பூனையின் உடலுக்குள் புகுந்து ஆவி செய்யும் அட்டகாசம்..!

பூனையின் உடலுக்குள் புகுந்து ஆவி செய்யும் அட்டகாசம்..!

‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’  சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ்  தயாரிப்பில், பிரபல விளம்பர பட இயக்குநரான சின்னாஸ் பழனிச்சாமி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மியாவ்.’

with-raja-7

இந்த ‘மியாவ்’ படத்தில் புதுமுகம் ராஜா, ‘சன் மியூசிக்’ புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி மற்றும் ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் போஜன் கே.தினேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இடவனா, படத் தொகுப்பாளர் சதிஷ் சூர்யா, கிராபிக்ஸ் – ரமேஷ் ஆச்சார்யா, கலை இயக்குநர் ஆறுசாமி, நடன இயக்குநர் ஷெரீப், பாடலாசிரியர்கள் விவேக் வேல்முருகன் – நவீன் கண்ணன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என்.ஜே.சத்யா  என பல  திறமை வாய்ந்த  தொழில் நுட்ப கலைஞர்கள் ‘மியாவ்’ படத்தில் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. 

இதுவரையிலும் உயிருடன் இருக்கும் மனிதர்களின் உடலில் ஆவி புகுந்து அவர்களை ஆட்டுவிப்பதுதான் பேய்ப் படங்களின் எழுதப்படாத திரைக்கதையாக இருந்த்து. இப்போது முதல் முறையாக மனிதரில் இருந்து விலங்கினத்திற்கு பேயைக் கடத்தியிருக்கிறார்கள்.

ஒரு பூனையின் உடம்புக்குள் இளம் பெண் ஒருவரின் ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை  பழி வாங்கினால் எப்படி இருக்கும். இதுதான் இந்த ‘மியாவ்’ படத்தின் கதை.

படம் பற்றி இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி பேசும்போது, “முதலில் நாங்கள் கதையை யோசிக்கும்போது நாயை மையமாக வைத்துதான் யோசித்தோம். பின்பு அதே பாணியில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்துவிட்டதால் சற்று வித்தியாசமாக பூனையை மையமாக வைத்து எடுத்தால் என்ன என்று யோசித்தோம். அதையே செயல்படுத்தியிருக்கிறோம்.

இந்தப் படத்தில் பூனைதான் ஹீரோ. பெர்ஷியன் டைப் பூனையை இதில் நடிக்க வைத்திருக்கிறோம். நாயை பழக்கி நடிக்க வைப்பதுபோல பூனையை நடிக்க வைக்க முடியாது என்பதால் பல காட்சிகளை மிகப் பெரிய பொருட் செலவில் கிராபிக்ஸில் வடிவமைத்திருக்கிறோம்.

இது த்ரில்லர் கலந்த ஒரு பேய்க் கதை. பொதுவாக சினிமாக்களில் பேய்கள் மனித உடலில் புகுவதென்றால் ஹீரோயின்களான த்ரிஷா, ஹன்ஸிகா மாதிரியானவர்களின் உடலில் புகுந்து ஆட்டுவிப்பதாகத்தான் கதை இருக்கும். ஆனால்  இந்தப் படத்தில் முதல்முறையாக ஒரு இளம் பெண்ணின் பேய் பூனையின் உடலில் புகுந்து ஆட்டம் காட்டுகிறது.

பேய் இருக்கிறது என்பதாலேயே மந்திரவாதி, பேய் ஓ்ட்டுதல், சுடுகாட்டு காட்சிகள் போன்றவைகளெல்லாம் இதில் இல்லவே இல்லை.

தன்னை ஏமாற்றி நண்பர்களுக்கும் விருந்தாக்கிய தனது காதலன் மற்றும் அவனது 3 நண்பர்களை அந்த இளம் பெண்ணின் ஆவி பூனை உருவத்தில் இருந்து எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை. பூனை பழி வாங்கும்விதம் காட்சிகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், காதல் விஷயத்தில் பெண்கள் யாரையும் எளிதில் நம்பி ஏமாந்துவிடக் கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் மூலமாக நாங்கள் சொல்லும் விஷயம்.

படம் மொத்தமே 2 மணி நேரத்திற்குள்தான் இருக்கிறது. வரும் டிசம்பர் 30-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட எண்ணியுள்ளோம்..” என்றார்.

நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் ‘மியாவ்’ படத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவரான கலைப்புலி எஸ்.தாணு பாராட்டியிருப்பது, இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் கூடுதல் பலமாகும்.

தயாரிப்பாளர் தாணு இந்த மியாவ் படம் பற்றி பேசும்போது, “தயாரிப்பு துறையில் அடியெடுத்து  வைக்கும் வின்சென்ட் அடைக்கலராஜிற்கு இந்த ‘மியாவ்’ படம் ஒரு சிறந்த அடிக்கல் என்றே சொல்லலாம். இவருடைய அண்ணன் பிரான்சிஸ்தான் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இப்போது இவரும் உள்ளே நுழைந்துள்ளார். இவரையும் வருக, வருகவென வரவேற்கிறேன்.

நிலையான தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால் பதிக்க தேவையான எல்லா சிறப்பம்சங்களும் அவருக்கு இருக்கின்றது. அதற்கு இந்த ‘மியாவ்’ திரைப்படம் ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படத்தில் முதல் முறையாக ஒரு பூனை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது என்பதை கேட்டவுடன், எனக்கு ‘மியாவ்’ படத்தின் டிரைலரை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பார்த்தேன். தொடர்ந்து படத்தை பார்த்தவுடன் திகைப்பாக இருந்தது. படம் நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கக் காத்திருக்கிறது..” என்று புன்னகையுடன் கூறினார்.

Our Score