full screen background image

மீகாமன் – சினிமா விமர்சனம்

மீகாமன் – சினிமா விமர்சனம்

எப்போதும் வருடக் கடைசியில் ஏதாவது ஒரு படம் ரசிகர்களைக் கவரும்வகையில் வந்து பரபரப்பை கூட்டும். சென்ற வருடம் ‘விடியும் முன்’ படமும் ‘மதயானைக் கூட்டமும்’. இந்த வருடம் ‘மீகாமன்’ மட்டுமே..!

கதை நடக்கும் இடம் கோவா. ஆனாலும் தமிழ் ரசிகர்களுக்கு புரிவதற்காக ‘அனைத்து கதாபாத்திரங்களும் தமிழில் வசனம் பேசுகிறார்கள்’ என்று டைட்டிலின் துவக்கத்திலேயே கார்டு போட்டு பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர். நன்று.

கோவாவின் மிகப் பெரிய போதை கடத்தல் மன்னனாக இருப்பவன் ஜோதி. பெயர்தான் தெரியுமே தவிர.. ஆள் எப்படி இருப்பான்..? எங்கே இருக்கிறான்..? குடும்பம் இருக்கிறதா இல்லையா..? அடியாட்கள் யார், யார் என்ற எந்த விவரமும் போலீஸுக்கு தெரியாது.

வெகு நாட்களாக தண்ணி காட்டிக் கொண்டிருக்கும் ஜோதியைப் பிடிக்க ஒரு அண்டர்கிரவுண்ட் நாடகம் போடுகிறது போலீஸ். போலீஸ் அதிகாரிகள் இருவரை போதை மருந்து கடத்தல்காரர்களின் கூட்டத்தில் ஊடுருவ வைக்கிறது. இதன்படி ஆர்யா ஜோதியின் தளபதி மகாதேவனுடனும், ரமணா ஆஷிஷ் வித்யார்த்தியுடனும் இணைகிறார்கள்.

ஜோதியை வெளியே கொண்டு வர கோவாவிற்குள் 1000 கிலோ போதைப் பொருள் வந்திருப்பதாக தகவலைப் பரப்புகிறது போலீஸ். செய்தியறிந்து அந்த போதைப் பொருளை விலை பேசுகிறான் ஜோதி. ஆனால் அவன் நேரடியாக வராமல் டீலிங் முடியாது என்கிறது போலீஸ் டீம்.

இந்த நேரத்தில் இந்த ஆபரேஷனை செய்யும் போலீஸ் உயரதிகாரிகளின் மீது தனிப்பட்ட ஈகோவினால் கோபப்படும் போலீஸ் துறை மேலதிகாரிகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்து.. முதல்கட்டமாக 100 கிலோ போதைப்பொருள் ஜோதி டீமுக்கு கை மாறும் நேரத்தில் மும்பை போலீஸால் அது கைப்பற்றப்படுகிறது.

அந்த போதை பொருளை வைத்திருந்த தங்களுடன் நட்பாக இருந்த ரமணாவை பிடித்து ஜோதி டீமிடம் ஒப்படைக்கிறார் ஆஷீஷ். கடுமையான சித்ரவதையினால் மகாதேவன் டீமில் இருக்கும் ஆர்யாவைக் காட்டிக் கொடுக்கிறார் ரமணா. இதையறிந்த ஆர்யா கடைசி நிமிடத்தில் அனைவரையும் கொலை செய்துவிட்டுத் தப்பித்துப் போகிறார்.

இப்போது போலீஸ் ஒரு பக்கமும், ஜோதி அண்ட் ஆஷிஷ் வித்யார்த்தி டீம் இன்னொரு பக்கமுமாக ஆர்யாவைத் தேடத் துவங்குகிறார்கள். ஆர்யாவின் இந்த ஆபரேஷனை தெரிந்து வைத்திருக்கும் இரண்டு போலீஸ் உயரதிகாரிகளான அனுபமா குமாரும், ஓ.ஏ.கே.தேவரும் சுட்டுக் கொல்லப்பட.. ஆர்யாவுக்கு போலீஸ் துறையில் இருந்து உதவி கிடைக்காமல் போகிறது.

தானே புதிதாக ஒரு டிராமா போட்டு, வாலண்டியராக ஜோதி டீமிடம் சென்று சரணடைகிறார் ஆர்யா. அங்கே ஜோதியை பார்த்து கதையை திருப்பிப் போட்டு தான் நல்லவன், நம்பிக்கையானவன் என்பதை நிரூபிக்க முயல்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதி கதை.

ஆர்யாவுக்கு டூயட் இல்லை. ஏமாற்றுத்தனமான சிரிப்பு இல்லை.. ஆனால் ஆக்சன் நடிப்பு உண்டு. ரொம்பவும் சொல்வதுபோல அவருக்கான நடிப்புக்கு வாய்ப்பில்லையென்றாலும் முழு நீள ஆக்சன் படம் என்பதால் அதையெல்லாம் யோசிக்கவே நேரமில்லை.

