‘களவாணி’, ‘வகை சூட வா’, ‘நையாண்டி’ படங்களின் இயக்குனர் சற்குணம் முதல் முதலாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படமே ‘மஞ்சப்பை’. இந்தப் படத்தை அவரின் உதவியாளர் ராகவன் இயக்கியுள்ளார். இந்தப்ப் படத்தை சற்குணத்துடன் இணைந்து இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுனமும் சேர்ந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தில் விமல் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, விமலின் தாத்தாவாக, கதையின் ஆணிவேராக நடித்திருக்கிறார் ராஜ்கிரண்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் சற்குணம், மற்றும் படத்தின் ஹீரோயின் லட்சுமி மேனனை தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர்.
கிராமத்து மண்ணோடு ஒன்றிவிட்ட ஒரு தாத்தாவை நகரத்தில் வசிக்கும் பேரன் தன்னோடு வைத்திருந்து அவஸ்தைப்படும் சூழலில் அவனுக்கு வரும் காதலும், பின் விளைவுகளும்தான் படமாம்..
தாத்தா கேரக்டரில் ராஜ்கிரண் வாழ்ந்திருக்கிறாராம். அந்த அளவுக்கு அவரது நடிப்பு பின்னியிருக்கிறதாம்.. டிரெயிலரில் சில காட்சிகளையும், பாடலையும் பார்த்தபோது படத்தின் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது..!
இயக்குநர் ராகவன், பேச்சுக்கு பேச்சு ராஜ்கிரணை அப்பா, அப்பா என்றே அழைத்தார். விமலும் தன்னுடைய பேச்சில் ராஜ்கிரணுக்கு கொடுத்த மரியாதையை தயாரிப்பாளருக்குக்கூட கொடுக்கவில்லை.. ராஜ்கிரண் அமைதியாக தனக்கு இது அடுத்த படம் என்ற வகையில் சிம்பிளாக பேசினார்.
அத்தனை பேருக்கும் வட்டியும் முதலுமாக பேசியவர் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் ஓனரான இயக்குநர் லிங்குசாமிதான்..!
“இந்தக் கதையைக் கேட்கும்போதே என் கண்ணு கலங்கிருச்சு. சரி, இந்த படத்தை நாமளே தயாரிக்கலாம்ங்கிற முடிவுக்கு அப்பவே வந்துட்டேன். அதே மாதிரி படம் தயாராகி பல மாதங்கள் கழித்தும், என்னால் பார்க்க முடியாதளவுக்கு எனக்கு பல வேலைகள். எப்படியோ ஒரு நாள் ஒதுக்கி என் குழந்தைகள், அண்ணன் பிள்ளைகளோடு பார்த்தேன். படம் முடிஞ்சதும் நான்தான் அழுகிறேன்னு நினைச்சா படம் பார்த்த எல்லாருமே அழுதுக்கிட்டிருந்தாங்க. ‘என்னடா’ன்னு கேட்டேன்.. ‘தாத்தா ஞாபகம் வந்திருச்சு சித்தப்பா’ன்னாங்க.. அந்த அளழுக்கு நம்ம உணர்வுகளைத் தூண்டி விடுற படம் இது. அதற்கப்புறம், இந்த படத்தின் பாடலாசிரியர் யுகபாரதி என் தம்பி போஸுக்கு போன் பண்ணி, ‘இந்த படம் தமிழ்ச் சினிமாவில் தவிர்க்க முடியாத குறிப்பிட்ட படமாக இருக்கும்’ என்று சொல்ல, அதற்கப்புறம்தான் அவரும் படத்தை பார்த்து அழுக.. உடனே மஞ்சப்பையை வாங்கி வெளியிடும் வேலைகளில் இறங்கினோம்…” என்றார்.
மேலும், “விக்ரமன், பாக்யராஜ் இருவரும் ‘பீக்’கில் இருந்தபோது அவர்களுடைய படத்தில் கதை, திரைக்கதையில் என்ன மாதிரியான ஆதிக்கம் செலுத்தினார்களோ, அதே மாதிரியான அழுத்தம் கொடுத்து என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டார் ராகவன்…” என்று பாராட்டித் தள்ளிவிட்டார் லிங்குசாமி.
ஐயோ விமலாச்சே என்று பதைபதைப்பவர்களுக்காகவே நாசூக்காக ஒரு காமெடியை வைத்திருக்கிறார்கள் படத்தில்.. விமல் வழக்கம்போல தலையை ஆட்டியபடியே பேசுவது போன்ற காட்சியைத் தொடர்ந்து லட்சுமி மேனன் கோபமாக, “யோவ்.. மொதல்ல இப்படி தலைய தலைய ஆட்டுறதை நிறுத்து..” என்கிறார். சபாஷ் டைரக்டர்.. இதைத்தான் நாங்க ரொம்ப வருஷமா சொல்லிக்கிட்டிருக்கோம்..!
இன்னொன்னு.. படத்தில் லட்சுமி மேனனை அறிமுகப்படுத்தும் விமலிடம், “அட அப்படியே கிழவிதாண்டா..” என்று ராஜ்கிரண் ஆச்சரியப்படும் காட்சியும், இதற்கு லட்சுமிமேனன் கொடுக்கும் ரியாக்ஷனும் அசத்தல்..!
ஒரே படத்தில் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் சங்கு..!