இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் உடலுக்கு நடிகர்-நடிகைகளும், அவரது ரசிகர் பெருமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கண்ணீரோடு அவருடைய உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள கே.பாலசந்தரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், த.மா.கா. (மூப்பனார்) தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், விஜய், விக்ரம், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜீவா, பிரபு, விக்ரம் பிரபு, சத்யராஜ், ராமராஜன், விமல், பிரகாஷ்ராஜ், பாண்டியராஜன், பிரசன்னா, விவேக், கரண், சரத்பாபு, எஸ்.வி.சேகர், சார்லி, சூரி, வையாபுரி, மயில்சாமி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் ஜெயப்பிரதா, காஞ்சனா, ராதிகா சரத்குமார், குஷ்பு, சுஹாசினி, ஸ்ரீபிரியா, சினேகா, அர்ச்சனா, மனோரமா, ஒய்.விஜயா, சி.ஐ.டி.சகுந்தலா, குட்டி பத்மினி, லட்சுமி ராமகிருஷ்ணா, பாத்திமா பாபு, ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா..
டைரக்டர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், டி.ராஜேந்தர், மகேந்திரன், எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகரன், மணிரத்னம், ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், பார்த்திபன், சேரன், அமீர், என்.லிங்குசாமி, சமுத்திரகனி, ஆர்.சுந்தர்ராஜன், டி.பி.கஜேந்திரன், எழில், சிம்புதேவன், வசந்தபாலன், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், பாடல் ஆசிரியர்கள் மு.மேத்தா, பிறைசூடன், பா.விஜய், சினேகன், பின்னணி பாடகி பி.சுசீலா,
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், முக்தா சீனிவாசன், ஆர்.பி.சவுத்ரி, ‘கலைப்புலி’ எஸ்.தாணு, கேயார், டி.ஜி.தியாகராஜன், கே.முரளிதரன், டி.சிவா, ராதாகிருஷ்ணன், ‘கலைப்புலி’ ஜி.சேகரன், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, கே.எஸ்.சீனிவாசன், கபார், ‘கில்டு’ செயலாளர் ஜாகுவார் தங்கம், முரளி ராமநாராயணன், விஜயமுரளி, கமலா தியேட்டர் அதிபர் சித.கணேசன், மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேற்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
‘உத்தம வில்லன்’ பட வேலைகளுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்ததால், பாலசந்தரின் இறுதிச்சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
பெங்களூரில் வசிக்கும் நடிகை சரோஜாதேவி போன் மூலம் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியிடம் தனது அனுதாபத்தை தெரிவித்தார்.
குடும்ப நண்பரின் நிகழ்ச்சி ஒன்றுக்காக பிரான்சு சென்றுள்ள டைரக்டர் ஹரியும் போன் மூலம் புஷ்பா கந்தசாமியிடம் தனது துயரத்தை பகிர்ந்து கொண்டார்.
மாலை 3 மணிக்கு, கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் அவருடைய வீட்டில் இருந்து புறப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். நடிகர் ரஜினிகாந்த், பெசன்ட் நகர் மயானம்வரை சென்று தன் குருவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். வாரன் சாலையில் இருந்து பெசன்ட்நகர் மின் மயானம்வரை 6 கி.மீ தூரம் நடந்தே சென்றார்கள். மாலை 5.30 மணிக்கு கே.பாலசந்தரின் உடல் தகனம் செய்யப்பட்டது.