full screen background image

“மாஸ்டர்’ படத்தின் கதை என்னுடையது…” – கதாசிரியர் ரங்கதாஸ் புகார்..!

“மாஸ்டர்’ படத்தின் கதை என்னுடையது…” – கதாசிரியர் ரங்கதாஸ் புகார்..!

‘மாஸ்டர்’ படத்திற்கு இருக்கிற பிரச்சினையே போதாதா என்பதுபோல் அடுத்து வழக்கம்போல கதை திருட்டு பிரச்சினையும் சேர்ந்துள்ளது.

நெய்வேலியைச் சேர்ந்த ரங்கதாஸ் என்பவர் ‘மாஸ்டர்’ படத்தின் கதை தன்னுடைய ஒரு திரைக்கதையை வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக புகார் கூறியுள்ளார்.

இது பற்றி பேசிய ரங்கதாஸ், “நான் நெய்வேலியைச் சேர்ந்தவன். திரைப்படத் துறையில் கதை, திரைக்கதை, வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளேன். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளேன்.

2017-ம் ஆண்டில் ‘நினைக்கும் இடத்தில் நான்’ என்ற தலைப்பில் நான் ஒரு கதையை எழுதி அதை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இப்போது நடிகர் விஜய்யின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் டீஸரை பார்த்த பிறகு இந்தப் படத்தின் கதையும் நான் எழுதி பதிவு செய்து வைத்திருக்கும் கதையும் ஒன்றாக இருப்பதை அறிந்தேன். உடனடியாக, இது குறித்து எழுத்தாளர்கள் சங்கத்திலும் புகார் செய்துள்ளேன்.

என்னுடைய கதையையும், ‘மாஸ்டர்’ படத்தின் கதையையும் ஒப்பிட்டுப் பார்த்து எழுத்தாளர்கள் சங்கத்தில் ஒரு தீர்வைச் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

எனக்கு சங்கம் வாயிலாக நீதி கிடைக்காவிட்டால் ‘மாஸ்டர்’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்..” என்றார்.

விஜய்யின் படங்களுக்கும் கதைத் திருட்டு பஞ்சாயத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அவருடைய பல திரைப்படங்களின் கதைகள் திருட்டுக் கதை பஞ்சாயத்தில் சிக்கியிருக்கின்றன.

இதற்கு முன்பு அவர் நடித்த ‘கத்தி’, ‘சர்க்கார்’ ஆகிய படங்களின் கதைகள்கூட தங்களுடையது என்று சொல்லி சில கதாசிரியர்கள் இதேபோல் புகார் செய்தனர்.

‘சர்க்கார்’ பட கதை பிரச்சினையில் கதை தன்னுடையது என்று சொன்ன இணை இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு நஷ்ட ஈடு கொடுத்து பிரச்சினையை முடித்தார்கள்.

இதேபோல் ‘கத்தி’ கதை தன்னுடையது என்று சொன்ன ‘அறம்’ படத்தின் இயக்குநரான கோபி நயினாருக்கும் நஷ்ட ஈடு கொடுத்து சமாளிக்கப்பட்டது. அதேபோல் இதை கதை தன்னுடைய ‘தாக பூமி’ என்ற குறும்படத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்று புகார் கூறிய கதாசிரியர் அன்பு ராஜசேகருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.

இப்படி விஜய்யின் திரைப்படங்கள் தொடர்ந்து கதைத் திருட்டில் சிக்குவது வாடிக்கையாகவே தொடர்ந்து வருகிறது.

இந்த ‘மாஸ்டர்’ கதை எங்கே போயும் முடியும் என்பதையும் பார்ப்போம்.

இப்போது இந்தப் படத்திற்கும் பிரச்சினை எழுந்துள்ளது.

‘மாஸ்டர்’ படத்தின் வெளியிட்டிற்கு 5 நாட்களே இருக்கின்ற நிலையில் எழுத்தாளர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

காத்திருப்போம்..!

Our Score