full screen background image

மேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம்

நடிகர் விஜய் சேதுபதி தனது விஜய் சேதுபதி புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்த இரண்டாவது படம் இது. Dream Tree Productions நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. VT Cinemas நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ளது.

படத்தில் அதிகப்பட்சம் நடிகர், நடிகைகள் புதுமுகங்கள். அதோடு படப்பிடிப்பு நடந்த கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகம்பேர் இதில் நடித்துள்ளனர்.

கதையின் நாயகனாக ஆண்டனி நடித்துள்ளார். ‘ஜோக்கர்’ படத்தில் நடித்திருந்த காயத்ரி கிருஷ்ணா இந்தப் படத்தில் ‘ஈஸ்வரி’ என்னும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அபு வலையங்குளம், ‘ஆறு’ பாலா, ஆண்டனி வாத்தியார், சுடலை, ரமேஷ், பாண்டி, பாண்டியம்மா, சொர்ணம், ஸ்மித் மற்றும் பல உள்ளூர் மக்களும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – விஜய்சேதுபதி புரொடெக்சன்ஸ், தயாரிப்பாளர் – விஜய் சேதுபதி, கதை, திரைக்கதை, இயக்கம் – லெனின் பாரதி, இசை – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், படத் தொகுப்பு – மு.காசிவிஸ்வநாதன், கலை இயக்கம் – எஸ்.ஜெயச்சந்திரன், பாடல்கள் – இசைஞானி இளையராஜா, யுகபாரதி, விவேக், பாடகர்கள் – இசைஞானி இளையராஜா, ஹரிச்சரண், ரம்யா, உடைகள் – எஸ்.ஆர்.ராஜ்மோகன், இணை தயாரிப்பு – ஆர்.எம்.ராஜேஷ் குமார்.

“உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக் கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்” என்று இந்தப் படத்தில் கடைசியாக  சொல்லியிருப்பதுபோல் இந்தப் படம், நிலமற்ற ஆனால் உழைக்கும் திறன் கொண்ட ஒரு இந்தியன், தமிழன், மலை வாழ் மக்களில் ஒருவனான ரெங்கசாமியின் வாழ்க்கைக் கதையைப் பேசியிருக்கிறது.

தமிழகத்தின் தென் பகுதியில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருக்கும் பண்ணைப்புரம் என்னும் ஊரில் வசிக்கிறார் இளம் வாலிபர் ரெங்கசாமி.

விடியற்காலை 4 மணிக்கு எழுந்து தேவாரம் சென்று அங்கேயிருக்கும் எஸ்டேட் ஓனர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏறி 8 மைல் தொலைவில் கேரளாவின் எல்லைக்குள் இருக்கும் சதுரங்கப் பாறையில் ஏலக்காய் எஸ்டேட்டில் இருக்கும் கங்காணியிடம் ஒப்படைப்பதும், கூடவே யாராவது அடிவாரத்தில் இருந்து மலை மீதிருக்கும் மக்களுக்குக் கடிதம் கொடுத்தனுப்பினால் அதை அவர்களிடத்தில் சமர்ப்பிப்பதும், திரும்பவும் கீழே வரும்போது எஸ்டேட்டில் இருந்து ஏலக்காய் மூட்டையை சுமந்து வந்து அடிவாரத்தில் கொடுத்துவிட்டு வருவதும்தான் வேலை.

அம்மா ஒருத்தியுடனும் ஒரு ஓட்டு வீட்டுடனும் வாழும் ரெங்கசாமிக்கு ஒரேயொரு கனவு. அது சொந்தமாக ஒரு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வாழ வேண்டும் என்பதுதான். இதற்காகச் சிறுக சிறுக காசு சேர்த்து வைத்திருக்கிறான். உள்ளூரில் இருக்கும் ஒருவரிடத்தில் நிலம் வாங்க முயற்சிக்க.. அவருடைய குடும்பத்துப் பெண்ணின் எதிர்ப்பினால் அது முடியாமல் போகிறது.

பக்கத்து ஊரில் வசிக்கும் தனது உறவுக்காரப் பெண்ணான ஈஸ்வரியை மணமுடிக்கிறான் ரெங்கசாமி. ஒரு பையனும் பிறக்கிறான். இப்போதும் நிலம் வாங்கும் ஆசையில் இருக்கிறான். இவனது ஆசையின் வீரியத்தைப் பார்த்த இவரது உறவுக்காரப் பாட்டி தனது பேத்தியின் திருமணத்திற்காக தன்னுடைய நிலத்தை வாங்கிக் கொள்ளும்படி சொல்கிறார்.

