இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ.யோகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ரக்சன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா, முத்தழகன், மெல்வின், முனீஸ்காந்த், அருண், அகிலா, ஆஷிகா, நட்டாலி, விஸ்வந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – இரா.கோ.யோகேந்திரன், ஒளிப்பதிவு – கோபி துரைசாமி, இசை –சச்சின் வாரியர், படத் தொகுப்பு – பாலமுரளி, சஷான்க் மாலி, கலை இயக்கம் – பிரேம் கருந்தமலை, பாடல்கள் – தாமரை, உடை வடிவமைப்பு – ரம்யா சேகர், கூடுதல் திரைக்கதை – அக்ஷய் பூலா, கூடுதல் வசனம் – பிரசாந்த் எஸ்.தீனா, கலரிஸ்ட் – வீர்ராகவன், உடைகள் – நரேஷ், ஒப்பனை – ரவி, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்குமார்.
இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படம் பள்ளி கால நினைவுகளை ஏற்படுத்தி, மனதை வருடும் கதைக் களத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் மெட்ரிகுலேஷன் ஹைசர் செகண்டரி ஸ்கூலில் 2008-ம் வருடம் படித்தவர்கள் ஹீரோவும், ஹீரோயினும், அவர்தம் நண்பர்கள், நண்பிகளும்..!
11-ம் வகுப்பு படிக்கும்போது உடன் படித்த நாயகியான பிரியதர்ஷினி மீது காதல் கொள்கிறார் நாயகன் ரக்சன். ஆனால் இந்தக் காதலை இவர் கடைசிவரையிலும் நாயகியிடம் சொல்லவே இல்லை.
பள்ளியிறுதியாண்டு முடித்து கல்லூரி வாழ்க்கையும் முடித்துவிட்டு இப்போது சென்னையில் வேலை பார்த்து வருகிறார் நாயகன். உடன் பள்ளித் தோழனான தீனாவும் உடன் இருக்கிறார். இன்னமும் தனது பள்ளி காதலி நினைவிலேயே இருக்கிறார் ரக்சன்.
திடீரென்று 2008-ம் ஆண்டு அந்தப் பள்ளியில் நடந்த 12-ம் வகுப்புத் தேர்வில் முறைக்கேடுகள் நடந்ததாக சொல்லி அத்தேர்வினை ரத்து செய்து 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
மேலும், அந்த பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, அத்தேர்வை எழுதிய மாணவர்கள் மீண்டும் அப்பள்ளிக்குச் சென்று, மூன்று மாதங்கள் படித்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற இந்திய துணைக் கண்டமே கண்டிராத வகையில் ஒரு புதுமையான, விசித்திரமான உத்தரவையும் வழங்குகிறது.
எதிர்பாராமல் கிடைத்த இந்த அல்வா தீர்ப்பினால், மீண்டும் தன் பள்ளிக் காதலியான பிரியதர்ஷினியைப் பார்க்கலாம் என்ற சந்தோஷப்படுகிறார் ரக்சன். தீனாவையும் இழுத்துக் கொண்டு அந்தப் பள்ளிக்கு வந்து சேர்கிறார். கூடவே அன்றைய நாளில் அவர்களது வகுப்பில் படித்த பிற மாணவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.
இந்த மூன்று மாத காலக்கட்டத்தில் தனது காதலை நாயகியிடம் சொல்லி கல்யாணத்திற்கு தேதி கேட்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் நாயகன். இது நடந்ததா..? மீண்டும் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் திரைக்கதை.
பள்ளி மாணவருக்கான தோற்றம் ரக்ஷனுக்கு பொருந்தினாலும், அந்த நடிப்பைக் கொண்டு வர அவர் படாதபாடுபட்டிருக்கிறார்.
படம் முழுவதும் சிரித்த முகத்துடன் வலம் வந்தாலும், காதல் ஏற்படுத்திய சந்தோஷம், காதலியின் பாராமுகத்தால் ஏற்படும் வேதனை.. காதல் கை கூடாமல் இத்தனையாண்டுகளாகப் படும் மன உளைச்சல்.. திரும்பவும் பார்த்தவுடன் காதலை சொல்ல தைரியம் வராமல் தயங்கும் நிலை.. என்று இந்தக் கதாப்பாத்திரம் செய்ய வேண்டிய பலவிதமான மன நிலைகளை, நடிப்பைக் காட்ட முடியாமல் தவியாய் தவித்திருக்கிறார்.
