full screen background image

மெல்லிசை – சினிமா விமர்சனம்

மெல்லிசை – சினிமா விமர்சனம்

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘வெப்பம் குளிர் மழை’ படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த ’மெல்லிசை’ படத்தையும் தயாரித்துள்ளது.

திரவ் எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் கிஷோருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புதுமுகங்கள் தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன் மற்றும் கண்ணன் பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜன் இசையும், தேவராஜ் ஒளிப்பதிவும் இந்தக் கதைக்கான ஆன்மாவை திரையில் கொண்டு வந்துள்ளது.

பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் தீவிரமான கதாபாத்திரங்களிலும் பார்த்து பழகிய நடிகர் கிஷோர் இந்தப் படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் தான் நினைத்த இடத்தை அடைவதற்கு அவன் மட்டுமே காரணமாக இருந்துவிட முடியாது. அவனுக்கு பின்னணியில் அவனை தூக்கி விடுவதற்கும் அவருடைய குடும்பத்தினர் உறவினர்கள், சுற்றத்தார் என்று அனைவருமே அவன் மீது அன்பு காட்டி அரவணைத்து கை கொடுத்து தூக்கி விட்டிருக்க வேண்டும். அப்படி ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் ஒரு எளிய மனிதனின் கதைதான் இந்த மெல்லிசை திரைப்படம்.

ஹீரோ கிஷோர் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சுபத்திராவும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள். இவர்களும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

ஹீரோ கிஷோருக்கு சிறு வயதிலிருந்தே தான் மிகப் பெரிய பாடகனாக வர வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக அவர் பெரிது முயற்சி எடுத்து இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக இப்போது உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஆனாலும் அப்பாவின் பாடகர் ஆசையை தெரிந்து கொண்ட அவரது மகள் அவரை மேலும் மேலும் உசுப்பேற்றிவிட தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெறும் பாட்டுக்கு பாட்டு போன்ற பாடகர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசு மேல் பரிசு பெற்றுக் கொண்டே இருக்கிறார் கிஷோர். இதற்காக அவர் பள்ளியில் இருந்து அவ்வப்பொழுது விடுமுறை எடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இந்தப் பாட்டு போட்டியில் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் வரும் பொழுது பள்ளியின் தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்குப் போக… வேறொரு தலைமை ஆசிரியர் வந்தமர்கிறார். அவருக்கு கிஷோரை சுத்தமாக பிடிக்காமல் போகிறது. “பள்ளியில் இருந்து விலகிக் கொண்டு நீங்கள் பாடச் செல்லுங்கள்” என்று முகத்துக்கு நேராக சொல்கிறார் தலைமை ஆசிரியர்.

ஆனால், தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டு வேலையை விடக்கூடாதே என்று தவியாய் தவிக்கிறார் கிஷோர். இதற்கு அடுத்து கிஷோர் என்ன செய்தார்..? பட்டுப் போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்தாரா? அல்லது வேலையை ராஜினாமா செய்தாரா? அவருடைய குடும்பத்தினர் என்ன சொன்னார்கள்? என்ன செய்தார்கள்..? என்பதுதான் இந்த ‘மெல்லிசை’ என்ற மெல்லிய கதையோட்டம் கொண்ட படத்தின் திரைக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர் ஒரு ஆசிரியராக தன்னுடைய பணியை தொடர்ந்து செய்தாலும் தன் மனதுக்குள் நிறைவேறாத சிறந்த பாடகன் என்கின்ற அந்த ஆசையை, ஏக்கத்தை… எப்படியாவது தீர்த்துவிட வேண்டும் என்று அவர் சாதிக்க நினைக்கின்ற துடிப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது. அந்தத் துடிப்பை தன்னுடைய ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு நடிப்பிலும் நுட்பமான முறையில் கொடுத்திருக்கிறார் கிஷோர்.

தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்ற துடிக்கும் வேளையில், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் பள்ளி ஆசிரியர் பணியையும் புதிதாக கிளம்பி வந்து தன்னுடைய ஆசைக்கு அணைக்கட்டு போடும் தலைமை ஆசிரியரிடம் பேசும்பொழுது தன்னுடைய இயலாமையை மிக அழகாக காட்டியிருக்கிறார். அந்த காட்சிகளில் அவருடைய குரல் வளமும் சேர்ந்து நடித்திருக்கிறது.

தன்னுடைய மனைவி, மகள், பிள்ளைகள் மீது அவர் காட்டுகின்ற அந்த பாசமும்… பாடகனாக வேண்டும் என்கின்ற வெறியில் பாடல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கின்ற நடிப்பும், துடிப்பும்.. இவர் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார். அந்த வகையில் கிஷோரின் நடிப்பு இந்தப் படத்தில் சிறப்பு என்றே சொல்லலாம்.

கிஷோருக்கு ஏற்ற மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட், ஒரு குடும்பத் தலைவியாக குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு கணவரையும் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் பார்க்க வேண்டிய அந்த பொறுப்பினை சுமக்கின்ற பொழுது நம்முடைய பரிதாபத்தை மிக எளிதாக பெற்று விட்டார்.

தன்னுடைய கணவருடன் அவ்வப்பொழுது அவர் பேசுகின்ற காதல் பேச்சுக்கள் மிக, மிக நாகரீகமானவை. அவருடைய திருமண நாளை பற்றி அவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பேசுகின்ற பொழுது அந்தக் காட்சிகள் அவர்கள் இருவரை தவிர யாரும் இல்லாத அந்த படப் பதிவு ஃபஸ்ட் கிளாஸ் சீன் என்றே சொல்லலாம்..

கிஷோரின் மகளாக நடித்திருக்கும் தனன்யாவும், மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டனும், சின்ன வயது கதாபாத்திரத்தில் மிக அழகாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களான பின்பு தன்னுடைய அம்மாவும், அப்பாவும் வாழ்ந்த அந்த வீட்டை தாங்கள் எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கும் அந்த துடிப்புக்கு பின்னால் இருக்கும் கதைதான் இந்த படம் என்கின்ற பொழுது அதையும் அழகாகவே செய்திருக்கிறார்கள்.

பணத்தைக் கடனாக கொடுத்திருக்கும் ஹரிஷ் உத்தமனும் பள்ளியில் இன்னொரு வாத்தியாராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியனும், புதிய தலைமை ஆசிரியராக வந்திருப்பவரும் அழகாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு காட்சி என்றாலும் ஜார்ஜ் மரியான் பேச்சை வளர்த்து சண்டையாக உருவாகி விடக்கூடாது என்பதற்காக ஐக்கியமாக பேசி கிஷோரை வெளியில் அழைத்து வரும்பொழுது சபாஷ் போட வைக்கிறார்.

தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட இவரைவிட்டால் வேறு சிறந்த ஆசிரியர் நமக்கு கிடைக்கமாட்டார் என்று மற்ற ஆசிரியர்கள் சொன்னதால் மீண்டும் கிஷோருடன் கை கொடுக்கும் தலைமை ஆசிரியரை நமக்கும் பிடித்துப் போய் விடுகிறது.

இந்த தம்பதிகளுக்கு நிகழ்ந்த கொடுமை நிச்சயம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் நம்முடைய விருப்பம். அதுபோல இந்தப் படத்தில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை காட்டும்போது பாவமாக தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவில் எந்த ஒரு குறையும் இல்லாமல் பட்ஜெட் படங்களுக்கு ஏற்ற ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.

தலைமை ஆசிரியர் அறை மற்றும் கிஷோரின் வீடு இவைகளை திரும்பத் திரும்பக் காட்டினாலும், அதில் நமக்கு கொஞ்சமும் போர் அடிக்காத வகையில் கேமரா குணங்களை இதுவரையில் பார்க்காதவிதமாக எல்லாம் வைத்து, நம்மை கடைசிவரையிலும் திரையில் இருந்து கண்ணை அகல விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜனின் இசையில் பாடல் வரிகள் அனைத்துமே மிக மிக எளிமையானவை. மிக அழகாக நம்முடைய காதுகளில் புரியும் வகையில் விழுகின்றன. இவ்வளவு அழகான வரிகளை காதுகளில் கிடைக்கும் வகையில் இசையமைத்திருக்கும் இசையமைப்பாளரின் பணி பாராட்டுக்குரியது. அதேபோல் பின்னணி இசையும் கதையோடு இணைந்து பயணித்திருப்பதால் நமக்கு இடைஞ்சலாகவோ, உறுத்தலாகவோ இல்லை.

இந்தப் படத்தின் இயக்குநரே, படத் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருப்பதால் அவசியம் இல்லாத எந்த ஒரு ஷாட்டும் படத்தில் இல்லை. இருக்கின்ற அத்தனை காட்சிகளுமே படத்தின் கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறது.

ஒரு சராசரி மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை மனதில் எடுத்துக் கொண்டு அதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடிக்கிறான். போராடுகிறான். அவனுடைய அந்த லட்சியத்துக்கு அவனுடைய குடும்பம் மட்டுமன்றி அவனை சுற்றியிருக்கும் அனைவருமே உதவி செய்தால் நிச்சயம் அவன் ஒரு சிறந்த மனிதனாக வருவான்.

இதற்கு தேவை ஒன்றே ஒன்றுதான் அதுதான் அன்பு. பிறர் மீது நாம் வைக்கின்ற அன்பு அவனை உயர்த்தி விடும் என்றால் அதை நாம் காட்டுவதில் கஞ்சத்தனம் செய்யக் கூடாது. அந்த அன்புதான் அனைவரையும் அரவணைக்கும் என்பதை இந்தப் படத்தில் இந்த சின்ன கதையை மூலமாக சொல்லி இருக்கும் இயக்குநருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

படத்தில் இடம் பெற்று இருக்கும் அத்தனை பேரும் தங்களுடைய அன்பை மிகச் சரியான நேரத்தில் மற்றவர்கள் மீது செலுத்துகின்ற விதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

நாமும் பதிலுக்கு இந்தப் படத்தின் இயக்குநர் மீதும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மீதும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீதும், தியேட்டருக்கு சென்று இந்தப் படத்தைப் பார்த்து நமது அன்பை விதைப்போம். நாளை அதையே நாம் அறுவடையும் செய்வோம்..!

RATING : 4 / 5

Our Score