full screen background image

மறைந்திருந்து  பார்க்கும் மர்மம் என்ன – சினிமா விமர்சனம்

மறைந்திருந்து  பார்க்கும் மர்மம் என்ன – சினிமா விமர்சனம்

இத்திரைப்படத்தை எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் வி.மதியழகன்-ஆர்.ரம்யா இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்துள்ளனர். 

இவர்களுடன் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா,  மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், ஜே.டி.சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத் தொகுப்பை கவனித்துள்ளார். இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளரான இயக்குநர் ராகேஷ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சென்ற ஆண்டு ‘மெட்ரோ’ என்னும் திரைப்படத்தில் பெண்களிடமிருந்து செயினை பறிக்கும் திருடர்கள் பற்றிய திரைப்படம் வந்து அனைவரையும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து இத்திரைப்படமும் அதனை மையப்படுத்தியே வந்திருக்கிறது.

நகரில் பல ஏரியாக்களில் குழு அமைத்து செயின் அறுக்கும் வேலையைச் செய்து வருகிறார் மைம் கோபி. இதில் இவரது உப தளபதி ராம்ஸ். இவர்களது கூட்டத்தில் ஒரு டீம் ஒரு இரவில் ஒரு பெண்ணிடமிருந்து செயினை அறுத்துக் கொண்டு போக.. திடீரென்று அவர்களைத் துரத்தும் நாயகன் துருவா அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு அவர்களிடமிருந்து அந்த செயினை கவர்ந்து செல்கிறார்.

இதனை தங்களுக்கு விடப்பட்ட சவாலா நினைக்கிறது திருட்டுக் கூட்டம். இதேபோல் அடுத்தடுத்த சில செயின் பறிப்புகளிலும் துருவா தலையிட்டு செயினை பறித்துக் கொண்டு போக துருவாவுக்கு செக் வைக்கிறார் ராம்ஸ். இன்னொரு சம்பவத்தின்போது துருவாவை பொறி வைத்துப் பிடிக்கிறார் ராம்ஸ்.

அடி வாங்கி குத்துயிரும், குலையுயிருமாய் கிடக்கும் துருவாவை பார்க்கும் மைம் கோபி பேசாமல் துருவாவையையும் அவர்களது குழுவில் சேர்த்துக் கொள்ளும்படி சொல்கிறார். ராம்ஸ் மறுக்க முடியாமல் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

இதே நேரம் சென்னை மாநகர காவல் துறையில் இந்த செயின் திருடர்களை கண்டுபிடிக்க தனி போலீஸ் படை அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஜே.டி.சக்கரவர்த்தி தலைமையில் அமைக்கப்படுகிறது. அவரும் ஒரு பக்கம் இந்தத் திருட்டு சம்பவங்கள் பற்றி விசாரிக்கத் துவங்குகிறார்.

தனி ஆளாக முதன்முதலாக செயின் அறுக்கும் வேலையைச் செய்யும் துருவா போலீஸ் கமிஷனரின் மனைவியை காயப்படுத்தி செயினை அறுக்கிறார். ஆனால் இந்த ஆபரேஷனில் அவரது யமகா பைக் கீழே விழுக.. ஹெல்மெட்டும் தலையில் இருந்து விலகி கீழே விழுகிறது.

இப்போதும் அஸிஸ்டெண்ட் கமிஷனரின் மனைவியான தமிழ்ச் செல்வியும், அதே இடத்தில் இருந்த துருவாவை ஒன் சைடாக காதலித்து வந்த பாரதி என்னும் ஐஸ்வர்யா தத்தாவும் பார்த்துவிடுகிறார்கள்.

