தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’ அமைப்பின் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. இதில் அந்தந்த அணியினர் செய்யப் போகும் உதவிகளைச் சொல்லி ஓட்டுக் கேட்பதையும் தாண்டி தனி மனிதத் தாக்குதலாக மாறிவிட்டது.
தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜூம், நடிகர் மஞ்சு விஷ்ணுவும் ஒருவர் மாற்றி ஒருவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர்.
தபால் ஓட்டு போடும் மூத்த உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக மஞ்சு விஷ்ணு மற்றும் அவரது தந்தையான மோகன்பாபு மீது புகார் சொன்னார் நடிகர் பிரகாஷ்ராஜ். இதை மறுத்த மஞ்சு விஷ்ணு “பிரகாஷ்ராஜ் நல்லவரில்லை. என் குடும்பத்தைத் தேவையில்லாமல் இழுத்தால் அவருக்கு மரியாதை இருக்காது” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.
இது குறித்து நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய மஞ்சு விஷ்ணு, “பிரகாஷ்ராஜ் சொல்வது அனைத்தும் பொய். நாங்கள் யாரிடமும் வாக்குக்காக பணம் கொடுக்கவில்லை. தேர்தலில் நிற்பதால் அனைவரிடமும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறோம்.
அதன்படி வாக்கு கேட்கும்போது வயதானவர்களிடத்தில் வாக்குகளை எப்படி செலுத்துவது.. தபால் வாக்குகளை எப்படி அனுப்பி வைப்பது என்பதை நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். இதில் தப்பில்லையே..?
பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர் மட்டுமே. ஆனால் நல்ல மனிதரல்ல. ஸ்கிரீனுக்கு வெளியில் அவருக்கு எங்கேயுமே நல்ல பெயர் இல்லை. ஒவ்வொரு மாநில சினிமா துறையிலும் அவர் ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து வைத்திருக்கிறார். நீங்கள் எந்தவொரு இயக்குநரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.. பிரகாஷ் ராஜ் எவ்வளவு பெரிய டார்ச்சர் பார்ட்டி என்று சொல்வார்கள்.
அவர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவர் தேவையில்லாமல் எனது குடும்பத்தை இதில் இழுக்கிறார். இது அவருக்கு நல்லதல்ல. இது தொடர்ந்தால் அவருக்கான மரியாதையைக்கூட நான் தர மாட்டேன்…” என்று வெடித்துள்ளார்.