full screen background image

மெமரீஸ் – சினிமா விமர்சனம்

மெமரீஸ் – சினிமா விமர்சனம்

ஷிஜூ தமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் ஷிஜூ தமீன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோவான வெற்றி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், ஹரீஸ் பெராடி, ஆர்.என்.ஆர்.மனோகர், டயானா, பார்வதி அருண், சஜீல் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ஷிஜு தாமீன்ஸ், ஒளிப்பதிவு – ஆர்மோ & கிரன், படத் தொகுப்பு – சேன் லோகேஷ், இசை – கவாஸ்கர் அவினாஷ், வசனம்- அஜயன் பாலா, திரைக்கதை-  ஷாம் பிரவீன் மற்றும் விபின் கிருஷ்ணன், கலை இயக்கம் – தென்னரசு, சண்டை இயக்கம் – அஷ்ரஃப் குருக்கள், தயாரிப்பு மேலாண்மை – எஸ்.நாகராஜன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு- முகேஷ் ஷர்மா, பத்திரிகை தொடர்பு – சதீஷ் (எய்ம்).

கெடுவான் கேடு நினைப்பான்’ என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. அறிவியலை ஆக்கப்பூர்வமான காரியத்துக்கு பயன்படுத்த வேண்டிய ஒரு சயிண்டிஸ்ட், அதை தன் சுயநலத்துக்காக, அழிவு காரியத்துக்காக பயன்படுத்துகிறான். அதே அறிவியல் கடைசியில் அவனை அதே வழியிலேயே அழிக்கிறது. இதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.

ஒரு மனிதனின் மூளைக்குள் இருக்கும் நினைவுகளை அறிவியல் மற்றும் மருத்துவம் மூலமாக அழித்து, வேறு நினைவுகளை அதில் பதிவு செய்து வைக்க முடியும் என்ற அதிர்ச்சியான கான்செப்ட்டை மையக் கருவாக வைத்துப் பேசியிருக்கிறது இந்த மெமெரீஸ்’ படம்.

ஒரு தனியார் டிவியில் நடத்தப்படும் மெமரீஸ்’ என்ற ஷோவின் மூலமாக ஒருவனது வாழ்க்கையில் நடைபெற்றிருக்கும் மர்மங்களை நாயகன் வெற்றி, நேயர்களுக்குச் சொல்கிறார். அந்தக் கதைகள் காட்சிகளாக விரியும்போது அதில் கதாப்பாத்திரமாக வருபவரும் வெற்றிதான்.

அந்தக் கதையில் வெற்றி நான்கு கொலைகளை செய்கிறார். அவர் செய்த கொலைகளுக்கான காரணம் என்ன? உண்மையில் அந்தக் கொலைகளை அவர்தான் செய்தாரா? இல்லை.. அவர் நினைவில் அந்தக் கொலைகளை அவர் செய்ததாக புகுத்தப்பட்டுவிட்டதா..? என்ற மர்மமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறது மீதிப் படம்.

இந்தப் படத்தை சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளனர் இயக்குநர்கள். மிகச் சிக்கலான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்றுதான் இந்த ‘மெமரீஸ்’ படத்தைப் பற்றி படக் குழுவினர் விளம்பரப்படுத்தினர். அதற்கு ஏற்றாற்போலே அமைந்துள்ளது திரைக்கதை. அதே சமயம் பார்வையாளர்கள் சில நிமிடங்கள் திரையைப் பார்க்கவில்லையென்றால்கூட படம் புரியாமல் போகும் அபாயம் உண்டு.

மூன்று கதைகள் நமக்குக் காட்டப்படுகின்றன. வெற்றி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தில் வருகிறார். முதல் கதையில், மருத்துவர் பெருமாளின் குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த நான்கு கொலைகளையும் செய்தது உதவி இயக்குநரா வெங்கிதான் எனத் தெரிய வருகிறது. வெங்கிக்கோ, விபத்தில் ‘மெமரி லாஸ்’ ஏற்பட்டுவிட, மருத்துவர் அபிநவ் ராமானுஜம் வெங்கியின் நினைவைத் தட்டியெழுப்பி, அவன் புரிந்த கொலைகளைப் பற்றி  அவனையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைக்கின்றார்.

