இன்று மார்ச் 21, 2014 வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள திரைப்படங்கள் :
1.குக்கூ
தமிழத் திரையுலகம் மட்டுமல்லாமல் எழுத்துலகமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் இது. ஆனந்தவிகடனில் எழுதிய வட்டியும் முதலும் என்கிற கட்டுரைத் தொகுப்பால் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட எழுத்தாளர் ராஜூமுருகன் எழுதி, இயக்கியிருக்கும் முதல் படம் இது.
‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜாராணி’ ஆகிய படங்களைத் தயாரித்திருக்கும் பாக்ஸ்டார் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறது. ‘அட்டக்கத்தி’ தினேஷ் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மாளவிகா ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் இப்போதே ஹிட்டாகிவிட்டன. கண்பார்வையற்ற இரண்டு காதலர்களின் கதைதான் குக்கூ..!
2. பனி விழும் நிலவு
VeeYess Pictures சார்பில் வித்யாசங்கர் தயாரிக்கும் இப்படத்தை சின்னத்திரை நடிகர் கெளசிக் இயக்கியிருக்கிறார். டி.எஸ்.வாசன் ஒளிப்பதிவு செய்ய.. பி.லெனின் எடிட்டிங் செய்திருக்கிறார். எல்.வி.கணேசன் இசையமைத்திருக்கிறார். ஹிருதய் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இவர் மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் அரவிந்த்சாமி-மனீஷா கொய்ராலா தம்பதிகளின் மகனாக நடித்தவர். ஹிடேன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது..
3. யாசகன்
ஸ்ரீதாரிணி புரொடெக்சன்ஸ் சார்பில் கே.கே.சந்தோஷப்பாண்டியன், சி.இளங்கோ இணைந்து தயாரிக்கும் படம் இது. அங்காடி தெரு மகேஷ் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜோடி நிரஞ்சனா. புதுமுகம். மற்றும் ஜெயச்சந்திரன், சாமுவேல் சந்திரன், ஆனந்தி, ஜானவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க மதுரையிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. வே.பாபு ஒளிப்பதிவு செய்ய.. சதீஷ் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். பாடல்களை கங்கை அமரன், அறிவுமதி, யுகபாரதி மூவரும் எழுதியிருக்கிறார்கள். அமீர், சசிகுமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய துரைவாணன் இயக்கியிருக்கிறார்.
4. விரட்டு
Whitecandy Entertainment சார்பில் டி.குமார் இப்படத்தைத் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார். இசை தரண்குமார். ஒளிப்பதிவு கே.பிரசாத், படத்தொகுப்பு எஸ்.கார்த்திக். சுஜீவ், எரிக்கா பெர்ணான்டெஸ், பிரக்யா, மனோபாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
5. கேரள நாட்டிளம் பெண்களுடனே
‘பூ’, ‘களவாணி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் இது. இவர் ஏற்கெனவே ‘தேநீர் விடுதி’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இதில் அபி ஹீரோவாக நடித்திருக்கிறார். காயத்ரி, தீக்சிதா, அபிராமி என்று 3 ஹீரோயின்கள். ஞானசம்பந்தனும், ரேணுகாவும் ஒரு முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.
6. வெங்கமாம்பா
கே.ரவிகாந்த் வழங்கும் சுக்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் வெங்கமாம்பா என்ற பக்தி படம் அதே பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது.
இதுவொரு உண்மைக் கதை. திருப்பதி அருகிலுள்ள தரிக்கொண்டா என்ற ஊரில் ஆச்சாரமான பிராமண குலத்தில் வெங்கமாம்பா என்ற பெயரில் பிறந்து தெய்வீக பெண் கவியாக வாழ்ந்து இறுதியில் ஸ்ரீதேவியாக உருமாறி, திருப்பதி வெங்கடேசப் பெருமாளுடன் இணைந்ததை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
இதில் நடிகை மீனா, சரத்பாபு, சுதா, ரங்கநாத், சனா, கெளசிக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர் நாகார்ஜுனா சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருக்கிறார். மீனாதான் வெங்கமாம்பாவாக நடித்திருக்கிறார். கவிஞர் முத்துலிங்கம் பாடல்கள் எழுத, மரகதமணி இசையமைத்திருக்கிறார். வசனம் கிருஷ்ணமூர்த்தி. எடிட்டிங் – கே.மது. உதயபாஸ்கர் இயக்கியிருக்கிறார்.
இவை போக
7. சினிஸ்டர்
8. Three soldier girls
என்ற 2 ஆங்கிலப் படங்களும் இன்றைக்குத் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளன.