full screen background image

இயக்குநர்-நடிகர் மனோபாலா திடீர் மரணம்

இயக்குநர்-நடிகர் மனோபாலா திடீர் மரணம்

இயக்குநரும், நடிகருமான மனோபாலா இன்று மதியம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

நாகர்கோவில் அருகேயிருக்கும் ‘மருங்கூர்’ எனும் ஊரில் 1953-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி பிறந்தவர் மனோபாலா. இவரது இயற் பெயர் பாலசந்தர். சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தார்.

1979-ம் ஆண்டில் ‘புதிய வர்ப்புகள்’ படத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார் மனோபாலா. பாரதிராஜாதான் ‘பாலசந்தர்’ என்ற பெயரை ‘மனோபாலா’ என்று மாற்றியவர். தொடர்ந்து பாரதிராஜாவின் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் மனோபாலா.

1982-ல் ‘ஆகாய கங்கை’ என்ற படத்தின் மூலம் இயக்குநரானார் மனோபாலா. இந்த படத்துக்கு மணிவண்ணன் கதை எழுதியிருந்தார். இதில் கார்த்திக், சுகாசினி இணைந்து நடித்தனர். படம் வெற்றி பெற்றது.

இதையடுத்து ‘நான் உங்கள் ரசிகன்’, ‘பிள்ளை நிலா’, ‘பாரு பாரு பட்டணம் பாரு’, ‘சிறைப்பறவை’, ‘தூரத்து பச்சை’, ‘ஊர்க்காவலன்’, ‘சுட்டிப்பூனை’, ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’, ‘மூடு மந்திரம்’, ‘தென்றல் சுடும்’, ‘மல்லு வேட்டி மைனர்’, ‘வெற்றிப்படிகள்’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘செண்பகத் தோட்டம்’, ‘முற்றுகை’, ‘கறுப்பு வெள்ளை’, ‘பாரம்பரியம்’, ‘நந்தினி’, ‘அன்னை’, ‘சிறகுகள்’, ‘நைனா’ என்று 24 படங்களை அவர் இயக்கினார்.

‘புதிய வார்ப்புகள்’ படத்தில் இவருக்கு சிறு வேடம் ஒன்றை பாரதிராஜா கொடுத்திருந்தார். நகைச்சுவை ததும்ப பேசும் பழக்கத்தால் இவருக்கு இயக்குநர் ஆனதுமே நடிக்கும் வாய்ப்புகளும் வந்தன.

‘கல்லுக்குள் ஈரம்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1994-ம் ஆண்டில் சத்யராஜ் நடித்த ‘தாய் மாமன்’ படத்தில் காமெடி கேரக்டரில் நடித்தது திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர், ‘மின்சார கண்ணா’, ‘தாஜ்மகால்’, ‘சேது’, ‘சமுத்திரம்’, ‘வில்லன்’, ‘பந்தா பரமசிவம்’, ‘ஜெயம்’, ‘விசில்’, ‘ஐஸ்’, ‘காக்க காக்க’, ‘பாய்ஸ்’, ‘த்ரி ரோசஸ்’, ‘பிதாமகன்’, ‘ஜேஜே’, ‘காதல் கிறுக்கன்’, ‘அருள்’, ‘பேரழகன்’, ‘சந்திரமுகி’, ‘அந்நியன்’, ‘கஜினி’, ‘திருப்பதி’, ‘தலைநகரம்’, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘வரலாறு’, ‘வாத்தியார்’, ‘தீபாவளி’, ‘கிரீடம்’, ‘மலைக்கோட்டை’, ‘பொல்லாதவன்’, ‘யாரடி நீ மோகனி’, ‘ராஜா ராணி’, ‘வேட்டைக்காரன்’, ‘தமிழ்ப்படம்’, ‘சிங்கம்’, ‘சிறுத்தை’, ‘பயணம்’, ‘முனி-2’, ‘துப்பாக்கி’, ‘அரண்மனை’, ‘லிங்கா’, ‘காஞ்சனா-2’, ‘ரஜினி முருகன்’, ‘தோழா’, ‘தெறி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கலகலப்பு’, ‘கலகலப்பு-2’, ‘பிகில்’ உள்பட 250-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.

விவேக்குடன் சேர்ந்து ‘எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்’ என்று வசனம் பேசி மனோபாலா நடித்த காமெடி காட்சி மிகவும் பிரபலமானது.

கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த 10 நாட்களாக அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் காலமானார். அவருக்கு மனைவி உஷா, மகன் ஹரீஷ் ஆகியோர் உள்ளனர்.

Our Score