இரண்டாவது கதை, நான்கு கொலைகளையும் செய்தது வெங்கி அல்ல என்று 8 வருடங்களுக்குப் பிறகு, அவ்வழக்கை தூசி தட்டி எடுக்கும் போலீஸ் உயரதிகாரியான ஆதி கேஷவ் கண்டறிகிறார். மேலும், மருத்துவர் அபிநவ் ராமானுஜம்தான் வெங்கியின் நினைவினை அழித்து, நடக்காததை நடந்தது போல் வெங்கியின் மூளையில் ‘மெமரி மேப்பிங்’ செய்திருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்கிறார் ஆதி கேஷவ்.

மூன்றாவது கதை, கோமாவில் இருந்து விழித்த பின்பும், பேச்சு வராமல் ஓவியம் வரைந்து கொண்டேயிருக்கும் மருத்துவர் ராமானுஜத்தை உண்மையை ஒத்துக் கொள்ள வைக்க போலீஸ் உயரதிகாரி ஒருவரும், மருத்துவர் ஒருவரும் முயற்சி செய்கின்றனர். அது அவர்களால் முடிந்ததா..? இல்லையா..? என்பதை சொல்கிறது.

துவக்கத்திலேயே மெமரீஸ்’ ஷோவில் கதை சொல்லும் வெற்றி, மூன்று கதைகளிலுமே தானே ஒரு கதாபாத்திரமாக வருகிறார். ஷோவில் கதை சொல்பவராக, வெங்கியாக, ஆதி கேஷவாக, அபிநவ் ராமானுஜமாக நான்கு கெட்டப்பில் வருகிறார்.

இயக்குநர்களின் நம்பிக்கைக்கு எந்தக் குறையும் வைக்காமல், நான்கு கெட்டப்களிலும் வித்தியாசத்தினைக் காட்டியுள்ளார் வெற்றி. உருவத்தில் வித்தியாசத்தை காட்டியிருப்பது போல், நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். குறிப்பாக வெற்றி யார் என்ற உண்மையான கடைசி கதையில் அவருடைய நடிப்பு பாராட்டும்படி உள்ளது. 

கிரைம், திரில்லர் ஜானர் திரைப்படங்கள் என்றாலே வெற்றிதான் சரியாக இருப்பார் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் வெற்றி நடித்து வருவதால், அவருடைய நடிப்பும் நமக்கும் ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது.

இனி இது போன்ற படங்களில் நடிப்பதை வெற்றி குறைத்துக்கொண்டு கமர்ஷியல் படங்களில் சராசரியான கதாபாத்திரங்களில் நடித்தால் அவரது நீண்ட கால திரையுலக வாழ்க்கை நலமாக இருக்கும்.

ஒரு நாயகியாக நடித்திருக்கும் பார்வதி கதையில் ஒரு கதாபாத்திரமாக வந்தாலும் அவருக்குப் பெரிய அளவுக்கான நடிப்பைக் காண்பிக்க திரைக்கதையில் இடமில்லை. ஆனால் பார்வதியை கதைக்குள் பயன்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது. யாரோடு ஜோடியாக அறிமுகம் ஆகிறாரோ, அவரையே கைது செய்ய உதவும் மருத்துவராகவும் அவர் வருவது அழகான காட்சி அமைப்புதான்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் டயானா, ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஆர்.என்.ஆர்.மனோகர், சாஜில் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு கதையிலும் மாறி, மாறி வந்து நமக்குப் புரியாத புதிராக அமைந்துவிட்டதால் அவர்களின் நடிப்பைப் பற்றி நம்மால் கணிக்க முடியவில்லை.

ஒளிப்பதிவாளர்கள் அர்மோ மற்றும் கிரண் நிபிடல் இருவரும் வெற்றியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓடியிருக்கிறார்கள். காடு, மலை என அலைந்திருக்கும் கேமரா கதை பயணிக்கும் பாதையில் பங்கம் இல்லாமல் பயணித்திருக்கிறது. போலீஸ் துரத்தல் காட்சிகளை நமக்கு அடிவயிற்றில் பயம் வரும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மிகச் சவாலான பணியான படத் தொகுப்பை கச்சிதமாகச் செய்துள்ளார் படத் தொகுப்பாளர் சான் லோகேஷ். படம் பார்க்கும் ரசிகர்களைவிடவும் எடிட்டர்தான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பார் என்பது உறுதி.

இது போன்ற த்ரில்லர் படங்களின் நாடியே பின்னணி இசைதான் என்பதை உணர்ந்து பின்னணி இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ்.  

