All In Pictures என்னும் புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மசாலா படம்’. ‘வெண்ணிலா கபடி குழு’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான பிரபல ஒளிப்பதிவாளர் லஷ்மண் குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் லட்சுமண் குமார், “என்னுடைய முதல் படம் சராசரியான ஒரு கதையாக இருக்கக் கூடாது என்பதில் முதலிலேயே நான் தீர்மானமாக இருந்தேன். அதற்கு ஏற்றக் கதையை பற்றி யோசிக்கும்பொது எனக்கு தோன்றியதுதான் இந்தக் கதை.
சமீப காலமாக தமிழ்த் திரையுலகம் சந்தித்துவரும் மிகப் பெரிய சவால் சமூக வலைத்தள விமர்சகர்களிடம் இருந்து வரும் விமர்சனங்கள்தான் என்பது பொதுவான கருத்து. படத்தைப் பற்றிய விமர்சனம் செய்வது காசு கொடுத்து படம் பார்ப்பவனின் உரிமை என்று ஒரு சாராரும், சினிமா என்பது ஒரு வியாபாரம், அடுத்தவர் வியாபாரத்தை விமர்சித்து வீழ்த்த இவர்கள் யார் என்று ஒரு சாராரும் வாதப் பிரதிவாதங்களை வைத்து தர்க்கம் செய்து வருகிறார்கள். இந்தக் கருத்தை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இணையத்தில் புழங்கும் எல்லோரும் விமர்சகர்கள் என்ற நிலையில்தான் இன்றைய சினிமா உள்ளது. யார் செய்வது சரி..? விமர்சனம் என்பது உரிமையா அல்லது அடுத்தவர் வியாபாரத்தை கெடுக்கும் முயற்சியா..? விமர்சனத்துக்கு எல்லைக் கோடு உண்டா.. இல்லையா..? என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்த ‘மசாலா படம்’ சிறந்த பதிலைச் சொல்லவிருக்கிறது.
இந்தக் கதையைப் பற்றி விவாதித்த உடனேயே படத்தைத் தயாரிக்க முன் வந்த எனது நண்பரும், தயாரிப்பாளருமான விஜய் ராகவேந்தராவுக்கு என் முதற் கண் நன்றி.
நாயகர்கள் பாபி சிம்மாவுக்கும், மிர்ச்சி சிவாவுக்கும் இந்தப் படம் அவர்களது பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா நடித்து உள்ளார். இசை – கார்த்திக் ஆச்சாரியா.
இதைப் போன்ற படங்களுக்கு பெரிய ஊக்கமே, படத்தை முறையாக பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிடும் விநியோகஸ்தர்தான்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ஆங்கில படங்களான ‘Terminator’, ‘Mission impossible’ ஆகிய படங்களை தென்னகமெங்கும் விநியோகம் செய்த Auraa சினிமாஸ் விநியோகஸ்தரான மகேஷ், எங்களது ‘மசாலா படம்’ திரைப்படத்தினை வரும் அக்டோபர் 2-ம் தேதி வெளியிடவுள்ளார்.
இந்த ‘மசாலா படம்’ ரசிகர்களுக்கு மட்டுமல்ல விமர்சகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்..” என நம்பிக்கையுடன் தெரிவித்தார் லக்ஷ்மண் குமார்.