நடிப்பென்று பார்த்தால் முதலிடம் ஜோதியாக நடித்திருக்கும் வில்லன் அஷுடோஸ் ராணாதான்.. ஒரு வில்லனுக்கே உரித்தான கெட்டப்போடு தமிழ் வார்த்தைகளை நிதானமாக, அழகாக உச்சரித்து அந்தக் குரல் மூலமே தன்னுடைய கேரக்டரை பயமுறுத்த வைத்திருக்கிறார். டப்பிங் வாய்ஸ் கொடுத்தவருக்கும் பாராட்டுக்கள்..!

ஹன்ஸிகா இந்தப் படத்திற்கு தேவையே இல்லைதான். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஆர்யாவை சைட் அடிப்பது போலவும், அவரை காதலிப்பது போலவும் ஒரு லூஸுத்தனமான கேரக்டர். இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் தான் ஒரு பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டு அழுததாகச் சொன்னார் ஹன்ஸிகா. அந்தப் பாடல் காட்சியை பார்த்தால் அப்படியொன்றும் பெரிய விஷயமில்லையே என்றுதான் தோன்றுகிறது. இதைவிட நெருக்கமான காட்சிகளிலெல்லாம் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார் ஹன்ஸிகா. ஒருவேளை தமிழில் இதுதான் முதல்முறை என்பதால் பயந்துவிட்டாரோ..?

ரமணா, மகாதேவன், ஆஷிஷ் வித்யார்த்தி, அனுபமா குமார், ஓ.ஏ.கே.தேவர் என்று நிறைய நட்சத்திரங்கள்.. அவரவர் கேரக்டர்களுக்கேற்றபடி படத்தின் தன்மை மாறாமல் நடித்திருக்கிறார்கள். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் மகிழ் திருமேனி மிகப் பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு கமர்ஷியல்.. ஆக்சன் படங்களுக்கு எப்படிப்பட்ட இறுக்கமான இயக்கம் தேவை என்பதை இந்தப் படத்தை பார்த்தாலாவது நமது இன்றைய இளைய இயக்குநர்கள் கற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு காட்சியும் புதிது புதிதாகத் தெரிவதை போல அமைத்திருக்கிறார்கள். ஷாட் பை ஷாட் வித்தியாசமான கோணங்கள்.. லைட்டிங்ஸ்கள் என்று நம்மை கவர்ந்திழுக்கிறது இயக்குநரின் இயக்கம்.

இதற்கு உறுதுணையாக இருப்பது சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு. ‘பேராண்மை’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சதீஷ்குமார்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்றே சொல்ல்லாம்.. அதிகமாக இரவு நேரக் காட்சிகள்தான் படமாக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும் கண்ணைக் கவர்கின்ற கேமிராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளும், காட்சியமைப்புகளும்.. வெல்டன் சதீஷ்குமார்..

தமன் இசையமைப்பில் 2 பாடல்கள். இரண்டுமே மனதில் நிற்கவில்லை என்பது சோகமான விஷயம். முதலில் இந்தப் படத்திற்கு பாடல் காட்சிகளும், காதல் காட்சிகளும் தேவையே இல்லை.. ஹன்ஸிகாவினால் படத்திற்குக் கிடைத்த ஒரேயொரு லாபம்.. அவரது செல்போனை வைத்துத்தான் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் தாண்டி ஒருவர் படத்தை பேச வைத்திருக்கிறார். அவர் எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த். இப்படியொரு கேங்ஸ்டர் படம் காட்சிக்கு காட்சி எந்த மாதிரியான மனநிலையை ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டுமோ அதைக் காட்டுவதற்கு மிகப் பெரிய அளவுக்கு பிரயத்தனம் செய்திருக்கிறார் எடிட்டர். படத்தொகுப்பின் பிரமாதத்தோடு சவுண்ட் ரெக்கார்டிங்கிற்காகவும் இந்தப் படத்தை பாராட்டியே ஆக வேண்டும்.  மணிரத்னம் ஸ்டைல் உச்சரிப்புகூட தெளிவாக கேட்கும் அளவுக்கு ரெக்கார்டிங் செய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்..

கொஞ்சம் வன்முறை கலந்த காட்சிகள் இருப்பினும், ஆக்சன் படத்திற்கு அது அவசியம் தேவை என்பதாலும் இரண்டரை மணி நேர பொழுது போக்கிற்கு இந்தப் படம் உத்தரவாதம் அளித்திருக்கிறது..

‘மீகாமன்’ என்றால் ‘கப்பலின் கேப்டன்’ என்று அர்த்தமாம்.. இந்த ‘மீகாமனி’ன் ‘மீகாமன்’ நிச்சயமாக படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிதான்..! ‘தடையறத் தாக்க’ படத்திற்கு அடுத்து இந்தப் படத்திலும் தனது முத்திரையை ‘நச்’ சென்று பதிவு செய்திருக்கிறார். பாராட்டுக்கள்..

சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

Our Score