போலீஸ் இதனைத் துப்புத் துலக்க ஆரம்பிக்க.. தமிழ்ச் செல்வியின் கண்களில் முதலில் சிக்குகிறார் துருவா. அவர் முன்பு வேலை பார்த்த கேஸ் ஏஜென்ஸி மூலமாக துருவாவை பற்றி போலீஸ் விசாரிக்கிறது. துருவாவை கேஸ் ஏஜென்ஸியில் அடிக்கடி பார்க்க வரும் ஐஸ்வர்யாவை பற்றி தெரிய வர.. ஐஸ்வர்யாவிடம் சக்கரவர்த்தி விசாரிக்கிறார். ஐஸ்வர்யாவோ தனக்கு அந்த செயின் பறிப்பு நடந்த இடத்தில் அந்த ஆளை பார்க்கவே இல்லை என்கிறார். துருவாவையும் அதற்குப் பிறகு தான் பார்க்கவில்லை என்றும் சாதிக்கிறார்.

அடுத்த சில நாட்களில் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் துணை கமிஷனர் ஜே.டி.சக்கரவர்த்தியும், செயின் திருடன் துருவாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார் ஐஸ்வர்யா.

இது குறித்து சக்கரவர்த்தியிடம் கேட்டு அவரைக் கேள்விக்குள்ளாக்குகிறார் ஐஸ்வர்யா. இப்போது சக்கரவர்த்தி துருவா பற்றிய உண்மைக் கதையை வெளிப்படுத்துகிறார்.

துருவாவின் மனைவி இதேபோன்ற ஒரு செயின் திருட்டின்போது ஏற்பட்ட தாக்குதலில் இறந்து போனதையும், துருவாவின் அம்மா சரண்யா இப்போதுவரையிலும் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் படுத்திருப்பதையும் சொல்கிறார்.

திருடர்களைப் பிடிப்பதைவிடவும் இத்திருட்டுக் கும்பலின் தலைவர்வரைக்கும் பிடிக்கத்தான் அந்தக் கும்பலுக்குள் துருவாவை ஊடுருவ வைத்துள்ளதாகவும் வெகு விரைவில் மொத்தக் கும்பலையும் பிடிக்கவிருப்பதாகவும் சொல்கிறார் சக்கரவர்த்தி.

சொன்னதுபோலவே போலீஸ் திருட்டுக் கும்பலில் தலைமை வரையிலும் பிடித்தார்களா.. இல்லையா.. துருவா-ஐஸ்வர்யா காதல் என்ன ஆனது என்பதுதான் மீதமான திரைக்கதை.

‘மெட்ரோ’ படத்தில் சஸ்பென்ஸ், திரில்லரோடு கொண்டு போய் செயின் திருடர்களின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டினார்கள். ஆனால் இந்தப் படத்தில் செயின் திருடர்களின் நோக்கம் செயினை அறுப்பதுதான் என்றாலும் அதுவும் ஒரு கொலை முயற்சிதான். சம்பவத்தில் யாரேனும் இறந்து போனால் அதுவும் ஒரு கொலை வழக்குதான் என்பதையும் அழுத்தம், திருத்தமாய் சொல்லியிருக்கிறார்கள்.

கூடுதலாக செயின் திருடர்களின் பழக்க வழக்கம்.. அவர்கள் போடும் ஸ்கெட்ச்.. எப்படிப்பட்ட பெண்களிடத்தில் செயின்கள் அறுக்கப்படுகின்றன. ஏன் அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றியும் விளக்கமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

முதல் தேர்வாக சேலை அணிந்திருக்கும் பெண்கள்.. அப்போதுதான் செயின் அறுக்கப்படும்போது பெண்களால் வேகமாக ஓடி வர முடியாது.. இரண்டு, குழந்தைகளை தூக்கி வைத்திருக்கும் பெண்கள்.. இப்போதும் பெண்கள் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடி வர மாட்டார்கள் என்கிற தைரியம்.. இப்படி செயின் அறுப்புக்குத் தேர்வு செய்யும் பெண்களையே பார்த்து, பார்த்து தேர்வு செய்கிறார்கள். அப்படியும் ஒரு சில இடங்களில் வகையாக மாட்டிக் கொண்டு பொது மக்களிடமும், காவல்துறையினரிடமும் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். இருந்தும் திரும்பத் திரும்ப இதே திருட்டுத் தொழிலுக்கு அவர்கள் வருவது ஏன்..?

மிக எளிதாக தங்கத்தை விற்கலாம். அதிகமாக சம்பாதிக்கலாம்.. இது இரண்டும்தான் காரணம்.. இதுதான் இன்றைய இளைய சமூகத்தை தடம் புரள வைக்கிறது என்பதையும் யதார்த்த களத்தோடு இயக்குநர் படத்தில் சொல்லியிருக்கிறார்.

அதோடு இந்த கேங்கிற்கு பின்னால் இருப்பது வெறும் திருடர்கள் மட்டுமில்லை. சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்கள். பெரும் பணக்காரர்கள். நகைக் கடை முதலாளிகள் என்று அவர்களுடைய நெட்வொர்க்கையும் வெளிப்படையாக்கியிருக்கிறார் இயக்குநர். இவர்களது அம்பாக இருந்து தங்களுடைய வாழ்க்கையை இழக்கிறார்கள் சில, பல வாலிபர்கள். இதைத்தான் நாம் யோசிக்க வேண்டும்..!

நகைக் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்படும் நகைகள் யார், யார் கைகளுக்குச் சென்று எப்படியெல்லாம் உருமாறி, மீண்டும் அதே நகைக்கடைக்கு வந்து சேர்கிறது என்பதை மிக டீடெடியிலாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். சிம்ப்ளி சூப்பர்..!

ஒரு பெரும் சோகத்தைச் சுமந்து கொண்டு பழி வாங்க அலையும் ஜப்பான் என்ற கணவனாக துருவா நடித்திருக்கிறார். மனோபாலாவுடன் காமெடியில் பங்கெடுக்கும் அளவுக்கு இரண்டாவது படத்திலேயே வளர்ந்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படியான நடிப்புக்கான ஸ்கோப் படத்தில் இவருக்கு வழங்கப்படவில்லை என்பதால் இருக்கின்ற காட்சிகளில் அந்தக் கேரக்டருக்கு உரிய நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

தன் மகனது ஐயப்பன் என்கிற பெயரை ஜப்பான் என்று பெயர் மாற்றியழைக்கும் அளவுக்கு இருக்கும் அவரது தாயாரான சரண்யா பொன்வண்ணன்தான் படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொட்டியிருக்கிறார். நிலம் பார்க்கப் போகும் சாக்கில் ஊர், ஊராகப் போய் கோவில்களைப் பார்த்து கும்பிடும் ஒரு ஏழரை பொம்பளை கேரக்டரை ச்சும்மா ஊதித் தள்ளியிருக்கிறார் சரண்யா.

இதெல்லாம் இவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல என்றாகிவிட்டது. பேருந்தில் அஞ்சனா பிரேமிடம் பொய் சொல்லி போன் நம்பரை வாங்கிவிட்டு என் பையனை கட்டிக்கிறியா என்று ஆசை பொங்க கேட்கும் இந்த அம்மாவை வாய்க்கப் பெற்றவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதே உற்சாகத்தோடு இறுதியில் ஐஸ்வர்யாவிடமும் கேட்கும்போது படத்தின் தன்மையையே மாற்றிவிட்டார் சரண்யா.

ஐஸ்வர்யா தத்தாவை ஜாகிங்கில் ஓட வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர். அவருக்கான சில, பல குளோஸப் ஷாட்டுகளே அழகை கொட்டுகின்றன. துருவாவை தவறாக நினைத்து முதலில் கோபப்பட்டு பின்பு உண்மை தெரிந்து கண்ணீர்விட்டு கொஞ்சம் சோகத்தையும் கூட்டுகிறார். இப்போது பிக்பாஸில் இவர் செய்யும் சேட்டைகளை பார்க்கும்போது இன்னமும் இவரை இயக்குநர் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

இன்னொரு நாயகியான அஞ்சனா பிரேமும் கவர்ந்திழுக்கிறார். காட்சிகள் அதிகமில்லையென்றாலும் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.

தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி துணை கமிஷனராக நடித்திருக்கிறார். தெலுங்கில் இருந்து அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக புதிதாக எதையுமே அவர் படத்தில் செய்யவில்லை. இவருக்குப் பதிலாக ஜான் விஜய் போன்ற தமிழ் நடிகர்களையே பயன்படுத்தியிருந்தால் படத்தின் மார்க்கெட்டிங்கிற்காகவாவது உதவியிருக்கும்..!

வில்லன்களான ராம்ஸ், மைம் கோபி.. பின்பு எப்போதும் எதையாவது பேசி இடையூறு செய்து கொண்டேயிருக்கும் அடியாள்.. என்று இந்த வில்லன் கூட்டணியும் ஒருவித பயமுறுத்தலை தெளிவாகச் செய்திருக்கிறார்கள்.

இவர்களையெல்லாம் வைத்து பின்னணியில் ஆட்டம் காட்டும் நகைக்கடை முதலாளியாக ராதாரவி நடித்திருக்கிறார். உலகத்துல முதல்ல திருடன்தான் தோன்றினான். அதுக்குப் பின்னாடி அவனைப் பிடிக்கத்தான் போலீஸ் உருவாகுச்சு. அது இப்போவரைக்கும் ஓடிக்கிட்டேயிருக்கு. இது நிக்காத ஓட்டம். யாராலேயும் தடுத்து நிறுத்த முடியாது. நாங்க இருக்குறவரைக்கும் அது முடியாது..” என்கிற ராதாரவியின் பேச்சில் இருக்கும் உண்மைத்தனம்தான் படமே..!

போதாக்குறைக்கு அருள்தாஸும் இவர்களுடன் பக்கபலமாக வந்து நிற்கிறார். ராதாரவி போன்ற இரட்டை வேடம் பூண்ட மனிதர்களால்தான் ராம்ஸ், மைம் கோபி, அருள்தாஸ் போன்றவர்களும் மாட்டிக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். கடைசியில் அனைவருமே பொசுக்கென்று துப்பாக்கிக் குண்டு பலியாவதுதான் கொடுமை.

இத்தனை டீடெயிலிங் வெர்ஷனாக படத்தின் கதையை தேர்வு செய்து, திரைக்கதை எழுதியவர்கள் இருக்கின்ற லாஜிக் ஓட்டைகளை அடைப்பதுபோலவும் செய்திருக்கலாமே..? அங்கே ஏன் இயக்குநர் கோட்டைவிட்டார் என்று தெரியவில்லை.

துருவாவை கமிஷனரின் மனைவி அடையாளம் காட்டும் காட்சி இயக்குநர் சோம்பேறித்தனப்பட்டு திரைக்கதைக்காக மெனக்கெடாமல் மிக எளிதாக எழுதியிருக்கிறாரோ என்று சொல்லத் தோன்றுகிறது. இது ஏதோ எதிர்பாராமல் கடவுள் விருப்பத்தின் பேரில் நடப்பதுபோல வருகிறது. திரைக்கதை அடிபட்டுப் போகிறது இயக்குநரே..!

இதேபோல் தன்னிடம் மோதிவிட்டுப் போகும் துருவாவை பார்த்து ஞாபகப்படுத்திப் பார்க்கும் கமிஷனர் அதே மருத்துவமனையில் வந்து விசாரித்தாலே துருவாவைப் பிடித்துவிட முடியுமே..? ஏன் கமிஷனர் அதைச் செய்யவில்லை..?

கமிஷனரின் மனைவியின் தாலிக் கொடியை அறுக்கிறார் துருவா. அவருக்கு ஏதாவது ஆகிப் போனால் அதற்கு யார் பொறுப்பாவது.. சக்கரவர்த்தியா..? அல்லது துருவாவா..? அதோடு துருவா பயிற்சியின்போது ஈடுபடுவதுகூட ஒரு பொதுஜனத்திடம்தானே.. இவர்களெல்லாம் இந்தக் கேஸுக்காக பலிகடாவாக்கப்பட்டவர்களா..? சரி.. விட்டுவிடுவோம்..!

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு இயக்குநருக்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். இரவு நேரக் காட்சிகளையெல்லாம் அழகாக பதிவு செய்திருக்கிறார். ராம்ஸின் இடம், அவர்கள் கலந்து கொள்ளும் காட்சிகள்.. கிளைமாக்ஸில் அனைவரையும் ஓட, ஓட விரட்டி பலியாக்கும் காட்சிகளிலெல்லாம் ஒருவித டெம்போவை ஒளிப்பதிவாளரே ஏற்றி வைத்திருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

இதேபோல் படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. செயின் பறிப்புக் காட்சிகளில் ஒரு வேகமும், பதட்டமும் பார்ப்பவர்களுக்கு இருக்கும்வகையில் அனைத்துக் காட்சிகளையும் தொகுத்திருக்கிறார். பாராட்டுக்கள் ஸார்..!

அச்சுவின் இசையில் பாடல்கள் ஒலித்தன. ஆனால் வழக்கம்போல தியேட்டரைவிட்டு வெளியில் வந்தவுடன் மறந்துவிட்டன. பாடல் காட்சிகளை மட்டும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் ரசிக்க முடிகிறது.

உலகத்தில் எண்ணெய்க்கு பிறகு சக்தி வாய்ந்தது தங்கம் மட்டுமே. இப்போதும் அனைத்து நாடுகளின் பொருளாதார வலிமையே அந்த நாட்டிடம் இருக்கும் தங்க கையிருப்பை வைத்துதான் சொல்லப்படுகிறது. தங்கத்தின் ஏற்றத் தாழ்வுதான் டாலருக்கு எதிரான அந்தந்த நாட்டின் பணத்தின் மதிப்பை கூட்டுகிறது.. அல்லது குறைக்கிறது..

இந்தியாவில் ஏழை குடிசை வீடாக இருந்தால்கூட கொஞ்சுண்டு தங்கத்தை சேமித்து வைக்கிறார்கள். அதுதான் அவசரத்திற்கு ஏழை பங்காளர்களுக்கு கடனுதவிக்கு வழி வகுக்கிறது. இதனாலேயே தங்கம் இந்தியாவில் வரைமுறையில்லாமல் வளர்ச்சியடைந்திருக்கிறது. இப்போது பவுன் 16000 ரூபாய் வரையிலும் விற்கிறது. இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இது கூடும்போது தங்கத்திற்காக கொலைகளும், கொள்ளைகளும் நிச்சயம் அதிகரிக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாதது.

இதற்காகத்தான் எத்தனை அடிபட்டாலும், மிதிபட்டாலும், சிறை சென்று வந்தாலும் மீண்டும், மீண்டும் தங்கத்தை எளிதாக கொள்ளையடிக்க முன் வருகிறார்கள் திருடர்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல இந்தத் திருடர்களையும் நூறு சதவிகிதம் ஒழிக்க முடியாது என்றாலும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை அந்த இடத்திலேயே சுட்டுத் தள்ளினாலே போதும்.. நிச்சயமாக இது போன்ற குற்றச் செயல்கள் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

இடைவேளையின்போதே படத்தின் கதை என்னவென்பது தெரிந்துவிடுவதால் படத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணாமல் போய், அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பு குறைவானதுதான் படத்தின் மீதான ஒரு குறை.

இருந்தும், ஒரு சாதாரண பொழுது போக்கு படமாக இல்லாமல்… செயின் திருட்டு, திருடர்கள், காவலர்களின் விசாரணை.. பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப வாழ்க்கை.. இவை பற்றிய விழிப்புணர்வு படமாக இந்தப் படத்தினை உருவாக்கியிருப்பதால், இயக்குநரை மனதாரப் பாராட்டுவோம். வாழ்த்துவோம்..!

Our Score