கடைசியாக காதலை சொல்லும்போதாவது நடிப்பைக் காட்டுவார் என்று எதிர்பார்த்தால் அதிலும் நம்மை பெரிதும் ஏமாற்றியிருக்கிறார்.
இவர்தான் இப்படியென்றால் நாயகியும் தன் பங்குக்கு நம்மை புலம்ப வைத்திருக்கிறார். பிரியதர்ஷினியாக நடித்திருக்கும் மெலினா அழகாக இருந்தாலும், தோன்றினாலும் காதல் நடிப்பில் தேறவில்லை. ஆனால் அவரது தோழிகளாக நடித்தவர்கள் அலப்பறையையும் அழகான நடிப்பையும் காண்பித்து ஸ்கோர் செய்துள்ளனர். அதிலும் கர்ப்பிணியாய் நடித்திருப்பவர் நாயகியாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கலாம். களையான முகத்துடன் ஸ்கிரீனையே கலர்புல் ஆக்கியிருக்கிறார்.
நண்பனாக நடித்திருக்கும் தீனாதான் படத்தில் பெரும்பாலான இடங்களில் காட்சிகளை நடத்த உதவி செய்து நமக்கும் ஒரு ரிலாக்ஸை கொடுத்திருக்கிறார். ‘ப்ராங்ஸ்டர்’ ராகுலின் நடிப்பும், நடனமும் சொல்லிக் கொள்ளும்படியுள்ளது.
படத்திலேயே நம்மை அதிகம் கவர்ந்தது உடற்கல்வி ஆசிரியராக வரும் முனீஸ்காந்த் -அகிலாவின் காதல் கதைதான். இடைவேளைக்குப் பின்பு முனீஸ்காந்த் தனது கதையைச் சொல்லுமிடத்தில் தியேட்டரே மெளனிக்கிறது.
நாகர்கோவில் மற்றும் குளச்சல் பகுதியின் பசுமையை பல காட்சிகளில் நமது கண்களுக்கே திகைப்பூட்டுவதைப் போல தனது கேமிராவில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி.
பாடல் காட்சிகளிலும், வெளிப்புறக் காட்சிகளிலும் கேமிரா காட்டும் ஸ்கிரீனின் அழகைப் பார்க்கவே மனம் சொல்கிறது. இதனாலேயே பாதி வசனங்கள் மூளைக்குள் ஏறினாலும், நம் மனதில் தொற்றவில்லை என்பது உண்மை.
இசையமைப்பாளர் சச்சின் வாரியரின் இசையில், பாடலாசிரியர் தாமரையின் அனைத்து பாடல்களின் வரிகளும் நம் காதுகளை எட்டியுள்ளது. ‘வானிலை சுகம்’ பாடல் சுகமோ சுகம். மேலும் இடைவேளைக்குப் பின்பான பாடல்களான ‘பருவ கால நினைவிது’, ‘துடிக்குது நெஞ்சம்’, ‘நேற்றும் இன்றும் இரு தினம்’ என்ற பாடல்களெல்லாம் திரைக்கதைக்கு பிரேக் போட்டுவிட்டதால், கொஞ்சம் கடுப்ஸூம் வருகிறது.
பின்னணி இசையை படத்தின் தன்மை கெடாமலும், நம் காதுகள் கெடாமலும் போட்டிருக்கிறார் சச்சின் வாரியர். படத் தொகுப்பாளர்கள் பால முரளியும், ஷாஷங்க் மாலியும் இன்னும் கொஞ்சம் மனது வைத்து கத்திரி போட்டிருந்தால் ஒரே மாதிரியான காட்சிகள் அடுத்தடுத்து வந்து படத்துக்குத் தொய்வை கொடுத்திருப்பதை தடுத்திருக்கலாம்.
இதுவரையிலான பள்ளிக்கூடத்து காதல் கதையைச் சொல்லும் படங்களுக்கும் இதற்கும் ஒரேயொரு வித்தியாசம் அந்த ரீ யூனியன்தான். அதிலும் கிளாஸ் ரூமில் படிப்பதுபோலவே கதை, திரைக்கதையை எழுதியிக்கும் இயக்குநரை பாராட்டலாம்தான். ஆனால் டோட்டல் லாஜிக் ஓட்டை என்பதும் இதுதான்.
படகில் பெரும் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே வந்து கொண்டிருக்கையில் படகு பயணத்தை யாராவது ரசிக்க முடியுமா என்ன..? அந்த நிலைமைதான் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும்..!
முதல் பாதியில், காண்பிக்கப்படும் பெரும்பாலான வகுப்பறை காட்சிகளில் உண்மைத்தன்மை இல்லை. ரசிகர்கள் பார்த்து, பார்த்து சலித்துப் போன அதே காட்சிகளையே மீண்டும், மீண்டும் காண்பித்து சோர்வாக்குகிறார்கள்.
கடைசி பெஞ்சில் யார் உட்கார்வது என்ற போட்டி, மாணவிகளுக்கு ரூட் போடுவதில் ஏற்படும் சண்டை, மிட்டாயை வைத்து நட்பாவது, டியூஷன் கிளாஸை சாக்காக வைத்து நெருங்குவது, கிரிக்கெட் கார்டு போன்ற சிற்சில காட்சிகள் மட்டுமே நமக்கு ஆறுதலைத் தந்திருக்கிறது.
ஆனால் இடைவேளைக்குப் பின்பான காட்சிகளில் மட்டும் ஒரு மெச்சூர்டான திரைக்கதையை வைத்து.. பள்ளி ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ளும்விதம், டீச்சர்-ஸ்டூடண்ட்ஸ் இடையேயான நட்புணர்வு, பேனாவைத் தொட்டே வருஷக்கணக்காச்சே என்ற புலம்பல்.. குடும்பத்தாரைப் பார்க்க வேண்டுமே என்ற ஆசை.. இப்படி இந்த வயதுக்கேற்ற பிரச்சினைகளையும் பேசியிருக்கிறார் இயக்குநர்.
பள்ளிக்கூட காதல் என்பதே ஒரு இன்பாச்சுவேஷன்.. இனக் கவர்ச்சிதானே ஒழிய.. உண்மையான காதலாக இருக்க முடியாது என்பதை இந்த பத்தாண்டுகளில் இந்த காதலர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதையும் தாண்டிய காதல்தான் தங்களுடையது என்பதை இவர்கள் படத்தில் சொல்லியிருந்தால் நிச்சயமாகப் பாராட்டி மகிழ்ந்திருக்கலாம்.
அல்லது ‘96’ படம் போல நினைவலைகளை கொட்டி அழுதிருந்தாலும் நமக்கும் கண்களில் கண்ணீர் திரண்டிருக்கும். ஆனால் இப்போதும் அதே பிளஸ் டூ மாணவர்கள் மெண்டாலிட்டியில் காதலைச் சொல்லத் தயங்கிக் கொண்டே கடைசிவரைக்கும் இழுத்துச் சென்றதால் “எப்படா விடுவீங்க..?” என்று நம்மை சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர்.
இந்த இரண்டாம் பாதியில் நமது பள்ளி நினைவுகளையும், உணர்வுகளையும் ஞாபகமூட்டும் வகையில் உண்மைக் காதலையும், முடிவுறா காதலையும், தொட முடியாத வாழ்க்கையையும் காட்டியிருந்தால் இந்தப் படம் நிச்சயமாக ‘96’ போல மறக்க முடியாத படமாக ஆகியிருக்கும்.
அதற்கான வாய்ப்புகள் கதையில் இருந்தும் இயக்குநர் கோட்டைவிட்டதால் நமக்கு இது சாதாரணமான ஒரு நாள் பள்ளி ஆண்டு விழாபோல் ஆகிவிட்டது..!
மறக்குமா நெஞ்சம் – நெஞ்சத்துலேயே நிக்கலை..!
RATING : 3 / 5