தான் எதிர்பார்த்திருந்த தருணம் வந்துவிட்டதாகவே நினைத்து சந்தோஷப்படும் ரெங்கசாமி இதற்காகவே காத்திருந்தாற்போல் பரபரக்கிறான். தான் இப்போது சேமித்து வைத்திருக்கும் பணம் நிலம் வாங்க போதாது என்பதால் கூடுதல் பணத்துக்கு யோசிக்கிறான்.

அப்போது அவன் அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கும் எஸ்டேட் உரிமையாளரிடமே ஒரு மூட்டை ஏலக்காயை தள்ளுபடி விலையில் வாங்கி கீழே அடிவாரத்தில் ஏலத்தில் விற்று அத்தொகையை வைத்து நிலத்தை வாங்கலாம் என்று ஒரு பெரியவர் ஐடியா சொல்ல.. ரெங்கசாமி இதற்குக் கட்டுப்பட்டு அவர் சொன்னதுபோலவே தன்னிடமிருக்கும் பணத்தை வைத்து ஏலக்காய் மூட்டையை வாங்கிச் செல்கிறான்.

ஆனால் விதி பரிகாசமாகச் சிரிக்கிறது. ரெங்கசாமி சுமந்து வந்த ஏலக்காய் மூட்டை தவறுதலாக அதே மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கீழே விழுந்து சிதறிப் போகிறது. ரெங்கசாமியும் சிதறிப் போகிறான். தனது கனவு சிதைந்த கோபத்தில், விரக்தியில் மனம் புரண்டி கிடப்பவனை அவனது மனைவி தேற்றுகிறாள்.

ஆனால் நல்ல உள்ளங்கள் அருகில் இருப்பதால் ரெங்கசாமிக்கு பலன் கை கூடி வருகிறது. ரங்கசாமியின் தந்தையால் வளர்ந்த ஒரு உள்ளூர் இஸ்லாமிய பிரமுகர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ரெங்கசாமி கேட்காமலேயே அந்தப் பணத்தை ரெங்கசாமியின் உறவுக்காரப் பெண்ணிடம் கொடுத்து நிலத்தை வாங்கிக் கொடுக்கிறார்.

ரெங்கசாமி அந்த இஸ்லாமிய பெரியவரிடம் போய் தான் அந்தத் தொகையை கடனாக வைத்துக் கொள்வதாகவும், கொஞ்சம், கொஞ்சமாக அடைத்துவிடுவதாகவும் சொல்கிறான். தன்னுடைய சொந்த நிலத்தில் கடுமையாக உழைக்கிறான். வாழைத்தார் போட்ட நிலத்தில் திடீர் மழை, மற்றும் நிலச்சரிவால் மொத்த நிலமும் பாழாகிறது. கடனும் கூடுகிறது.

எப்போதும் கடன் கொடுக்கும் அதே உரக் கடையில் இப்போது உயர் ரக விதைகளை வாங்கிப் பயிரிடுகிறான். இந்த நேரத்தில் மலை மீதிருக்கும் எஸ்டேட்டை வாங்கிய இன்னொரு எஸ்டேட் முதலாளி, அங்கே காலம்காலமாக தங்கியிருந்து வேலை செய்து வந்த தொழிலாளர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்.

இதற்கு லோக்கல் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவரும் உடந்தையாகிறார். ஆனால் அதே பகுதியில் நல்ல காம்ரேடாக வாழ்ந்து கொண்டிருக்கும் சாக்கோ, இதைத் தட்டிக் கேட்க நினைத்து சில நண்பர்களுடனும், ரெங்கசாமியுடனும் அங்கே செல்கிறார்.

போன வேகத்திலும், இருந்த கோபத்திலும் அந்த எஸ்டேட் முதலாளியான ‘ஆறு’ பாலாவையும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரையும் படுகொலை செய்கிறார்கள் இந்த நால்வரும். இதனால் ரெங்கசாமிக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கிறது.

ரங்கசாமி  ஜெயிலுக்குப் போய்விட்ட நிலையில் அவனுடைய மனைவி ஈஸ்வரி விவசாயத்தை சரிவர செய்ய முடியாமல் தவிக்கிறாள். அதே உரக் கடைக்காரரிடம் கடனுக்கு உரங்கள் மற்றும் மருந்துகளை வாங்கி விவசாயம் செய்கிறாள். 

ஐந்து வருடங்கள் கழித்து ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வரும் ரங்கசாமி ஊர் திரும்பி என்ன செய்தான்.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை. 

நிச்சயமாக இத்திரைப்படம் தமிழ்த் திரையுலகத்துக்கே பெருமையையும், கவுரவத்தையும் சேர்ப்பித்திருக்கிறது. இதுவரையிலும் இப்படியொரு நேட்டிவிட்டியோடு, மண் மணம் மாறாத தன்மையோடு, நடிகர்களே இல்லாமல் மக்களோடு மக்களாக அனைவரையும் பேச வைத்து இயல்பாக.. சினிமாவே அல்ல.. நிஜத்தில் நடப்பது போல எடுத்திருக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்று அடித்துச் சொல்லலாம்.

படத்தில் நடித்திருப்பவர்களில் எஸ்டேட் ஓனர்களில் ஒருவரான ‘ஆறு’ பாலா மற்றும் கம்யூனிஸ்ட் தோழரான சாக்கோவாக நடித்திருக்கும் அபு – இந்த இருவர் மட்டுமே நிஜத்தில் நடிகர்கள். மற்றவர்கள் அனைவருமே அந்தந்த பகுதி மக்கள்தான். இவர்களை கேமிராவுக்கு முன்பாக நடிக்க வைத்திருக்கும் திறமைக்காக இயக்குநர் லெனின் பாரதிக்கு உலகத்தில் கொடுக்கப்படும் அத்தனை விருதுகளையும் தயங்காமல் கொடுக்கலாம்.

ரெங்கசாமியாக நடித்திருக்கும் நடிகர் ஆண்டனி இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் முகம் தெரிய நடித்திருப்பது இதில்தான். எந்த ஷாட்டிலும் நடிக்கவில்லை. இயல்பாக, எப்போதும் அவரது வீட்டில் எப்படியிருப்பாரோ அப்படியேதான் இதிலும் காட்சி தருகிறார்.

அப்பாவித்தனத்திலும் ஒரு அப்பாவித்தனம். நிலம் வாங்க விழையும் அவரது ஆர்வமும், அதற்காக அவர் காட்டும் முனைப்பும் மிக இயல்பானது. வருங்கால மனைவியின் வீட்டில் அவரை ரகளை செய்வதுபோல பேசியும் எதுவும் தெரியாமல் எழுந்து வருவதும், “கல்யாணம் பண்ணிக்கப்பா…” என்றதும் சட்டென்று ஒத்துக் கொள்வதும், ஒரு பாசமிக்க கணவனாக, அப்பாவாக.. அவரது கனவுகளை நோக்கிப் பயணிக்கும் ஒரு சாதாரண எளிய மனிதன் ரெங்கசாமியை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் ஆண்டனி.

ஏலக்காய் மூட்டை வனாந்திரத்தில் அகாலமாய் சிதையும்போது அவர் படும்பாடும், ஓடும் வேகமும், பட்ட துயரமும் நமக்கே வேதனையளிக்கிறது. ‘அடப் பாவமே…!’ என்று முணுமுணுக்காத உதடுகளே இருக்க முடியாது..!

அந்த வேதனைக்குப் பின்பும் சமாதானமாகி தனக்கு திடீரென்று கிடைத்த நிலத்தில் உழுது, பயிரிட்டு, அதுவும் இயற்கையின் சதியால் வீணாகி.. தொலைந்து போன கனவை நினைவாக்க மீண்டும் கடன் கேட்டு மீள முடியாத சகதியில் சிக்கிக் கொள்ளும் அந்த மனநிலையை மிக அழகாக பிரதிபலித்திருக்கிறார் ஆண்டனி.

கடைசி காட்சியில் “நாளைக்கு உனக்கு ஒரு வேலை சொல்லியிருக்கேன். அங்க போய் சேர்ந்திரு…” என்று உரக்கடைக்காரர் இப்போது கடவுளான நிலையில் இருப்பதால், அவர் சொல்வதை அமைதியாய் கேட்டுக் கொண்டு… நிலத்தை அவர் பெயருக்கே மாற்றிக் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு தனது மீதமான வாழ்க்கையை அமைதியாய் கழிக்க வரும் அந்த ரெங்கசாமிதான் இன்றைய உண்மையான எளிய இந்தியன், தமிழன்.

எத்தனையோ விவசாயிகள் இன்றைக்கு இப்படித்தான் தங்களது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நடைப் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ரெங்கசாமியும் அவர்களில் ஒருவன்தான்.

கதாபாத்திரங்களில் ஒருவர்கூட சோடை போகவில்லை. ரெங்கசாமியின் அம்மா, கணக்குப் பிள்ளை, கேத்தர, மயிலம்மா, கழுதைக்கார மூக்கையா, ராவுத்தர், அடிவாரத்தில் இருக்கும் பாக்கியம் பாட்டி, காளியம்மா பாட்டி, பாண்டி என்று கேரக்டர் பெயர்களுடன் இப்போதும் எங்கள் மனங்களில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எப்படியும் தனக்குத்தான் முடித்து வைக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து தன் வீட்டிற்கு வந்திருக்கும் வருங்கால கணவன் ரெங்கசாமியை கலாய்ப்பதில் துவங்கி திருமணம்வரையிலும் தனது அழகழகான முக பாவனைகளால் கவர்ந்திழுக்கிறார் நாயகி காயத்ரி கிருஷ்ணா. 

பிற்பாதியில் பெரும் சோகத்தைத் தாங்கிக் கொண்டு உரக் கடையில் கடனில் அனைத்தையும் வாங்கும் காட்சியில் “பாவம்ய்யா இந்தப் பிள்ளை” என்று சொல்லவும் வைத்திருக்கிறார். 

கழுதையை அடிப்பதுகூட தன் பிள்ளையை அடிப்பது போலத்தான் என்று சொல்லிக் கொண்டே தானும் அதன் கூடவே நடப்பதால்தான் அது நடக்கிறது என்று உண்மையைச் சொல்லும் பெரியவர்..

இப்போதுதான் முதல் முறையாக மலை மீது ஏறுகிறார் என்பதால் கொஞ்ச தூரத்திலேயே கால் வலி என்று படுத்தேவிடும் அந்த நகரத்து இளைஞர்.. இவரேதான் கடைசியாக பெரும் தொழிலதிபராகி, ரியல் எஸ்டேட் ஓனராகி.. உலகமயமாக்கலின் ஏஜெண்ட்டாகி ரெங்கசாமியின் வாழ்க்கையை அழிக்கிறார். (எப்படி ஆரம்பித்து எப்படி முடித்திருக்கிறார் திரைக்கதையை..?)

‘மூணு ஏலக்காய்.. முன்னூறு மல்லிகைப் பூ’ என்று யார் சொன்னாலும் கையில் எது இருக்கிறதோ அதை வைத்தே அடித்து உதைக்கும் எஸ்டேட்டின் கங்காணி.. வீடும், வேலையும் பறிபோய் நிலத்தைவிட்டு வெளியேறும்போது “டேய்.. இப்போ யாராச்சும் சொல்லுங்கடா.. டேய் நீ சொல்லுடா.. டேய் நீ சொல்லுடா…” என்று கதறி அழும் அந்த இடத்தில் நம்மையறியாமல் கண் கலங்குகிறது. நெகிழ வைத்திருக்கிறார் அந்தக் கலைஞர்.

இதேபோல் இன்னொருவர் பாண்டி என்னும் பெரியவர். “எம்புட்டு பெரிய மூட்டையா இருந்தாலும் ஒத்தை ஆளா தூக்கி நிறுத்திருவேன்…” என்று நெஞ்சை நிமிர்த்தியபடியே சொல்லும் அவர் அதை செயலில் காட்டும் தருணமும், வாயில் இருந்து ரத்தம் சிந்திய நிலையிலும் தன்னுடைய நெஞ்சுரத்தைவிட்டுக் கொடுக்காமல் பேசும்விதமும், காட்டும் நடிப்பும்.. அப்பப்பா.. என்று சொல்ல வைத்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட் தோழராக எஸ்டேட்டிற்குள் நடந்தபடியே களம் சேர்க்கும் சாக்கோ.. “நல்ல சாலைகள் வந்தால் எந்திரங்கள் வரும். எந்திரங்கள் வந்தாலும் தொழிலாளர்களுக்கு வேலை பறி போய்விடும்…” என்று தங்களது கட்சித் தலைவரையே எச்சரிக்கும் குணமுள்ள ஆக்ரோஷத்தைக் காண்பித்திருக்கிறார் நடிகர் அபு.

ரெங்கசாமியின் தந்தை செய்த உதவிக்காக அவரது மகனுக்கு உதவிகளை செய்யும் ராவுத்தரும், கடனை திருப்பிக் கொடுக்குறாராம். “சரி கொடுங்க. பார்ப்போம்…” என்று குனிந்த தலை நிமிராமல் சொல்லியனுப்பும் அந்த பாசத்துக்கெல்லாம் எல்லை ஏது..

மலைப் பாதையில் கடை வைத்திருக்கும் உறவினர்.. ஈஸ்வரியின் அப்பா. உறவுக்காரர்கள்.. எஸ்டேட் வைத்திருக்கும் தேவாரம் பகுதி முதலாளி.. அவரது வயதான மேனேஜர்..

குடும்பத்துடன் மலையேறும்போது  யானையால் தாக்கப்பட்டு தனது குடும்பத்தை இழந்த பாண்டியம்மாள் சித்தம் கலங்கி பைத்தியமாகி “நான் எல்லா யானையையும் கொல்லப் போறேன்..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும் காட்சிகளும், இவரது மரணத்தின்போது வெறும் வளையல்களை மட்டுமே காட்டி அந்த ஷாட்டை மனதில் அழுத்தமாய் பதிய வைத்திருக்கும்விதமும் மனதை பிசைய வைக்கிறது.

“உன் பேருக்கு பத்திரத்தை பதிவு செஞ்சுக்க…” என்று சொல்லியும் மகன் மறுத்ததால் பத்திரத்தில் கையெழுத்திட வந்து அங்கே நடக்கும் சண்டையை பார்த்துவிட்டு ஒரு வார்த்தைகூட பேசாமல் திரும்பிப் போகும் அந்தத் தாயின் அழகான நடிப்பு.. இத்தனையையும் மிக அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் லெனின் பாரதி. அற்புதமான இயக்கம்.

படத்தின் துவக்கத்தில் பண்ணைப்புரத்தில் துவங்கும் திரைப்படம் மீண்டும் பண்ணைப்புரத்திலேயே முடிவடைவது சாலப் பொருத்தம்.

அந்த விடியற்காலை 4 மணிக்கு எழுந்த ரெங்கசாமியை பின் தொடரும் கேமிரா அவர் போகும் ஊர்களையெல்லாம் காட்டிவிட்டு… அந்த கரு இருட்டையும், கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூரியனின் கதிர் வெளிச்சத்தையும் தனக்குள் சேர்த்துக் கொண்டு மலை முகடு நோக்கிப் பயணிக்கும் கேமிராவால் நாமும் பயணிக்கும் அந்த பாதை பயணம் அத்தனை அழகான அனுபவம்.

இப்படியொரு பயணத்தை படப்பதிவு செய்திருக்கும் இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் என்னவென்று பாராட்டுவது. படத்தில் சிற்சில குறியீடுகளையும் மண் மணம் மாறாத விஷயங்களையும் குறிப்பிட்டே காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

மலைப் பாதையில் பயணிக்கும்போது இடையூறு நேராமல் இருக்க கல்லையெடு்த்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு பயணிப்பது.. அந்த மர தெய்வத்தை வேண்டிக் கொள்வது.. தோழர் சாக்கோவின் வீட்டிற்கு சென்று வழியில் சாக்கோ கொடுத்தவைகளை அவரது பெற்றோர்களிடம் கொடுத்து போஸ்ட்மேன் வேலை செய்வது.. கீழேயிருந்து மலை மீதிருக்கும் தனது மனைவிக்கு ஒருவர் சொல்லியனுப்பிய செய்தியைச் சொல்வது.. கொண்டு போகும் பணத்தை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதைக் காட்டியிருப்பது.. கம்யூனிஸ்ட்டாகவே இருந்தாலும் அனைவரையும் சமமாகப் பாவித்து அவர்களுக்கு வேலை வழங்கும் சாக்கோவின் பணி.. தொழில் சங்கத்தில் பதிவாகாத தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று உரி்மையுடன் சண்டையிடுவது.. இத்தனை தொழில் நுட்ப வசதிகளுக்குப் பின்னும் இன்னமும் மலையில் இருந்து கீழே இறங்க மூட்டை தூக்கும் ஆள்களை பயன்படுத்தும் கொடூரம்..

