தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான வைரமுத்துவுக்கு மலையாள இலக்கிய உலகத்தின் மிகப் பெரிய விருதான ஓ.என்.வி. குறுப் நினைவு விருது வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது.
இதுவரையிலும் மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்குத்தான் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும்.
இந்த விருது ஒரு சிலை, ஒரு தகுதி பட்டயம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டதாகும்.
இந்த விருதுக்கு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
வைரமுத்து தங்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று 17 பெண்கள் இதுவரையிலும் வெளிப்படையாக புகார் சொல்லியிருந்தார்கள். அப்படி சொல்லியும் இதுவரையிலும் வைரமுத்து மீது தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த யாருமே கண்டனக் குரல்கள் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வைரமுத்துவுக்கு தமிழ்த் திரைப்படத் துறையில் தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைத்துதான் வருகின்றன. இது பற்றி பெண்ணியம் பேசும் நடிகைகள்கூட எதுவும் பேசாமல் அமைதியாய் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் வைரமுத்துவுக்கு இந்த விருதினை வழங்கியதற்கு மலையாள திரைப்பட நடிகையான ‘பூ’ பார்வதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தன்னுடைய ட்வீட் பக்கத்தில், “ஓ.என்.வி. ஸார் நம்முடைய பெருமைக்குரியவர். மரியாதைக்குரியவர். அவருடைய கவிதைகளும், பாடல்களும் வேறு யாராலும் நிரப்பப்பட முடியாதவை. அவர் அனைத்து வகைகளிலும் நமது கலாச்சாரத்தில் கலந்திருக்கிறார். அவருடைய படைப்புகளினால் நமது அறிவும், இதயமும் பலனடைந்திருக்கின்றன.
ஆனால் அதே சமயம் பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு இந்தப் பெருமைக்குரியவரின் விருதினைக் கொடுத்து நமது கவிஞரை ஏன் அவமானப்படுத்த வேண்டும்..?” என்று கேட்டுள்ளார் நடிகை பார்வதி.
இவர் போலவே பாடகியும், பின்னணி கலைஞருமான சின்மயி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். இதேபோல் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டிய பெண்களும் எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளனர்.
இந்த விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் ஓஎன்வி குரூப்பின் கல்ச்சுரல் அகாடமியில் கேரள முதல்வர் பினராயி விஜயன்தான் தேர்வுக் கமிட்டித் தலைவராக இருக்கிறார். கே.ஜே.யேசுதாஸும், எம்.டி.வாசுதேவன் நாயரும் தேர்வுக் கமிட்டியில் உள்ளார்கள். இந்த அகாடமியின் தலைவராக பிரபல மலையாள இயக்குநரும், கதாசிரியருமான அடூர் கோபாலகிருஷ்ணன் பதவி வகிக்கிறார்.
இப்போது இவர்களைக் குறி வைத்து ட்வீட்டரில் கடும் வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன.