full screen background image

ஜெயம் ரவியின் ‘பூலோக’த்தில் இடம் பெறும் மயானக் கொள்ளையின் கதை என்ன..?

ஜெயம் ரவியின் ‘பூலோக’த்தில் இடம் பெறும் மயானக் கொள்ளையின் கதை என்ன..?

‘பூலோகம்’ படத்தில் இடம் பெறவிருக்கும் மயானக் கொள்ளை திருவிழா என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோமா..?

கதையைக் கேளுங்கள் :

முன்னொரு காலத்தில் பிரம்மன் தனக்கு ஐந்து தலைகள் இருப்பதை நினைத்து கர்வம் கொண்டாராம். இதனைக் கேள்விப்பட்ட சிவனின் மனைவி பரமேஸ்வரி பொறாமை கொண்டு சிவபெருமானிடம் பிரம்மனின் தலைக்கனம் பற்றி வத்தி வைத்துள்ளார். மனைவி சொல்லே மந்திரமென்று நினைத்த சிவன், தனது மனைவியின் விருப்பப்படி பிரம்மனின் தலைக்கனத்தை அடக்க.. காலபைரவரை அனுப்பி பிரம்மனின் தலையை வெட்டி கொண்டு வரச் சொன்னார்.

காலபைரவரும் சென்று பிரம்மனின் ஒரு தலையை வெட்டத் துவங்கினார். அந்தத் தலை துண்டானவுடன் தொடர்ச்சியாக இன்னொரு தலை சட்டென்று தோன்றியதாம். போராடி, போராடி களைத்துப் போன காலபைரவர் தன்னால் முடியாது என்று சிவபெருமானிடம் வந்து சொல்லிவிட்டார். உடனே சிவனே நேரில் வந்து பிரம்மனின் ஒரு தலையை வெட்ட ஆரம்பித்தாராம். ஆனால் அப்போதும் தலை உடனடியாக தோன்றி கொண்டேயிருக்க.. விஷ்ணுவிடம் இதற்காக யோசனை கேட்டாராம்.

விஷ்ணுவின் யோசனைப்படி 1000-மாவது தலையை வெட்டியவுடன் அதனை கீழே விழாமல் அப்படியே கையில் பிடித்துக் கொண்டாராம் சிவன். அது நெடுநேரமாகிவிடவே.. மேற்கொண்டு விஷ்ணு எந்த ஐடியாவும் சொல்லாததால், கையை எடுத்திருக்கிறார் சிவன். இப்போது அந்த வெட்டப்பட்ட கபாலம்(தலை) சிவனின் கையிலேயே ஒட்டிக் கொண்டது. கூடவே பிரம்மஹத்தி தோஷமும் தொற்றிக் கொண்டது. மூன்றாவதாக தனது கணவரின் தலையை அநியாயமாக வெட்டிய சிவனை நோக்கி சரஸ்வதி “நீ பூமியில் பிச்சைக்காரனாய் கடவ..!” என்று சபித்துவிட்டாராம்.. தனது மூல திருஷ்டி மூலமாய் ஆராய்ந்து பார்த்ததில் இதன் மூல காரணம் சிவனின் மனைவி பரமேஸ்வரிதான் என்பதையறிந்து கோபமடைந்த சரஸ்வதி தேவி, “நீ கந்தலாடையுடன் ராட்சஷ உருவத்துடன் பூமியில் அலைவாயாக..” என்று பத்தினி சாபம் விட்டுவிட்டாராம்.

இதனால் ஒரு பக்கம் சிவன் பூலோகத்தில் பிச்சையெடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் கந்தலாடையுடன், பைத்தியக்காரியாய் அலைந்திருக்கிறார் பரமேஸ்வரி. அப்படி அலைந்து திரிந்து ஒரு நாள் வந்தமர்ந்த இடம்தான் இப்போதைய மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இருக்கும் இடமாம்.. சிவனின் பரிதாப நிலையை பார்த்து பாவப்பட்ட மகாவிஷ்ணு.. மேல்மலையனூர் சென்று பரமேஸ்வரியிடம் கவளம் வாங்கி சாப்பிடும்படி சிவனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். தன் மனைவியும் இங்கேதான் பைத்தியக்காரியாய் அலைகிறார் என்று கேள்விப்பட்டு சிவபெருமான் மேல்மலையனூர் வந்து பிச்சை கேட்க.. முதல் கவளத்தை சிவனின் கையில் வைத்திருக்கிறார் ஈஸ்வரி. அதனை சிவன் கையில் ஒட்டியிருந்த பிரம்மனின் கபாலமே எடுத்துச் சாப்பிட்டுவிட்டதாம். இரண்டாவது கவளத்தை வைக்க அதையும் கபாலமே எடுத்து முழுங்கிவிட்டது. மூன்றாவது கவளத்தை போடப் போகும்போது மகாவிஷ்ணு கண் ஜாடை காட்டி ஐடியா கொடுக்க… அதன்படி அந்த கவளத்தை தரையில் போட்டிருக்கிறார் ஈஸ்வரி. உடனேயே கபாலமும் சிவனின் கையில் இருந்து தரையில் இறங்கி கவளத்தை எடுக்கப் போக.. அந்த நேரத்தில் கோபத்துடன், ஈஸ்வரி தனது காலால் கபாலத்தை உதைத்து அதனை மண்ணுலகம் அனுப்பி வைத்தாளாம்..

அத்தோடு சிவனை பிடித்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியதாம். மாசி மாத சிவராத்திரிக்கு அடுத்த நாள் வரும் அமாவாசையன்றுதான் இந்த நிகழ்வு நடந்ததால் இன்றைக்கு ஈஸ்வரி என்ற அந்த அங்காளம்மனின் ஆக்ரோஷத்தைக் கொண்டாடும்விதமாக ஆண்களும், பெண்களும், அங்காளம்மன் வேடமிட்டவர்களும் ஆக்ரோஷமாக கோழி உள்ளிட்ட உயிரினங்களை உயிரோடு பிடித்துக் கடித்து ரத்தம் குடித்து, அதனை அங்காளம்மனுக்கு காணிக்கையாக்குவார்கள்..

இவர்கள் சுடுகாட்டுக்கு போகும் வழியில் வேண்டுதல் உள்ள பெண்கள் தரையில் படுத்திருக்க அவர்களை இந்த வேடமிட்டவர்கள் தாண்டிச் செல்வார்களாம். அப்படிச் சென்றால் அந்த வேண்டுதல் பலிக்குமாம்.. சுடுகாட்டுக்குச் செல்லும் இந்த வேடதாரிகள்.. அங்கே சமீபத்தில் எரியூட்டப்பட்ட பிணத்தின் சாம்பலை எடுத்து உடம்பெல்லாம் பூசிக் கொண்டு அதிலேயே விழுந்து, புரண்டு, படுத்துறங்கி தங்களது அங்காளம்மனை அங்கேயே இறக்கிக் கொள்வார்களாம்.

இதுதான் மயானக் கொள்ளை கதை என்கிறார்கள்..!

நிச்சயம் தமிழ்ச் சினிமாவுக்கு இது புதிய கதைதான்..! எப்படி எடுத்திருக்காங்களோ அது அங்காளம்மனுக்கே வெளிச்சம்..!

Our Score