இந்தியாவின் முதல் டாக்கி மோஷன் போஸ்டரை ‘மீன்’ திரைப்படக் குழு வெளியிட்டது
நவீன தொழில்நுட்ப யுகத்தில் திரைப்படங்கள் வெவ்வேறு வகையில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. கருப்பு வெள்ளை போஸ்டர் காலம்போய் ஈஸ்ட்மேன் கலரும் மாறி இன்று சமூக வலைத்தளங்களுக்கு ஏற்ப மோஷன் போஸ்டர்கள் வலம் வந்தவண்ணம் இருக்கின்றன.
கோச்சடையான், காக்கிசட்டை, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களுக்கு மோஷன் போஸ்டர் வடிவமைக்கப்பட்டன. இதன் அடுத்தக் கட்டமாக இப்பொழுது டாக்கி மோஷன் போஸ்டர் என்ற வடிவம் உருவாகியிருக்கிறது.
அதாவது வெறும் பின்னணி இசையோடு கூடிய போஸ்டராக இல்லாமல் சில குரல்கள் பேசும்வண்ணம் இது அமைக்கப்பட்டிருக்கிறது. தூள் இயக்குநர் தரணியின் உதவியாளராக இருந்த ஹரி பாஸ்கரன் ரத்னம் இயக்கும் ‘மீன்’ திரைப்படத்திற்காக இந்த புதிய முயற்சி நடந்திருக்கிறது. இது இந்திய சினிமாவில் முதல் முறை என்ற பெருமையை ‘மீன்’ படக் குழு பெறுகிறது.
இத்திரைப்படத்தை சிட்ரம் ஸ்க்ரீன்ஸ் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஒயிட் ஹார்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ட்ரிஸ்ட்டேன் அல்ரிச் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கையாளுகிறார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதுகிறார்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் வசீகரிக்கும் இசையில் படத்தின் இரண்டு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்வண்ணம் கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் வசனம் இந்த டாக்கி போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது.
“நம்ம ஒளிவட்டத்துல இல்லாத காட்சியதான் நாம பாக்க நினைக்கிறோம்” என்று ஒரு கதாபாத்திரம் உளவியல் பேசுகிறது. “உண்மை ஐன்ஸ்டின் எனர்ஜி மாதிரி – அத உருவாக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது” என்று இன்னொரு கதாபாத்திரம் அரசியல் வர்க்கத்தை கேள்வி கேட்கிறது.
இந்த ‘மீன்’ திரைப்படத்தில் இசைக்கும், வசனத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் கொண்டாடத்தக்க நடிகர் பட்டாளம் இடம் பெறுகிறது.
புலனாய்வு இதழியலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
இந்த மீன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இதோ :