‘மீசைய முறுக்கு’ படம் ‘ஹிப்ஹாப்’ தமிழாவின் வாழ்க்கைக் கதை போலிருக்கும்..!

‘மீசைய முறுக்கு’ படம் ‘ஹிப்ஹாப்’ தமிழாவின் வாழ்க்கைக் கதை போலிருக்கும்..!

அவ்னி மூவிஸ் சுந்தர்.சி  தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘மீசைய முறுக்கு.’

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து, இசையமைத்து, கதை - திரைக்கதை - வசனம் - பாடல்களை எழுதி இயக்கியிருக்கிறார் ‘ஹிப்ஹாப்’ தமிழா.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகிகளான  ஆத்மீகா, மனிஷா, நடிகர் விக்னேஷ் காந்த், தயாரிப்பாளர் சுந்தர்.சி., ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன், படத் தொகுப்பாளர் பென்னி ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

meesiya murukku movie audio function

விழாவில்  தயாரிப்பாளர் சுந்தர்.C பேசும்போது, "கிளப்புல மப்புல’  பாடல் வெளியான நேரத்தில் நான் ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதியை சந்தித்தேன். அவர் ஏதோ பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் பழைய ஜீன்ஸ், டீ- ஷார்ட் போட்டுக் கொண்டு என்னை சந்திக்க வந்தார் ஆதி.

முதலில் ‘ஆம்பள’ படத்தில் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்களை நியமிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். இதனால் ஆதியிடம் ‘ஆம்பள’ படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டும்  என்று கூறினேன்.

ஆனால் ஆதி, ‘நான்தான் அனைத்து பாடல்களுக்கும் இசையமைப்பேன்’ என்று என்னிடம் கூறினார். முதலில் ஆதி இசையமைத்த ‘பழகிக்கலாம்’ பாடலை கேட்டேன். நன்றாக இருந்தது. இதன் பின்பு நானும் அவரிடம் ‘சரி’ என்றேன். அவர் சொன்னது போலவே ‘ஆம்பள’ படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது.

அப்போது நடந்த ‘ஆம்பள’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘ஆதியை நான் கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளேன்’ என்று உங்களிடம் கூறினேன். அது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அன்று நான் சொன்னது, இன்று நிறைவேறிவிட்டது. ஆதி இன்று கதாநாயகனாக, இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஆதி, இந்த கதையை என்னிடம் கூறியதும், எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதியின் பயோகிராபி போல் இருக்கும். கொஞ்சம் கற்பனை கதை... நிறைய உண்மை கதை... இதுதான் ‘மீசைய முறுக்கு’ திரைப்படம்.

ஆதியை மிகப் பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஆதி தன்னோடு மியூசிக் வீடியோவில் பயணித்த அதே டீமோடு பயணிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.

அவர் சொன்னது போலவே இந்த குழு சிறப்பாக பணியாற்றி நல்ல படத்தை எடுத்துள்ளது. யூ டியூப் ஸ்டார்ஸ் பலரும் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள்.

படத்தில் எனக்கு சாராவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. நான் சாராவின் ரசிகன். பாடல்கள், படமென்று அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. வருகிற ஜூலை 14-ம் தேதி வெளியாகும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டும்…" கூறினார் தயாரிப்பாளர் சுந்தர் C .

IMG_9795

விழாவில் ஹீரோவும், இயக்குநருமான ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி பேசும்போது, "இண்டிபெண்டண்ட் மியூசிக்கில் ஆரம்பித்து, திரைப்பட இசையமைப்பாளராகி, தற்போது ஹீரோ மற்றும் இயக்குநராக இந்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன்.

இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்.C அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். நான் கதாநாயகனாக  அறிமுகமாகும் இந்த படத்தை மிகப் பெரிய தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு தயாரிக்க வேண்டும் சுந்தர்.C சார் என்னிடம் கூறினார்.

ஆனால் எனக்கு என்னுடன் பல ஆண்டுகளாக இனைந்து பயணிக்கும் குழுவோடு நான் இந்த படத்தில் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியவுடன் அதுவும் நன்றாகத்தான் இருக்கும் என்று உடனே ஒப்புக் கொண்டார் சுந்தர்.c சார்.

இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் நான் சுந்தர்.C சாரிடம் கேட்ட நடிகர் விவேக் சார்தான். விவேக் சார்தான் என் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தது போலவே அவரும் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் மிகச் சிறப்பாக இருக்கும்.

படத்தின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. என்னை போல் யூ டியூப் மூலம் புகழ் பெற்ற பலர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். குறும்படம் எடுத்து எப்படி பலர் ஒரு டீமாக சினிமாவுக்குள் நுழைந்தார்களோ... அதே போல் இப்போது யூடியூப் மூலம் சென்சேஷனான நாங்களும் சினிமாவுக்கு வந்துள்ளோம். எங்களை போல் இன்னும் பலர் வருவார்கள். அதற்கு இந்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் உதாரணமாக இருக்கும்.." என்றார் ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி.