The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, S.P.சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம்தான் இந்த ‘மாஸ்க்’
இந்தப் படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு சமமான முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். ருஹானி ஷர்மா கவினின் ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோ, அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில் நுட்பக் குழுவில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், R.ராமர் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் M.விஜய் அய்யப்பன் மேற்கொண்டுள்ளனர். உடை வடிவமைப்பை பூர்த்தி பிரவீன் மற்றும் விபின் சங்கர் கவனித்துள்ளனர். சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் மற்றும் விக்கி இயக்கியுள்ளனர். நடன அமைப்பை அசர் மற்றும் விஜி மேற்கொண்டுள்ளனர். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
NETFLIX OTT தளத்தில் வெளியான MONEY HEIST என்ற ஒரு வெப் சீரிஸ் உலகம் முழுவதும் பிரபலமானது. பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கான சினிமா ரசிகர்கள் அந்தத் தொடருக்கு ஆர்வலர்களாக இருந்தார்கள். தொடர்ச்சியாக இதுவரையிலும் மூன்று சீசன்களில் அந்தத் தொடர் வந்திருக்கிறது.
ஸ்பெயின் மொழியில் தயாரிக்கப்பட்ட அந்தத் தொடர் ஒரு வங்கிக்குள் நுழைந்து அங்கே இருக்கின்ற மொத்தப் பணத்தையும் கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் பற்றிய கதை. உலகின் அனைத்து தரப்பு நாடுகளைச் சேர்ந்த மக்களும் ரசிப்பது போல, ஏற்றுக் கொள்வது போல அந்தத் தொடரை வெகு திறமையாக படமாக்கியிருந்தார்கள்.
இந்த மாஸ்க் திரைப்படமும் அதே போன்று பணத்தை கொள்ளை அடிக்கும் ஒரு கும்பலை தேடி கண்டுபிடிக்கும் கதைதான்.
படத்தின் ஹீரோவான கவின் ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வருகிறார். மனைவிக்குத் துரோகம் செய்யும் கணவனைக் கையும் களவுமாகப் பிடித்துத் தருவது.. கணவனுக்குத் துரோகம் செய்யும் மனைவியை ஆதாரத்துடன் கண்டுபிடித்து உடனடியாக அந்தக் கணவனுக்கு டைவர்ஸ் வாங்கி தருவது… பணம் வாங்கிவிட்டு தராமல் ஏமாற்றுபவர்களை மாட்டிக் கொடுத்து காசு பார்ப்பது என்று அனைத்துவிதமான உள்ளடி வேலைகளையும் செய்து நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
இவருடைய அப்பாவோ ராயப்பேட்டையில் ஒரு ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த ஹோட்டலின் பெயரில் சுப்பிரமணிய சிவாவிடம் நிறைய பணத்தை கடனாக வாங்கி, அதன் வட்டியை கூட கட்ட முடியாத நிலைமையில் இருக்கிறார் கவனின் அப்பா.
சென்னையில் ஒரு என்.ஜி.ஓ.வாக பலருக்கும் தெரிந்த பூமி என்ற ஆண்ட்ரியா உண்மையில் ஒரு மிகப் பெரிய வில்லியாக இருக்கிறார். பெரும் செல்வத்துடன் எப்படியாவது இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு உலகத்தில் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக நிறைய பணத்தை சம்பாதித்துவிட்டு ஒரே அட்டம்ப்ட்டில் ஜம்பிங் செய்து அலாஸ்கா போய்விடலாம் என்ற கொள்கையில் இருக்கிறார்.
தனியாக ஒரு கட்சியை துவக்கி அதன் மூலமாக சில எம்.எல்.ஏ.க்களை பெற்று அந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கூட்டணி அமைச்சரவையில் மந்திரியாக இருக்கிறார் புவன். வரக் கூடிய தேர்தலில் தன்னுடைய கட்சியின் சார்பில் அதிகப்படியான ஆட்களை தொகுதியில் நிறுத்தி தனித்துப் போட்டியிட்டு தான் முதலமைச்சராக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்.
அதற்காக தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் மக்களுக்கு லஞ்சமாக்க் கொடுக்க 446 கோடி ரூபாயை மாநிலம் முழுவதும் சப்ளை செய்ய பூமியை அப்ரோச் செய்கிறார் புவன். பூமி தன்னுடைய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் வாயிலாக பழங்கள், காய்கறிகளை பார்சலில் அனுப்புவதாகச் சொல்லி அவைகளின் கூடவே இந்தப் பணத்தையும் அனுப்புவதற்கு ஒத்துக் கொள்கிறார். இதற்காக அந்தப் பணத்தை வாங்கி தனது பூமி ஸ்டோர்ஸில் பத்திரமாக வைத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு நாள் இரவில் எம்.ஆர்.ராதாவின் முகம் வரையப்பட்ட மாஸ்குகளை அணிந்து வந்த ஒரு 10 பேர் கும்பல் அந்தப் பணத்தை மொத்தமாக லவட்டி கொண்டு போகிறது.
இப்போது களவாடப்பட்ட அந்த பணத்தை மீட்கும் அஸைண்ட்மெண்ட் கெவினுக்கு வருகிறது. கெவின் கண்டிப்பாக அந்தப் பணத்தை மீட்டுத் தந்தாக வேண்டும் என்கின்ற ஒரு கட்டாயத்தை பூமி உருவாக்கி வைத்திருக்கிறார். பூமியும் கெவினும் சேர்ந்து எப்பாடுபட்டாவது அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று புவன் அவர்களை கட்டாயப்படுத்துகிறார்.
அந்த பணம் கிடைத்ததா இல்லையா.. அந்தப் பணத்தை யார் கடத்தியது.. இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இந்த திருடன்-போலீஸ் விளையாட்டுக் கதையில் உருவாகியிருக்கும் திரைப்படத்தின் முடிவு.
MONEY HEIST சீரீஸின் அடிப்படைக் கதையான பணத்தை முகமூடி அணிந்து கொள்ளை அடிப்பது என்ற விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒரு கெத்தான இளைஞன்.. தெனாவட்டான பேச்சு.. ஸ்டைலான அணுகுமுறை.. எதைப் பற்றியும் கவலைப்படாத உடல் மொழி.. அதிகமாக நக்கல் அடிக்கும் வசனங்களை பேசுபவர் என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை வைத்து கவின் படம் முழுவதும் தன்னுடைய நடிப்பை பரப்பி இருக்கிறார்.
கவின் தன்னுடைய கூட்டாளிகளுடன் பேசும்பொழுது பேசும் பல வசனங்கள் இன்றைய இலசுகளை கவரும் விதத்தில் எழுதப்பட்டிருக்க அந்த வசனங்களுக்கான நடிப்பையும் ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார் கவின். கொஞ்சம் செண்டிமெண்ட் காட்சிகளும் படத்தில் இருக்கின்றன அதையும் கச்சிதமாகவே பேசி நடித்திருக்கிறார்.
ஒரு காட்சியில்கூட அழுவது போல திரைக்கதை இல்லை என்பதால் அதை தவிர மீதி அத்தனையை நயவஞ்சகத்தனத்தையும் தன்னுடைய முகத்தில் காட்டி இறுதியில் தன்னுடைய கேரக்டரை நல்லவன் என்று பதிவு செய்ய ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். ஆனால், கடைசியில் அதில் மட்டும் தோல்விதான் அடைந்திருக்கிறார் கவின்.
பிரிட்ஜில் வைத்து எடுத்திருக்கும் தக்காளிபோல பளபளவென ஜொலிக்கிறார் ஆண்ட்ரியா. முதல் சில காட்சிகளில் அன்னை தெரசா அளவுக்கு அவரை போற்றி புகழும் திரைக்கதை அடுத்தடுத்த காட்சிகளில் எந்த அளவுக்கு அவரை கீழே தள்ள முடியுமா அந்த அளவுக்கு தள்ளியிருக்கிறது.
தன்னுடைய வில்லித்தனத்தை கவினிடமும், புவனிடமும் காட்டுகின்ற இடங்களில் எல்லாம் தன்னுடைய நடிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார் ஆண்ட்ரியா. ஆனால் அவருடைய தளபதிகளாக இருக்கும் இரண்டு பேர், அவரை பார்த்து ஏன் இப்படி பயப்படுகிறார்கள் என்பதுதான் நமக்கு புரியவே இல்லை.
