full screen background image

தடை பல தாண்டி திரைக்கு வருகிறது ‘மறுமுகம்’..!

தடை பல தாண்டி திரைக்கு வருகிறது ‘மறுமுகம்’..!

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கிற படம் ‘மறுமுகம்’. இப்படத்தை பள்ளிக் கால, கல்லூரிக் கால நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். அன்லிமிட்டட் எண்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனத்தின் சார்பில் சன்ஜய் டாங்கி தயாரித்துள்ளார். திரைப்படக் கல்லூரி மாணவர் கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இயக்குநர் கமல் சுப்ரமணியம், நடிகர் டேனியல் பாலாஜி, ஒளிப்பதிவாளர் கனகராஜ், எடிட்டர் ஆர்.டி.அண்ணாதுரை போன்ற பலரும் திரைப்படக் கல்லூரி மாணவர்களே. டேனியல் பாலாஜி பிரதான வேடம் ஏற்றுள்ளார். பாலாஜி, அனூப், ப்ரீத்தி தாஸ் மூவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கதாநாயகியின் அப்பாவாக பானுச்சந்தரும், அம்மாவாக உமா பத்மநாபனும் நடித்துள்ளார்கள். நடிகர் கிஷி, நடிகை ஷில்பி ஆகியோரும் நடித்துள்ளனர்.

“ஒவ்வொரு மனிதனுக்குள் பல முகங்கள் இருக்கும். தனக்குத் தேவைப்படும்போது சூழல் அமையும்போது தேவைப்படும் முகத்தை வெளிப்படுத்துவான். அப்படி ஒருவன் வெளிப்படுத்தும் இன்னொரு முகம்தான் ‘மறுமுகம்’ படக் கதை. இது ஓர் ஆக்ஷன் த்ரில்லர் மூவி…” என்கிறார் இயக்குநர்.

டேனியல் பாலாஜி ஒரு சிற்பி. இளம் தொழிலதிபர். ஆனால் பெற்றோரை இழந்தவர். பாசத்துக்கு ஏங்குபவர். ‘ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைண்ட்’ என்று வருந்துபவர். அவருக்குள் காதல் வருகிறது. அது கைகூடி வருமோ என்ற பயமும் வருகிறது. அதுதான் அவரது மறுமுகத்தைக் காட்ட வைக்கிறது. முதல் பாதியில் ஒரு முகம் காட்டுவார். மறுபாதியில் இன்னொரு முகம் காட்டும்போது பரபரப்பு பற்றிக் கொள்ளும். காதல் சுமந்த ஈர முகமும், ஆவேசம் கொண்ட கோர முகமும் டேனியல் பாலாஜிக்குத் தனித்தனி நடிப்புத் தளங்களாக அமைந்துள்ளன. டேனியல் பாலாஜியின் விஸ்வரூப தரிசனம் இரண்டாவது பாதியின் உச்சகட்டத்தில் தெரியும். இன்னொரு முக்கிய பாத்திரம் அனூப். படத்தில் இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இவர்களுக்கிடையில் உலவும் தென்றலாக ப்ரீத்திதாஸ். இவர் கல்லூரி இறுதியாண்டு மாணவியாக வருகிறார். டேனியல் பாலாஜி,அனூப், ப்ரீத்தி தாஸ் இவர்கள் மூவருக்குள் நிகழும் கதைச் சம்பவங்களே படத்தின் போக்கு.

பல நாட்கள் அதிகாலை முதல் நள்ளிரவுவரை படப்பதிவு முழு மூச்சுடன் நடத்தியுள்ளனர். 45 நாட்களில் மொத்தப் படத்தையும் எடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் இது நன்றாகத் திட்டமிடப்பட்டு அளவான நாட்களில் முறையாக முடிக்கப்பட்ட படம். கொடைக்கானல், குற்றாலம், அச்சன் கோவில், சென்னை, மாமல்லபுரம் கடற்கரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

கொடைக்கானலில் லாசலத் மாதா கோவில் புகழ் பெற்றது. அங்கு 1972ல் ‘ஞானஓளி’ படத்தின் ‘தேவனே என்னைப் பாருங்கள்’ பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அதற்குப் பின் கடந்த 40 ஆண்டுகளாக எந்த சினிமா படக் குழுவுக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ‘மறுமுகம்’ படக்குழு அங்கு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளது.

படத்தில் எந்த வெட்டும் இல்லை ஆனால் ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை என்று தணிக்கைத் துறையினர் பாராட்டினாலும் படத்தின் கதை சொல்லியிருக்கும்விதத்தில் ‘இப்படியும் செய்ய முடியுமா?’ என்கிற கற்பனைக் கருத்து படத்தில் உள்ளது. அதனால் சட்ட விதிகளின்படி ‘ஏ’ சான்றிதழ் கொடுக்க வேண்டியதாகிவிட்டது என்றிருக்கிறார்கள் தணிக்கைத் துறையினர்.

”இது அளவான நாட்களில் முறையாக திட்டமிட்டு முடிக்கப்பட்ட படம். படப்பிடிப்பைவிட சந்தைப்படுத்துதலின் சிக்கல்கள், போராட்டங்கள், வெளியிடுதலின் சிரமங்கள் எல்லாம் அனுபவங்கள் மூலம் அறிய முடிந்தது” என்கிறார் இயக்குநர் கமல் சுப்ரமணியம்.

இடையில் ஏற்பட்ட நீதிமன்றத் தடைகளையும் தாண்டி ‘மறுமுகம்’ படம் வரும் மார்ச் 14-ல் வெளிவருகிறது.

Our Score