கிராமத்தில் ஒரு திருமணத்தை சட்டுப்புட்டென்று பேசி முடிக்கும் லாவகம்.. கடைக்கு பால் கொண்டு வந்தவனிடம், “பாலை வச்சிட்டு கல்லாவுல காசு எடுத்துட்டுப் போ” என்று தயக்கமே இல்லாமல் சொல்லும் நம்பிக்கை கலந்த பாசம்.. பணத்தை கொடுக்க வந்த ரங்கசாமியிடம், “இத கொடுக்கவா இவ்வளவு தூரம் வந்த..? அப்புறமா வேற வேலையா வரும்போது கொடுக்க வேண்டியதுதானே…?” என்று உரிமையோடு கண்டிக்கும்விதம்.. அதுவரைக்கும் அடித்துக் கொண்டவர்கள்.. மொத்தமாக வேலையில்லை. வீடில்லை.. வெளியேறுங்கள் என்று சொன்னவுடன் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கும் ஒற்றுமையுணர்வு..

சிறைக்கு சென்று வந்தவுடன் பேசாமடந்தையாக மாறிவிடும் ரெங்கசாமியின் வாழ்க்கை.. “வாங்கிய கடனுக்காக நிலத்தைக் கொடுத்திருப்பா…” என்று சொல்லிவிட்டு எதிர் பதிலையே எதிர்பார்க்காமல் கை நாட்டு வைக்க பத்திரத்தை நீட்டும் காரியக்காரர்.. தனது வேலை இனிமேல் என்ன என்பது தெரிந்தும் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அப்படியே முடுக்கிவிடப்பட்ட ஒரு எந்திரம்போல வந்து தனது சீட்டில் அமரும் ரெங்கசாமியின் நடிப்பு.. – இப்படி இந்தப் படத்தில் இருப்பவைகள் எதுவும் நம் மனதைவிட்டு அகலப் போவதில்லை..

இயக்குநருக்கு பக்க பலமாக பல காட்சிகளில் இயக்குநரையும் மிஞ்சியவராக தனது இருப்பை காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். தான் பிறந்து வாழ்ந்து, உருண்டோடிய அந்தப் பிரதேசங்களை தன் கேமிராவின் கண்களால் எத்தனைக்கு எத்தனை முடியுமோ அந்த அளவுக்கு அழகுபட பதிவாக்கி கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் தேனி ஈஸ்வர்.

இதுவரைக்கும் எத்தனையோ படங்களில் இந்த மேற்குத் தொடர்ச்சி மலையை பார்த்திருந்தாலும் இது காட்டும் சுகானுபவம் வேறு எங்கும் நமக்குக் கிட்டியதில்லை.

விடியற்காலை பொழுதில் எழும் ரெங்கசாமி நடக்கத் துவங்கும்போது கூடவே தானும் நடக்கத் துவங்கும் கேமிரா கடைசிவரையிலும் நிற்கவேயில்லை. அந்த மலை, மலைப் பாதைகள், அதன் விஸ்தாரங்கள். சிறு, குறு மரங்கள்.. செடிகள், பள்ளத்தாக்குகள்.. பேருந்து செல்லும் பாதைகள்.. விளைநிலங்கள்.. மலையில் இருந்து பார்த்தால் கீழே தெரியும் சின்ன இடங்கள். பரந்து விரிந்த கழுகுப் பார்வை என்று கேமிராவின் வேலையை இப்படியெல்லாம் படம் பிடிக்க முடியுமா என்றெண்ணவும் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

தான் வாங்க இருக்கும் நிலத்தை தன் மகனுக்கு சந்தோஷமாக காண்பிக்கும் காட்சியில் கேமிரா காட்டும் கோணமும், அந்த நிலம் இருக்கும் இடமும் ஒரு சந்தோஷ உணர்வை நமக்குக் காட்டுகிறது. அதேபோல் கிளைமாக்ஸில் ரெங்கசாமி தனக்கான கடைசி இருப்பிடத்தில் அமர்ந்தவுடன் பின்னோக்கி நகர்ந்து, நகர்ந்து வந்து தனது கழுகுப் பார்வையில் அந்த இடத்தைக் காண்பிக்கும்போது ஏற்படும் நமது குற்றவுணர்ச்சியுடைய மன உணர்வை வெளிப்படுத்த முடியவில்லை.  

இரவுக் காட்சிகளில் இருக்கும் நேர்த்தி.. பகல் காட்சிகளில் இருக்கும் அழகு.. பரந்து விரிந்த இடங்களைக் காட்டும்போது தெரியும் பிரம்மாண்டம்.. சாதாரண நிலத்தையே ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்டியிருக்கும் தொனி.. என்று இந்தப் படத்தின் ஒளிப்பதிவினை நிச்சயமாக திரைப்பட கல்லூரிகளில் பாடமாகவே வைக்கலாம். சந்தேகமேயில்லை.

ஒளிப்பதிவுக்கு பின்பு அடித்து ஆடியிருப்பது இசைஞானி இளையராஜா. கொஞ்சம், கொஞ்சமாகத்தான் தனது இசையை இதில் இசைக்க விட்டிருக்கிறார். மலையேறும் காட்சிகளிலெல்லாம் கொஞ்சமே வரும் இசை அந்த ஏலக்காய் தோட்டத்திற்குள் திருடர்கள் புகுந்து திருடும் காட்சியில் அவர்களை விரட்டி ஓடும்போது நாமும் சேர்ந்து ஓடுகிறோம் என்று நினைக்கும் அளவுக்கு பரபரப்பை சட்டென்று கூட்டியிருக்கிறார் இசைஞானி.

ரெங்கசாமியின் ஏலக்காய் மூட்டை அந்த நெடிதுயர்ந்த மலை உச்சியில் இருந்து தலைகீழாய் விழுக.. மூட்டை பிரிந்து ஏலக்காய்கள் சிதற.. மலையின் மீது அடிக்கடி மோதி, மோதி, ஏலக்காய்கள் சிதற, சிதற இந்தக் காட்சியை படமாக்கியிருக்கும்விதமும், பின்னணி இசையும் சேர்ந்து இந்தக் காட்சியை பதைபதைக்க வைத்திருக்கிறது.

பாண்டி ஏலக்காயை மூட்டையில் வைத்து கட்ட தனது ஆள்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் காட்சியிலும், அவர் மூட்டையைத் தூக்க முடியாமல் சரிந்து விழுந்த பின்பு மூட்டையில் இருக்கும் ஏலக்காய்களை குறைத்துக் கட்டும் முயற்சியில் மற்றவர்கள் ஈடுபடுவதை அவர் தடுத்து தன்னால் இப்போதும் முடியும் என்று தனது நோய்த் தாக்குதலையும் தாங்கிக் கொண்டு பேசும் பேச்சும், செய்யும் செயலும் மிகச் சிறப்பான இயக்கத்திற்கு எடுத்துக் காட்டு. இருந்தாலும் இந்தக் காட்சியில் படத் தொகுப்பாளர் மிக அழகாக தனது பணியைச் செய்து திறமையைக் காட்டியிருக்கிறார். அவரது கை வண்ணத்தினால்தான் அந்தக் காட்சியை அப்படி ரசிக்க முடிந்திருக்கிறது. பாராட்டுக்கள் படத் தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதனுக்கு..!

சின்ன பட்ஜெட் படம். அறிமுகமே இல்லாத நடிகர்கள். கேமிராவுக்கு முன்பாக நடிக்கவே தெரியாதவர்கள்.. இவர்களை வைத்து கச்சிதமாக நடிக்க வைத்து, அதிலும் அவர்கள் பேசும் வசனங்கள் மிக எளிதாக கேட்கும்படியாக ஒலி வடிவமைப்பை செய்திருக்கும் ஒலி வடிவமைப்பாளருக்கும் நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

வசனங்கள் அனைத்துமே மிக அருமை. மிக எளிமையான, இயல்பான வசனங்களால் அனைவருக்கும் புரியும்வகையிலும் எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி மக்களால் அதிகம் பேசப்படும் வசனங்களாகவும் இருப்பதால் இயல்புத் தன்மை மாறாமல் இருக்கிறது. “மாப்ளை உனக்கு வயசாயிருச்சு.. ரத்தம் சுண்டியிச்சு…” என்று ஒருவர் பாண்டியிடம் சொல்லும்போது, “போய் உன் தங்கச்சியை கேளு மச்சான்…” என்று அவர் பதிலுக்கு படாரென்று சரவெடியைக் கொளுத்திவிட்டுப் போகும்போது தியேட்டரே அதிர்கிறது..!

மலை, இயற்கை, காற்று, பறவைகளின் சப்தம் என்று இயற்கையோடு இயைந்திருந்த ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட படத்தில் அந்த லைவ் ரெக்கார்டிங்கை போல ஒலியை பின்னணியில் வடித்துக் கொட்டியிருக்கும் இசைஞானியை கை தூக்கி தொழுகிறோம். வாழ்க நீ எம்மான்..!

