full screen background image

மெரி கிறிஸ்துமஸ் – சினிமா விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் – சினிமா விமர்சனம்

“இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தில், இயேசுவை ஏரோது மன்னனிடம் இருந்து காப்பாற்ற தன் கணவர் யோசேப்புடன் அலைந்து திரிந்தார் மரியாள்; அது போல் இந்தப் படத்தின் நாயகியான மரியாவும் தன் வாய் பேச முடியாத குழந்தையின் நன்மைக்காக இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தின் நள்ளிரவில் இருந்து அதிகாலை நேரம் வரை சிலருடன் அலைந்து திரிகிறாள்.

அப்படி ஏறக்குறைய 8 மணி நேரம் அலைந்து, திரியும்போது நடக்கும் சம்பவங்கள்தான் இந்த “மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படம்.

சற்றே வித்தியாசமான கதை. மிக, மிக வித்தியாசமான திரைக்கதை.  இதுதான் கதை என்று கதையை இன்னும் சற்று விவரிக்க முயன்றால், கதையை விவரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் திரைக்கதையின் முடிச்சுகள் தன்னிச்சையாக அவிழத் துவங்கிவிடும். எனவே அதைக் கருத்தில் கொண்டு சுருக்கமான கதையை கூறாமல் தவிர்ப்பதே நலம்.

மரியாவாக கேத்ரினா கைஃப். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ரெஸ்ட்டாரண்டில் கையறு நிலையில் அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து, கண்ணீர் வழிய ஆல்பர்ட்டாக வரும்  விஜய் சேதுபதியை காவல் நிலையத்தில் கடைசி காட்சியில் பார்ப்பதுவரையிலும், ஒட்டு மொத்த படத்தையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் கேத்ரினா.

கதையின் மையம் கேத்ரீனாவை சார்ந்தது என்பதால் பெரும்பாலான சம்பவங்கள் அவரை மையப்படுத்தியே நடக்கின்றன. தன் குழந்தைக்கு ஏதாவது விபரீதம் நடந்திருக்குமோ என்று அஞ்சி பதட்டத்துடன் ஓடி வரும் காட்சியிலும், வெறுப்பு பொங்க, விஜய் சேதுபதியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும் காட்சியிலும், சர்ச்சில் பிரார்த்தனை நிகழ்வின் போது மயங்கி விழும் இடத்திலும் உணர்வுபூர்வமும், துடிப்பும், துடுக்குத்தனமும் கலந்த ஒரு கலவையான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார்.

ஆல்பர்ட்டாக நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு வழக்கத்தில் இருந்து விலகிய ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். அதனை உணர்ந்து மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு எல்லைகளைத் தாண்டாமல் அந்தக் கட்டங்கள் உள்ளேயே கபடி ஆடி இருக்கிறார்.

தன் உறவுகளைப் பிரிந்த மிகுந்த மன துயரத்தை மனதில் பதுக்கிக் கொண்டு, உணர்வுகளை உணர்ச்சிவசப்பட்டு வெளிக்காட்டாமல் அழகான அண்டர் ப்ளே செய்திருக்கிறார். 

கேத்ரினா பின்னால் திரும்ப, திரும்ப சென்று அவரின் கவனத்தை ஈர்க்க அவர் செய்யும் சேஷ்டைகள் அவர் கடந்து வந்த திரை பயணத்தில் காணக் கிடைக்காதது. மேலும் தன்னுடைய இருப்புக்கே இடைஞ்சல் ஏற்பட்டுவிடும் என்பது தெரிந்ததும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கும் முடிவுகளும், அந்த பதட்டமான சூழலிலும் புத்திசாலித்தனமாக செயலாற்றும் செயல்பாடுகளும் சிறப்புதான்.

இந்த இருவரைத் தவிர்த்து நடிப்பால் நம்மை ஈர்ப்பவர்கள் என்று பார்த்தால்,  போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சண்முகபாண்டியனும், ஹெட் கான்ஸ்டபிள் ஏட்டம்மாவாக வரும் ராதிகா சரத்குமாரும்தான். இருவரும் வழக்கை எதிர் எதிர் துருவங்களில் இருந்து அணுகும் விதமும், விசாரிக்கும் விதமும் வெகு சிறப்பு.

படத்தின் முடிவிற்கு ஒட்டு மொத்த காரணகர்த்தாவாக இருக்கும் இந்த இருவரும் தங்கள் முதிர்ச்சியான நடிப்பால் முத்திரைப் பதிக்கிறார்கள். 

சிறிது நேரமே வந்து செல்லும் ராதிகா ஆப்தே ஆச்சரியப்படுத்துகிறார். ஃப்ரெடரிக் ஆக வரும் கவின் ஜே.பாபு வரும் காட்சிகளில் எல்லாம் காமெடி களை கட்டுகிறது. அதிலும் இறுதிக் காட்சியில் தன் மணிபர்ஸ் தொலைந்து போனதற்கு காரணம் சொல்லும்போது, இன்ஸ்பெக்டர் சண்முகபாண்டியன், “இனி ஒன் பர்ஸ் தொலைஞ்சது ஒன்னைக் கொன்னே புடுவேன்..” என்று எச்சரிக்கும்போது விழுந்து விழுந்து சிரிக்கும் நமக்கு அந்தப் பர்ஸ்தான் கதையை முடித்து வைக்கப் போகிறது என்று தெரியவில்லை. இவர்கள் தவிர்த்து ராஜேஷ், காயத்ரி ஆகியோரும் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.

