நான்கு படைப்புகளில், மூன்று படங்கள் இன்றளவும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்தவையாக திரை விமர்சகர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

‘மௌனம் பேசியதே’, ‘ராம்’, மற்றும் ‘பருத்தி வீரன்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு நிறைய பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. அமீர் கடந்த 2009-ம் ஆண்டு நடிகராக களம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை தயாரித்து, இயக்கும் இயக்குநர் ஆதம்பாவா படம் பற்றி பேசுகையில், “இத்திரைப்படம் ‘அமைதிப் படை’க்குப் பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம்.ஜி.ஆர். ரசிகனை இப்படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது.

ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் ‘வட சென்னை’ மற்றும் ‘சந்தனத்தேவன்’ படத்திலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல்  படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். தேனி, மதுரை பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது..” என்றார்.

Our Score