‘மெர்சல்’ படம் திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 18 தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று இன்றைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் படம் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல்தான் இருக்கிறது. சமீபத்திய காலங்களில் அவருடைய ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்து படத்தைச் சூழ்ந்து கொள்கின்றன. இத்தனையையும் தாண்டித்தான் அவருடைய படங்களை திரையிட வேண்டியிருக்கிறது.
‘மெர்சல்’ திரைப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படைப்பு என்பதால் ‘பணத்திற்கு பஞ்சமில்லாத வகையில் தயாரிப்போம்’ என்று முதலிலேயே உறுதியளித்திருந்தார் தயாரிப்பாளர் முரளி ராமசாமி.
இதனை உறுதிப்படுத்துவதை போலவே 100 கோடியில் முடிய வேண்டிய படம், கூடுதலாக 40 கோடியையும் சேர்த்து 140 கோடியில் வந்து நிற்கிறது. போட்ட பணத்தை எடுக்க வேண்டுமெனில், படத்தின் ஒட்டு மொத்த வசூல் 200 கோடியைத் தொட்டாக வேண்டும்.
இதற்கான முனைப்பில் தயாரிப்பாளர் தரப்பு இருந்தபோதுதான் படத்தின் தலைப்பு விவகாரம் கோர்ட்வரையிலும் சென்றது. நீதிமன்ற விசாரணையில் ‘மெர்சலாயிட்டேன்’ என்பதற்கும் ‘மெர்சல்’ என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்று சொல்லி நீதிமன்றம் அந்தத் தடையை உடைத்தது.
இப்போது 10 நாட்களுக்கு முன்பாகவே ‘மெர்சல்’ சென்சார் சான்றிதழுக்காக பார்க்கப்பட்டு ‘யு/ஏ’ என்று வாங்கிவி்ட்டதாகவும் தகவல் வந்தது. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பாக படத்தில் காட்டப்பட்டிருக்கும் புறா, மாடுகள் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு வனவிலங்குகள் வாரியத்திடம் முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெற்று சமர்ப்பிக்கவில்லை என்று கூறி சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் பரபரப்பாக டெல்லிக்கும், சென்னைக்குமாக அலைந்திருக்கிறார் தயாரிப்பாளர் முரளி. எப்போதும் எதற்கும் அசைந்து கொடுக்காத விலங்குகள் வாரியத்தின் உறுப்பினர்களை, இந்தப் படத்தை பார்க்க வைப்பதற்காகவே சென்னைக்கு வரவழைத்திருக்கிறார் தயாரிப்பாளர்.
வந்தவர்களும் இன்று காலை ‘மெர்சல்’ படத்தை பார்த்துவிட்டு புறா, காளை மாடுகள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில கட்டுக்களை சொல்லியிருக்கின்றனர். இதனை தயாரிப்பாளரும், இயக்குநரும் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள.. இப்போது விலங்குகள் நல வாரியம் ஒப்புகை சான்றிதழ் தந்துள்ளது. இனிமேல், நாளை காலையில் ‘மெர்சல்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இன்னொரு பக்கம் 140 கோடி முதலீடு என்பதால் அதிக அளவு எண்ணிக்கையிலான தியேட்டர்களில் படத்தை திரையிட ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர். ஆனால் தமிழக அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரியை குறைக்கச் சொல்லி திடீர் ஸ்டிரைக்கை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவிக்க.. ‘மெர்சலு’க்கு டென்ஷன் கூடிவிட்டது.
மூன்று நாட்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு 2 சதவிகிதம் மட்டுமே கேளிக்கை வரியை குறைக்க ஒப்புக் கொண்டது தமிழக அரசு. இதற்கு மேல் பேச்சுவார்த்தையில் பலனில்லை என்பதால் தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் தாங்கள் அறிவித்திருந்த ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
இருந்தாலும், அரசு இப்போது விதித்திருக்கும் நிபந்தனைகள் தற்போது தயாரி்ப்பாளரின் கழுத்தை நெரித்திருக்கிறது.
அரசு அனுமதித்த டிக்கெட் கட்டணத்திற்கு மேலாக பணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அரசாணையே வெளியாகிவிட்டது. இதன்கூடவே நடிகர் விஷாலும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடியாக அரசு அதிகாரிகளிடத்தில் புகார் செய்யவும் என்று புகையை ஊதிவிட.. தியேட்டர்காரர்கள் இப்போது திகிலில் இருக்கிறார்கள்.
மிக அதிக தயாரிப்புச் செலவால் அதிகமான டிக்கெட் கட்டணத்தால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்கிற பிரச்சினையில் ‘மெர்சல்’ திரைப்படம் இப்போது மாட்டியிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாகவே தலைநகர் சென்னையில் எப்போதும் ரசிகர்களின் கூட்டம் அலை மோதும் ஜாபர்கான்பேட்டை ‘காசி’ தியேட்டரில் ‘மெர்சல்’ வெளியாகாது என்று அந்தத் தியேட்டர் நிர்வாகமே சொல்லிவிட்டது.
இதேபோல் தமிழகத்தின் பல ஊர்களிலும் பல தியேட்டர்களும் இந்த மறுப்பை தைரியமாக தெரிவிக்க.. தற்போது ‘மெர்சல்’ காய்ச்சல் ரசிகர்களிடமிருந்து தாவி, தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள்வரையிலும் போய்ச் சேர்ந்திருக்கிறது.
இதற்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் திடீரென்று இன்று காலை சந்தித்து பேசியுள்ளார். தயாரிப்பாளர் தரப்பு மிகவும் மனம் உடைந்த நிலையில் இருப்பதால் அவருக்குத் தைரியமூட்டவும், வேறு வகையிலான எதிர்ப்புகள், பழி வாங்கல்கள் இல்லாமல் படம் வெளியாக விஜய் இந்தப் பேச்சுவார்த்தையை பயன்படு்ததியிருக்கிறார் என்கிறார்கள் செய்தியாளர்கள்.
கேளிக்கை வரி விலக்கை குறைத்தமைக்காக தமிழக அரசை பாராட்டவே விஜய் முதல்வரை சந்தித்தாக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்னாலும் நிச்சயமாக விஜய் தனது படத்தின் பிரச்சினைகள் பற்றிப் பேசியிரு்பபார் என்றே தோன்றுகிறது.
இது போன்று எத்தனை… எத்தனை, தடைகளை எப்படி ஏற்படுத்தினாலும் எங்கள் தளபதியின் படத்தை நாங்கள் பார்த்தே தீருவோம் என்று தடை பல தகர்த்து புலியாய் பாயும் அதி தீவிர ரசிகர்கள் இருக்கும்வரையிலும் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் விஜய்யின் படம் அதை முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதே எதிர்பார்ப்பில்தான் தயாரிப்பாளரும் இருக்கிறார். அவருக்கும் எங்களது தைரியமூட்டும் வாழ்த்துகள்..!