full screen background image

மகாராஜா – சினிமா விமர்சனம்

மகாராஜா – சினிமா விமர்சனம்

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த காராஜா’.

இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அபிராமி, இயக்குநர் பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி, பாய்ஸ் மணிகண்டன், சச்சனா நாமிதாஸ், வினோத் சாகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு காந்தாராபுகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இவர் காந்தாராபடத்திற்கு முன்பு நித்திலனின் குரங்கு பொம்மைபடத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலை இயக்கம் – வி.செல்வக்குமார், வசனம் – நித்திலன் சாமிநாதன், ராம் முரளி.

குரங்கு பொம்மைபட புகழ் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். 

‘மகாராஜா’ என்னும் விஜய் சேதுபதி பாரதிராஜாவின் சவரக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய ஒரே மகளான ஜோதி, 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் மகாராஜா.

மகள் விளையாட்டு போட்டிக்காக வெளியூர் சென்ற தருணத்தில் அவருடைய வீட்டில் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. வீட்டில் இருந்த ‘லட்சுமி’ என்ற குப்பைத் தொட்டி காணாமல் போய்விடுகிறது. அதைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் 7 லட்சம் ரூபாய் தருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டரான நட்டியிடம் சொல்கிறார் மகாராஜா. பணத்தாசை கொண்ட நட்டி, சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், ஏட்டு முனீஸ்காந்துடன் இணைந்து துப்புத் துலக்க இறங்குகிறார்கள்.

அந்த ஏரியா கவுன்சிலர் தனது காரை சர்வீஸ் கொடுத்து வாங்கிய பிரச்சினையில் ‘பாய்ஸ்’ மணிகண்டனைத் தாக்கிவிட.. மணிகண்டன் அன்றைய இரவில் கவுன்சிலரை ‘பாரு’க்குள்ளேயே போய் பாட்டிலால் மண்டையை உடைத்துவிடுகிறார். ஆனால், அடுத்த நாள் ‘பாய்ஸ்’ மணிகண்டன் காணாமல்போய்விட அதுவும் அதே ஸ்டேஷனில் புகாராகிறது.

இன்னொரு பக்கம் எலெக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருக்கும் அனுராக் காஷ்யப் தனது கடை ஊழியரும், நண்பனுமான வினோத் சாகருடன் இணைந்து இரவு நேரங்களில் வீடுகளில் கொள்ளையடிக்கிறார். அப்போது அவருடன் செல்லும் வினோத் சாகர் வீட்டில் இருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரமும் செய்கிறார். இவ்வளவு அக்கிரமம் செய்யும் அனுராக், தனது மனைவி அபிராமி மற்றும் கைக்குழந்தையுடன் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்.

இரும்பாலான அந்தப் பழைய குப்பைத் தொட்டியை மீட்க முடியாத நிலைமையில் அதேபோல் புதிதாக ஒரு குப்பைத் தொட்டியை செய்து அதை ‘மகாராஜா’விடம் கொடுத்து பணத்தை வாங்கலாம் என்று நட்டி டீம் முடிவு செய்யும்போது, இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் ஒரு உண்மை அவர்களுக்குத் தெரிய வருகிறது.

அது என்ன உண்மை..? உண்மையில் காணாமல் போனது குப்பைத் தொட்டியா..? அல்லது வேறொன்றா..? மகாராஜா ஏன் அந்தக் குப்பைத் தொட்டிக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்..? அவரது மகள் திரும்பி வந்தாளா..? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்த ‘மகாராஜா’ திரைப்படம்.

இந்தக் கதையை தன்னுடைய 50-வது படத்துக்காகத் தேர்வு செய்த விஜய் சேதுபதியின் தைரியத்தை முதலில் பாராட்டியே ஆக வேண்டும். மற்றைய ஹீரோக்கள் அனைவரும் கமர்ஷியல் படங்களையே தேர்வு செய்யும்போது விஜய் சேதுபதி மட்டும் வித்தியாசமாக இந்தக் கதையைத் தேர்வு செய்து, படத்தில் இந்தக் கதையின் நாயகனாகவே மாறியிருப்பது பாராட்டுக்குரியது..!