கத்தி மேல் நடப்பது போன்ற திரைக்கதையில், க்ளைமேக்ஸில்  முடிச்சை அவிழ்க்க வேண்டிய பதற்றத்தில் சரியான காட்சிகளை அமைப்பதைவிட்டுவிட்டு வசனத்தின் துணையோடு படத்தை முடித்துள்ளனர் இயக்குநர்கள்.

வசனகர்த்தாவான அஜயன் பாலாவும் எளிமையான வசனங்களை எழுதியுள்ளதால் நம்மால் கதையோடு ஒன்ற முடிகிறது. வெற்றி தன்னுடைய ஒரு தலைக் காதலை வெளிப்படுத்தும்போது பேசும் வசனங்கள் சிறப்பாக அமைந்துள்ளது.

ஒரு எளிமையான கதையை குழப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக்கி, அதை தெளிவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.

மனித நினைவுகளை மாற்றி வைத்து அதன் மூலம் மிகப் பெரிய குற்றச் செயல்கள் செய்ய முடியும் என யோசித்து ஒரு அட்டகாசமான லைனைப் பிடித்துள்ளார்கள் இயக்குநர்கள் ப்ரவீனும், ஷ்யாமும்.

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சிப்புகள் போன்று, மனித மூளையிலும்  டேட்டாக்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நினைவுகளில் மாற்றங்கள் செய்வது என்கிற அசாத்தியமான அறிவியல் கண்டுபிடிப்பு எப்படி சுய நலத்திற்கும் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை காவு வாங்குகிறது என்கிற சிக்கலான விஷயத்தை, அதே அளவுக்கு சிக்கலான திரைக்கதையுடன் இயக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.

படத்தில் காண்பிக்கப்படும் மூன்று கதைகளில், இரண்டு காட்சிகளாகக் காண்பிக்கப்படுகின்றன. ஒரு கதை மட்டும், மூளையில் திணிக்கப்பட்டதாக நமக்கு சொல்லப்படுகிறது.

இது திரில்லர் படம் என்பதால், படத்தின் கிளைமாக்ஸில்தான் சிக்கல் அவிழ்க்கப்பட வேண்டும் என்ற பொதுவான நிர்ப்பந்தம் இருப்பதால், படம் எதை நோக்கிச் செல்கிறது என்ற தெளிவின்மை படத்தின் சுவாரசியத்தை பெரிதும் குறைத்துவிட்டது.

கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் படம் என்றாலே பல திருப்புமுனைகள் இருக்கும், ஆனால் இந்தப் படத்தில் கதையையே திருப்புமுனையாக மாற்ற நினைத்திருக்கும் இயக்குநர்கள் ஒரே கதையை பல முறை, பல்வேறு நடிகர்களை வைத்து சொல்லியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, சற்று சலிப்படையவும் செய்கிறது.

இருப்பினும், வெற்றி யார் என்ற கேள்வி படத்தின் துவக்கம் முதல் முடிவுவரை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று ரசிக்க வைத்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் உழைத்திருந்தால் நல்ல ஒரு த்ரில்லர் படமாக வந்திருக்கும். தற்போது குழப்பமே மிஞ்சி இருக்கிறது.

படத்தின் துவக்கத்தில் சிலந்தி வலை ஒன்றை உருவாக்குகிறது. இடைவேளையில் அந்த வலையில் பூச்சி ஒன்று சிக்கிக் கொள்கிறது. முடிவில் சிலந்தி பூச்சியைக் கொல்ல முயலுபொழுது, அந்தப் பூச்சி தப்பி விடுகிறது. மொத்தக் கதையையும் இந்த அழகான குறியீட்டில் சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர்கள்.

ஹாலிவுட் பட ஸ்டைலில் இப்படியொரு கதையை யோசித்திருக்கும் இயக்குநர்கள், தமிழ் சினிமா ரசிகர்களின் மனவியலையும் அறிந்து அதற்கேற்றாற்போல் எளிமையான, புரிந்தாற் போன்று திரைக்கதையையும் அமைத்திருந்தால் நம்முடைய மெமெரீஸில்கூட அழிக்க முடியாத படமாக இது அமைந்திருக்கும்.

ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் படத்தைப் புரிஞ்சுக்கணுமா என்ற அளவில் ரசிகர்களை சற்றுத் திணற வைத்திருக்கும் திரைக்கதைதான், இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வில்லனாக அமைந்துள்ளது.

RATING : 2 / 5

Our Score