இப்போது மந்திரியாக இருந்து அடுத்த ப்ரமோஷனாக முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் புவன், தன் தரப்பு ஆட்களிடம் பணத்தைப் பற்றியும் அவர்களது வீடியோக்களை பற்றியும் பேசும்பொழுது தமிழ்நாட்டின் தலையெழுத்து இதுதாண்டா என்று நமக்கு சொல்ல தோன்றுகிறது.
முதல் பாதியில் ருஹானி சர்மா தன் கண் பார்வையாலேயே கவினை கவிழ்த்ததோடு அல்லாமல் நம்முடைய மனதையும் கவர்கிறார். ஆனால், அவருடைய பரிதாபமான முடிவு நமக்கு சோகம்தான்.
கவினின் போலீஸ்கார நண்பனாக வரும் கல்லூரி வினோத்தும், வழக்கறிஞராக வரும் ரமேஷ் திலக்கும் கவினின் அல்லக்கைகள் என்பதுடன் எப்படியாவது சீக்கிரமாக பணக்காரனாகிவிட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் நல்ல நண்பர்களாக இருப்பது படத்துக்கு துணை செய்திருக்கிறது.
மேலும் படத்தில் நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடிங்க்ஸ்லே என்று ஒரு கூட்டமும் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இவர்களோடு படத்தில் ரொம்ப ரொம்ப நல்லவராக தோற்றமளிக்கும் சார்லிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரம் மிக வலிமையானது. வலியவன் எளியவனை அழித்துக் கொண்டேயிருக்க வேண்டுமா.. எளியவர்கள் அடிமையாகவே இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு சார்லி கடைசியில் அழகாகப் பதிலளிக்கிறார்.
சார்லி சொல்லும் ஒரு சோகக் கதையை இந்தப் படத்துடன் இணைத்திருப்பதால் இந்தக் கருப்புப் பணத்தைக் கொள்ளையடித்தது சரியா தவறா என்ற குழப்பத்தில் நம்மைக் கொண்டு வந்து விட்டுவிட்டார் இயக்குநர். இந்தக் கதையாடலுடன் திரைக்கதையை இணைத்திருக்கும்விதம் சிம்ப்ளி சூப்பர்ப்..!
ஆனால், ருஹானியின் வீட்டில் ஹெல்மெட்டோடு பறந்து வரும் கவின் அங்கே மாஸ்க்கைப் பார்த்து அதிர்ச்சியாவதும், அச்யுத் குமார் யார் என்று தெரியும்போதும் மொத்தத் தியேட்டரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேர காட்சிகளாகவே படமாக்கப்பட்டு இருப்பதால் ஒளிப்பதிவாளர் கடைசி வரையிலும் ஒரே மாதிரியான ஒளிப்பதிவையே கொடுத்திருக்கிறார். சில காட்சிகளில் கேமராவின் கோணம் ஒரு பக்கம் இருக்க… நடிகர்களோ வேறு பக்கம் திரும்பி பேசுவது போல அமைந்திருப்பது இதை ஒளிப்பதிவு செய்தவர் ஆர்.டி.ராஜசேகரா என்று ஒரு சந்தேகமே நமக்கு எழுகிறது.
அந்த ஹோட்டல், மிகப் பெரிய ஸ்டுடியோ, பூமி ஸ்டோர்ஸ், தரைமட்டத்தில் இருக்கும் ரகசிய அறைகள், அதில் எல்லாம் கேமரா உள்ளே புகுந்து வெளியே வருவது போல அழகாக படமாக்கப்பட்டிருந்தாலும் இதையெல்லாம் வடிவமைத்த கலை இயக்குநரை நிச்சயமாக பாராட்டுகிறோம்.
மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஒன்றாக இணைத்து கதை எழுதியிருந்தாலும் இவர்களுடைய சில, சில கிளை கதைகளும் போய்க் கொண்டிருக்க அது அனைத்தையுமே மிகவும் கச்சிதமாக தொடர்ச்சியாக நடப்பதுபோல நமக்கு நறுக்கி தந்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஆர்.ராமர்.
ஆனால், படத்தின் மிகப் பெரிய பலவீனம் படத்தின் பின்னணி இசைதான். காதுகளை அடித்து கிழிப்பது போல அவர் போட்டிருக்கும் ஒவ்வொரு பிட்டும் படம் பார்ப்பவர்களை மிகவும் சோதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், வசனம் பேசுகின்ற பொழுதுகூட பின்னணி இசை வசனத்தை விடவும் அதிகமாக ஒலிக்க பல வசனங்கள் நம் காதுகளில் விழுகாமையே எஸ்கேப் ஆகிருக்கின்றன. இவ்வளவு பெரிய படத்தில் இதையெல்லாம் கவனிக்காமல் எப்படி படத்தை வெளியே கொண்டு வந்தார்கள் என்றே தெரியவில்லை.
கவினின் வீர தீர சூரத்தை பாராட்டுவதுபோல ‘வெற்றி வீரனே’ என்ற பாடல் ஜிவி பிரகாஷின் இசை என்பதை சொல்லாமல் சொல்கிறது. அதேபோல ஒரே ஒரு டூயட் பாடிக் கொள்கிறேன் என்று கவின் சொன்னதற்காக ‘கண்ணு முழி’ என்ற பாடலை உருவாக்கி, அதன் சம்பவங்களையும் அழகாக படமாக்கி இருக்கிறார்கள்.
பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. அது முழுக்க முழுக்க கருப்பு பணம். போலீஸூக்குப் போக முடியாது. அதை கண்டுபிடித்து தரவேண்டும். இல்லாவிட்டால் அவரவர் குடும்பங்கள் இருக்காது என்று அமைச்சர் புவன் மிரட்ட அதை தேடி கண்டுபிடிக்க ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் இந்தப் பணத்தை தேடி ஓடுகிறார்கள்.
இதில் தேவையே இல்லாமல் நெல்சனின் வாய்ஸ் ஓவர் இந்தப் படத்தின் கதையை அப்படியே சொல்லிக் கொண்டே வருவது நமக்கு ரொம்பவே அயர்ச்சியைத் தருகிறது.
பணம் கொள்ளையடிக்கும்விதமும், இன்டெர்வல் காட்சியில் இணைத்து இருக்கும்விதமும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது என்றாலும் அதையே அப்படியே தொடர்ச்சியாக செய்திருக்கலாம். இடையிடையே வேறு வேறு கதை கிளைக் கதையிலே உள்ளே திணித்ததால் நமக்கு வீட்டுக்குள் போய்விட்டு மறுபடியும் வெளியே வந்து, மறுபடியும் வீட்டுக்குள் செல்வது போன்ற ஃபீலிங்தான் ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அசால்ட்டாக மேனேஜ் செய்யும் கவின் தன்னுடைய குழந்தை மீது கை வைத்தவுடன் பூமியையும், அவரது சிஷ்ய கோடிகளையும் பார்த்து ஏன் இப்படி பயப்படுகிறார் என்றுதான் தெரியவில்லை. அவர்கள் கொலைக்கு அஞ்சாதவர்கள் என்றால் குற்றத்தை தடுப்பதிலும், குற்றம் செய்வதிலும், கவினும் அஞ்சாதவராச்சே என்ற பீலிங்ஸ் நமக்கு இடிக்கிறது.
இடைவேளைக்கு பின்பு பரபர என திரைக்கதை நகருகிறது என்று நாம் நினைத்துக் கொண்டாலும், அளவுக்கு அதிகமான ஒலியும் அடுத்தடுத்த காட்சிகளை இரவு பகல் என்று மாற்றி மாற்றி பார்த்து நம்முடைய கண்கள் சோர்வடைந்து “ஏன் அப்பா இப்படி சோதிக்கிறீங்க..?” என்று வாய்விட்டு சொல்ல வைத்து விட்டது.
முன் பாதி திரைக்கதையில் இருந்த ஒரு விறுவிறுப்பு பின் பாதி திரைக்கதையில் மிஸ்ஸிங் என்பதால் இந்தப் படத்தை அட்டகாசம் என்று நம்மால் சொல்ல முடியவில்லை..
RATING : 3.5 / 5