‘மகாராஜா’ என்ற பெயர்தான் அமைந்திருக்கிறதே ஒழிய, வாழ்க்கையில் அந்தப் பெயருக்கேற்ற ஒரு பவுசினைக்கூட பெறாதவர் விஜய் சேதுபதி. எப்போதும் இறுகிய முகத்துடன், பேசக் கூட தெரியாமல்.. தன் மகள் எந்தத் தவறும் செய்ய மாட்டாள் என்று உறுதியாய் நம்பும் அப்பாவி அப்பாவாகவும் வாழ்ந்திருக்கிறார்.

துவக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனை துவம்சம் செய்யும் காட்சியில் அவர் காட்டும் வெறித்தனம் பயமுறுத்துகிறது. பின்பு அப்பாவியாய் போலீஸார் கேட்கும் பணத்தையெல்லாம் கொடுத்துவிட்டு அதே ஸ்டேஷனில் எடுபுடி வேலை செய்து கொண்டே குப்பைத் தொட்டிக்காகக் காத்திருக்கும் அந்தக் காட்சிகளிலெல்லாம் ஒரு பரிதாப உணர்வை வரவழைத்திருக்கிறார் சேதுபதி.

சண்டை காட்சிகளில் இதைவிட மூர்க்கத்தனத்தை வேறு யாரும் காட்டிவிட முடியாது என்பதைப்போல சேதுபதி காட்டியிருக்கும் உயிர்ப்பான நடிப்பும், வேகமான சண்டை ஆக்சன்களும் தெறிக்க விடுகின்றன.

சிங்கம்புலியிடம் போடும் சண்டையிலும், அனுராக் காஷ்யப்புடனான சண்டை காட்சியிலும் விஜய், தனது நடிப்புத் திறனைக் காண்பித்தபடியே ஆக்சனை காட்டியிருப்பது சிறப்புதான். மொத்தத்தில் இந்த வருடத்திய விருதுகள் விஜய் சேதுபதிக்குத்தான் என்பது உறுதி.

தனது வட்டமான முகத்தில் உருட்டும் முழிகளைக் கொண்ட கண்களால் வில்லத்தனத்தைக் காட்டி கடைசிவரையிலும் இப்படியொரு வில்லனை நாம் இதுவரையிலும் பார்க்கவில்லையே என்று ஏங்க வைத்துவிட்டார் அனுராக் காஷ்யப்.

இடையிடையே அவரது குடும்பக் கதையில் மனைவியிடமும், ‘அம்மு’ என்ற மகளிடமும் அவர் காட்டும் அன்பும், பாசமும் நம்மை சந்தேகிக்கவே வைக்கிறது. போலீஸிடம் பிடிபடும் காட்சியில் தான் யார் என்பது அபிராமிக்குத் தெரிந்துவிட்டதை எண்ணி அதிர்ச்சியாகி சமாளிக்கும் காட்சியில் நம்மையும் கொஞ்சம் பதட்டமாக்கிவிட்டார். கூடவே அபிராமியும்தான்..!

இறுதிக் காட்சியில் வந்திருப்பது தன் மகள்தான் என்பது தெரிந்த நிலையில் ‘அம்மு’, ‘அம்மு’ என்று கதறும் காட்சியில் ஒரு பக்கம் பாவமாச்சே என்ற உணர்வையும் நமக்குள்ளேயிருந்து வெளிப்படுத்த வைத்திருக்கிறார் அனுராக்.

கணவனே கண் கண்ட தெய்வம் என்று நினைத்திருந்த தருணத்தில் கணவனின் திருட்டு லீலைகள் தெரிய வந்து அதிர்ச்சியாகும் அந்த ஒரு தருணத்தில் மொத்த நடிப்பையும் காண்பித்திருக்கிறார் அபிராமி. வெல்டன் மேடம்..!

இதுவரையிலும் ஏற்காத ஒரு கொடூர வில்லன் கதாப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் சிங்கம்புலி கவனிக்க வைத்திருக்கிறார். அதிலும் விஜய் சேதுபதியுடன் சண்டையிடும் காட்சியில் சிரித்துக் கொண்டே தான் செய்த கொடூரத்தை அவர் விளக்கும்விதம் அகோரம்.. ஆனால் அபாரமான நடிப்பு..!

காசில்லாமல் ஒரு வேலையும் நடக்காது என்ற கையூட்டு நாயகன் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நட்டியின் நடிப்பு மிக இயல்பு. விஜய் சேதுபதியை முதலில் விசாரிக்கும் தருணத்திலும், சிங்கம்புலியை மறுநாள் திருடனாக நடிக்க வைக்கும்படி சொல்லும்போதும் அந்தக் காட்சியை மெய்மறக்க ரசிக்கும்படி செய்திருக்கிறார் நட்டி.

மகளாக நடித்திருக்கும் சச்சேனா அந்த வயதுக்கே உரித்தான குணம் இருந்தாலும், வீட்டில் அப்பாவை டாமினேட் செய்யும் அந்தத் தாயுள்ளத்தையும் நடிப்பில் காட்டியிருக்கிறார். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் அனுராக்கிடம் வந்து “ஏன் இப்படி?” என்று கேட்கும் காட்சியில் மொத்தக் கை தட்டலையும் பெற்றுவிட்டார்.

பிடி டீச்சராக நடித்திருக்கும் மம்தா மோகன்தாஸ் அந்தக் கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். அவருடைய சின்னச் சின்ன முக பாவனைகள் அப்போதைய திரைக்கதைக்கு மாறுதலைத் தந்து பார்வையாளர்களை ரிலாக்ஸ் செய்திருக்கிறது.

மேலும் “அவனை வெட்டிட்டு வாடா” என்று விஜய் சேதுபதியை உசுப்பிவிடும் பாரதிராஜா, லீவு கேட்டு வெறுக்க வைக்கும் விஜய் சேதுபதி மீது கடுப்பாகும் தேனப்பன், சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், ஏட்டு முனீஸ்காந்த், இடையிடையே போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் கலகலப்பைக் கூட்டும் திருடன் கல்கி, பயமுறுத்தும் அதிரடி வில்லன்களாக நடித்திருக்கும் பாய்ஸ் மணிகண்டன், கவுன்சிலராக நடித்திருப்பவர் என்று படத்தில் தலையைக் கொடுத்திருக்கும் அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படம் நெடுகிலும் ஒரு பிரம்மாண்டத்தை நமக்குக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. சண்டை காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார். மூன்றுவித காலக்கட்டத்தில் கதை நடப்பதால் அதற்கேற்றவாறான ஒளியமைப்பையும் அமைத்து சிறப்பு செய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

சண்டை  இயக்குநர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் மல்லுக் கட்டு.. மில்லுக்குள் பாய்ஸ் மணிகண்டன் கோஷ்டியுடன் நடக்கும் மோதல்.. சிங்கம்புலியுடன் நடக்கும் சண்டை.. அனுராக்குடன் நடக்கும் கடைசி யுத்தம்.. என்று அத்தனை சண்டை காட்சிகளும் அதகளம்.

நான் லீனியர் முறையில் முன், பின்னான காலக் கட்டத்தில் நடக்கும் காட்சிகளை எந்தவிதக் குறிப்பையும் திரையில் காட்டாமல் தனது படத்தொகுப்பினால் மட்டுமே சீராக்கி கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.

ஒரு நொடிகூட திரையிலிருந்து கண்ணை எடுக்கவிடாமல், அக்கம்பக்கம் பார்க்கவும் விடாமல் செய்யும் அளவுக்கு பின்னணி இசையை அமைத்து கவனம் ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜ்னீஸ் லோக்நாத்.

இத்திரைப்படம் வழமையான பாலியல் துன்புறுத்தல் கதையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான திரைக்கதையின் மூலமும், நட்சத்திரங்களின் மிக அழுத்தமான நடிப்பினாலும், இயக்குநரின் அற்புதமான இயக்கத்தினாலும் ஒகு சோகக் காவியமாக உருமாறி நம் கண் முன்னே நிற்கிறது.

எப்போதும் பாலியல் துன்புறுத்தல்தானா என்பதிலும்கூட வினோத் சாகர் மற்றும் சிங்கம் புலி இருவரின் தனி மனித குணத்தையும் காட்டி இப்படியும் சிலர் நம்மிடையே இப்போதும் நல்லவர்களாக உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்வித்த்தில் இத்திரைப்படம் சற்று வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறது.

படத்தின் மேக்கிங் ஒட்டு மொத்தமாய் எடுத்திருக்கக் கூடாத படமோ என்று எண்ணம் வரும் அளவுக்கு உண்மைக்கு மிக அருகிலும், யதார்த்தவாதத்தை தொட்டுவிட்டும் தொலைவில் இருப்பதும்தான் இந்தப் படத்தின் மீது நாம் வைக்கும் மிகப் பெரிய விமர்சனம்.

‘ராட்சசன்’ பட பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படமும் அதே பேட்டர்னை மையப்படுத்தியே அமைந்திருப்பதால் நம்மை கொஞ்சம் எச்சரிக்கையையும் செய்திருக்கிறது.

கூடவே என்னதான் படத் தொகுப்பில் வித்தையைக் காட்டியிருந்தாலும் சில காட்சிகளில் எது நிகழ் காலம், எது கடந்த காலம் என்ற குழப்பத்தையும் கொஞ்சம் கூட்டிக் கொடுத்திருக்கிறது.

அதேபோல் அனுராக்கின் வீட்டில் காணப்படும் குப்பைத் தொட்டி, பின்பு எப்படி சேதுபதியின் மகள் படுத்திருக்கும் கட்டிலுக்கு அடியில் வந்தது என்பதையும் இயக்குநர் தெளிவாகச் சொல்லவில்லை.  

கையூட்டுத் திலகங்களாக இருக்கும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு முதலானோர் ஒரே நாளில் மனம் மாறி நல்லவர்களாக காட்டப்படுவது திரைக்கதைக்கு வசதியாகப்போய்விட்டது. “எங்களுக்கும் பிள்ளைக இருக்குல்ல…” என்று முனீஸ்காந்த் சொல்வது ஏற்புடையதுதான் என்றாலும், லஞ்சம் வாங்கும்போது மட்டும் அவர்கள் ஏன் இதை நினைக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

நாடு இன்றைக்கு இருக்கும் நிலைமையில் இது போன்ற பழிக்குப் பழி, கண்ணுக்குக் கண் என்று சட்டத்தை அனைவருமே கையில் எடுத்துக் கொண்டு தீர்ப்பினை வழங்கிக் கொண்டிருந்தால் நாடு என்னாவது..?! இதில் போலீஸாரே “அவரே தண்டனையைக் கொடுக்கட்டும்..” என்று ஒதுங்கிக் கொள்வது ரொம்பவே சினிமாத்தனமாக உள்ளது.

விஜய் சேதுபதிக்கும், இயக்குநருக்கும் பெருமையளிக்கும் விதமாய் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் வழக்கம்போல கலவையான விமர்சனத்தைத்தான் நமக்குள் எழுப்பியிருக்கிறது. இதுதான் இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனின் மன நிலையும்கூட.

சட்டமும், நீதியும் ஒரு குறிப்பட்ட காலக்கெடுவுக்கும் கிடைத்தால்தான் பாதிக்கப்பட்ட மக்களின் மனம் ஆறும். இல்லையேல் இந்த ‘மகாராஜா’ போன்று அனைவருமே சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதை இத்திரைப்படம் சுட்டிக் காட்டியிருக்கிறது. இதை நாமும் உணரத்தான் வேண்டும்.

இந்த ‘மகாராஜா’ நீதி தவறாத மன்னன்தான்..!

RATING : 4.5 / 5

Our Score