ஒவ்வொரு சராசரி மனிதனும் தன்னுடைய இயலாமையை எண்ணி வருத்தப்படக் கூடிய நிலைமைக்கு தள்ளுகிறது இத்திரைப்படம் காட்டும் முடிவுக் காட்சி.

உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் இந்தியாவை எப்படியெல்லாம் நாசப்படுத்தி வருகிறது என்பதற்கு இந்தப் படத்தைவிடவும் வேறு படத்தை உதாரணமாகக் காட்டிவிட முடியாது.

படிப்பறிவில்லாதவனாக இருந்தாலும், உழைப்பதற்கு தயங்காதவனாக இருக்கும் ஒரு குடியானவனை விவசாயத்தின் தேவையே இல்லாத அரசுகள் எப்படி வீழ்த்துகின்றன என்பதை நாம் புரியும்வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லெனின் பாரதி.

இப்போதே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விவசாயத் தொழில் நசிந்து வருகிறது. விவசாய நிலங்களையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது கருணையற்ற கரங்களால் வளைத்துப் பிடித்து பிளாட்டுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

காற்றும், மழையும் ஒரு சேர தானாக வந்து விழுந்து கொண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற மலைப் பிரதேசங்களில் இதே கார்ப்பரேட் நிறுவனங்கள் விண்ட் மில் எனப்படும் காற்றாலைகளை மிக வேகமாக நிறுவி வருகின்றன. இந்த காற்றாலைகளால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பல விவசாய நிலங்கள் விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு ஏஜெண்டுகளால் வாங்கப்பட்டு அது பெரும் முதலாளிக்கு அதிகத் தொகைக்கு விற்கப்பட்டு இப்படியும் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு, அழிக்கப்பட்டும் வருகின்றனர்.

இதைத்தான் இத்திரைப்படம் எடுத்துக் காட்டியிருக்கிறது. தான் இதுவரையில் சொந்தமாக வைத்திருந்த நிலம்.. தான் இரவு, பகலாக விவசாயம் செய்து.. உழைத்து.. தன் குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டிருந்த அந்த நிலம்.. ஒரு பைசாகூட கொடுக்கப்படாமல் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது என்பது தெரிந்தும், எதிர்த்து பேசும் அறிவில்லாமல், துணிவில்லாமல்.. தாரை வார்த்துவிட்டு அதே நிலத்தை பாதுகாக்கும் செக்யூரிட்டியாக அமரும் துர்பாக்கியம் இருக்கிறதே.. இது நிச்சயமாக உலக விவசாயத் தோழர்களில் ஒருவருக்குக்கூட ஏற்படக் கூடாது.  இன்னொரு ரங்கசாமியை உருவாக்காமல் தடுக்க என்ன  செய்ய வேண்டும் என்று யோசியுங்கள் என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் லெனின் பாரதி. யோசிப்போம்..! தேர்தல் களத்தில் அதைச் செயல்படுத்துவோம்..!

கம்யூனிஸம் பேசுகிறது என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே அனைத்து பிரிவுகளிலும் அனைத்து விருதுகளையும் வாங்கும் அளவுக்குத் தகுதியுடைய இந்தப் படத்தை தேசிய விருதுப் பட்டியலில் இருந்தே நீக்கிய இந்திய தேசிய திரைப்பட கழகத்தையும், அதன் உறுப்பினர்களையும், கலையுலகத்தில் இருந்து கொண்டே அரசுக்கு ஒத்து ஊதியிருக்கும் தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு முதலாளித்துவ ஆட்சியில் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்காது என்பதற்கு இந்தப் படம் புறக்கணிப்பட்டது ஒரு சிறந்த சாட்சிமாக அமைந்திருக்கிறது..!

மேற்குத் தொடர்ச்சி மலை – ஒரு சாதாரண திரைப்படமல்ல. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலைமை. இந்திய விவசாயிகளின் நிலைமை. இதை உலகிற்கு உணர்த்தியிருக்கும் ஒரு அழகான சிறுகதை..!

இந்த மேற்குத் தொடர்ச்சி மலை, நிச்சயமாக ஒரு நாள் விந்திய மலைத் தொடரையும் அசைக்கும்..! அசைத்துக் காட்டும்..!

Our Score