படத்தின் உண்மையான ஹீரோ படத்தின் திரைக்கதைதான். படத்தில் எந்த ஒரு காட்சியையும் நம்மால் யூகிக்க முடியவில்லை. நாம் ஒன்று யூகிக்க, அது வேறு ஒன்றாக அடுத்த காட்சியில் மாறி நிற்கிறது. பெரும்பாலும் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் படங்களில் இது போன்ற திரைக்கதைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதற்கு இணையான ஒரு அற்புதமான திரைக்கதையை இந்த மெரி கிறிஸ்துமஸ் படத்திற்கு அதன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், எடிட்டர் பூஜா லதா சுர்தி மற்றும் அர்ஜித் பிஸ்வாஸ் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். அந்தக் குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள்.

படத்திற்கு மெரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைத்தது, வாய் பேச முடியாத மகள் கதாபாத்திரம்,  கதை துவங்கும் இரவு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாளாக இருப்பது, விஜய்  சேதுபதி வாங்கி வரும் கூண்டுப் பறவை, ஃப்ரடெரிக்கின் பர்ஸ், சாண்டா க்ளாஸ், ஏட்டய்யா-வாக வரும் கதாபாத்திர வடிவமைப்பு, விஜய் சேதுபதியின் பின் கதை, படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் மிக்ஸியில் மாத்திரைகள் மற்றும் இட்லி பொடி அரைக்கும் ஷாட், அந்த இரண்டிற்குமான கனெக்டிவிட்டி, விஜய் சேதுபதி ஆரம்பக் காட்சியில் கையில் வைத்திருக்கும் மோதிரத்தை இறுதிக் காட்சியில் பயன்படுத்தியிருக்கும் க்ளாசிக்கல் டச்,  என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து திரைக்கதையில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எதுவுமே சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக திணிக்கப்பட்டதாக தெரியாமல், கதையோடு ஒருங்கிணைந்து பயணிக்கக் கூடியதாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

அது போல் வசனங்கள் மிக இயல்பாகவும் துல்லியமாகவும் எழுதப்பட்டு இருக்கின்றன.  “தூக்கிப் போட்டாத்தான மறக்க முடியும்” என்பதும் “யாராவது அழுத மாதிரி போட்டோ எடுத்து வீட்ல மாட்டி பாத்திருக்கியா…?”, “சில நேரங்கள்ல தியாகத்தைவிட வன்முறை நல்லது; சில நேரங்கள்ல மட்டும்…” என்பனவெல்லாம் அதற்கான சான்றுகள்.

ப்ரீத்தம் இசையில் பாடல்கள் அனைத்தும் மெல்லிசை. டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான மர்மத்தையும், திகிலையும் அநிச்சையாகக் கூட்டுகின்றன.  கதையும், திரைக்கதையும் காட்சிகளின் வழி என்ன சொல்ல முனைகிறதோ அதை கச்சிதமாக கடத்தி இருக்கிறது பின்னணி இசை.  மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் பழைய பாம்பே நகரம் அதன் பழமை மாறாத கம்பீரத்தோடு நம் கண் முன் காட்சியளிக்கிறது. காட்சிகளில் சிவப்பு நிறத்தை ஏதேனும் மூலையிலாவது இடம் பெறச் செய்து கதை சொல்லல் உத்திக்கு அதை பயன்படுத்தி இருக்கும்விதம் பாராட்டுக்குரியது.

கொலைகளை நியாயப்படுத்தும் முயற்சி, ஒழுக்கக் குறியீட்டில் அகலக் கால் வைத்து நடப்பது, எந்த கதாபாத்திரத்தின் மீதும் பார்வையாளர்களுக்கு பிடிமானம் ஏற்படாமல் இருப்பது போன்றவை படத்தின் பலகீனங்களாக இருந்தாலும் குற்றமில்லைதான்.

ஆனால் படம் கொலைகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவில்லை; கொலைக்கான உச்சபட்ச காரணம், மரியாவின் மகளுக்கு நடந்த கொடூரம் என்ன என்பது வெளிப்படையாக சொல்லப்படாமல் ஆடியன்ஸின் முடிவுக்கு விட்டுவிடப்பட்டிருப்பது, அவர்களின் கற்பனைகளால் அதை இட்டு நிரப்பவே என்று தோன்றுகிறது.

அது போல் படம் சொல்ல வருவது, “பாவத்தின் வழித் தடத்தில் கால் வைத்தால் அது காலைச் சுற்றிய பாம்பு போல் நாம் போகும் வழியெல்லாம் நம்மோடு சேர்ந்து கூடவே வரும்” என்பதே..!

மொத்தத்தில் இந்த ”மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படம் தங்களின் வழி மாறிய பயணத்தால் பாவங்களை சுமந்து அலையும் இரண்டு ஜீவ ராசிகள் தங்களுக்கான மீட்பையும், மீட்பரையும் கண்டடையும் புள்ளியில் நிறைவடைகிறது.

“மெரி கிறிஸ்துமஸ்” – ” ப்ளாக் ஃபாரஸ்ட் ”  “கண்ணைக் கட்டி கறுத்த காட்டிற்குள் செல்லும் அதிஅற்புதமான பயணம், அதில் தடுமாற்றங்களைத் தொடர்ந்த தரிசனங்களும் உண்டு”

“DON’T MISS IT”

மதிப்பெண் – 3.5 / 5

Our Score