full screen background image

மகா சேனா – சினிமா விமர்சனம்

மகா சேனா – சினிமா விமர்சனம்

2023-ம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் இராக்கதன்படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த படமாக இந்த மகா சேனாஎன்ற படத்தைத் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ஃப்ரெட் ஜோஸ், இலக்கியா, விஜய் சியோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும், படத்தில் சேனா என்ற யானையும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறது.

கதை, திரைக்கதை & இயக்கம்: தினேஷ் கலைசெல்வன், தயாரிப்பு: டாக்டர் செல்வராஜு, இணை தயாரிப்பு : ராணி ஹென்றி சாமுவேல், இசை: ஏ. பிரவீன் குமார், எஸ்.என். அருணகிரி, பின்னணி இசை: உதய பிரகாஷ் (UPR), ஒளிப்பதிவு: D.R. மனஸ் பாபு, எடிட்டிங்: நாகூரன் ராமசந்திரன், ஸ்டண்ட்: ராம் குமார், நடன அமைப்பு: தஸ்தா, அமீர், பாடல் : தினேஷ் கலைசெல்வன், கலை இயக்கம் : V.S. தினேஷ் குமார், தயாரிப்பு மேலாண்மை: ராணி, ரமேஷ், தினேஷ் வெல்முருகன், DI: ஜான் ஸ்ரீராம், VFX: i-Mate மீடியா, ஆடியோகிராபி: பாலாஜி, ராஜு, போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ் அஷோக், பத்திரிக்கை தொடர்பு : ரேகா.

கொடைக்கானல் அருகில் இருக்கும் குரங்கனி மலையின் அடிவாரத்தில் வசிப்பவர்கள் மகா மூடர்களாகவும், அரக்கர்களாகவும், ஆதிவாசிகளாகவும் வாழ்கிறார்கள். அதே மலையின் மேற்பகுதியில் அடர்ந்த காட்டின் நடுவில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இருவருக்கும் இடையில் ஒரு தீராத பகை இருக்கிறது.

இந்தப் பகைக்கான காரணம் பழங்குடியின மக்கள் கொண்டாடும் யாளீஸ்வரர் சிலை. அந்த ஊரில் இருக்கும் யாளீஸ்வரர் கோவிலில் குடி கொண்டிருக்கும் அந்த சிலையை அடிவாரத்து மக்கள் கைப்பற்ற நினைத்து பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரையில் முடியவில்லை.

மலைக்கு மேல் வசிக்கும் பழங்குடியின மக்களின் தலைவனாக விமல் இருக்கிறார். அவருடைய மனைவி சிருஷ்டி டாங்கே. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இப்போது அந்த யாளீஸ்வரர் கோவிலில் திருவிழாவை நடத்துவதற்காக அந்த ஊர் மக்கள் முடிவு செய்கிறார்கள்.

அதேசமயம் அந்த பகுதியின் வனக் காப்பாளராக இருக்கும் ஜான் விஜய் சிலை கடத்தல் பெரும் புள்ளியான  கபீர் துகான் சிங் காட்டும் பேராசையால் பழம் பெருமை வாய்ந்த அந்த யாளீஸ்வரர் சிலையை கடத்த திட்டமிடுகிறார்.

தாங்களே நேரில் போய் எடுத்தால் அது திருட்டு ஆகிவிடும் என்பதால் அடிவாரத்து மக்களைத் தூண்டிவிட்டு அந்தக் கோவில் திருவிழாவின்போது கலவரம் செய்து இடையில் அந்த சிலையை கடத்தும்படி தூண்டுகிறார் ஜான் விஜய்.

இதன் பின்பு என்ன நடந்தது?.. உண்மையில் கோவில் திருவிழா அமைதியாக நடைபெற்றதா?.. சிலையை கடத்தினார்களா?.. இல்லையா?.. என்பதுதான் இந்த படத்தின் மீதமான கதை.

படத்தின் நாயகன் விமல்தான் என்றார்கள். ஆனால் அவரும் அவ்வப்பொழுது வந்து முகத்தை காட்டி விட்டுப் போகிறார். அப்படித்தான் திரைக்கதை அவருக்கும் எழுதப்பட்டிருக்கிறது. அவர்தான் ஊர் தலைவர். ஆனாலும் அந்த தலைவருக்குரிய கெத்து எதுவும் இல்லாமல் ரொம்ப ரொம்ப சாதாரணமாகவே நடித்திருக்கிறார். விமலை இதைவிடவும் சிறந்த நடிப்பில் வேறு பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் இயக்குநர் இவ்வளவுதான் அவரிடம் இருந்து வேலை வாங்கியிருக்கிறார் போலும்..!

மலைவாழ் மக்களுக்குரிய அந்த முக அடையாளங்களோடு அழகாக கட்சி தருகிறார் சிருஷ்டி டாங்கே. கடைசிவரையில் ஒரு அழகு பதுமையாகவே படத்தில் காண்பிக்கப்பட்டு இருக்கிறார். இடையில் வீரம் பொங்கும் தலைவனின் மனைவியாகவும் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அடிவாரத்து மக்களின் தலைவியாக கங்கா என்ற கேரக்டரில் நடித்திருக்கும் மஹிமா குப்தா அரக்கி தோற்றத்தில் அட்டகாசமாக இருக்கிறார். அந்த அரக்கர் கூட்டத்தை காட்டிய விதம் நமக்கு சிரிப்பாக இருப்பதால், அவருடைய நடிப்பை பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது.

ஜான் விஜய் வழக்கம் போல் என்னென்ன கோணங்கித்தனங்களை செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு கோணங்கித்தனங்களை செய்து ஒரு கொடூரமான வனக் காப்பாளராக நடித்திருக்கிறார்.

சிலை கடத்தல் கும்பலின் தலைவனாக நடித்திருக்கும் கபீர் துவான் சிங்கின் நடிப்பு ரொம்பவே ஓவர். இப்படி ஒரு நள்ளிரவில் ஒரு கிராமத்திற்குள் நுழைந்து அனைவரையும் அடித்து வீழ்த்திவிட்டு வனத்துறையினர் உதவியுடன் சிலையை கடத்திக் கொண்டு போகும்  இவருக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சை எழுதிய இயக்குநரை என்னவென்று சொல்வது..?

மேலும் படத்தின் இடையிடையே கல்லூரி மாணவர்கள் சிலர் ட்ராக்கிங் வருவதற்காக இந்த மலைப் பகுதிக்குள் வர அவர்கள் இவர்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும்படியான பல காமெடி காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கின்றன. யோகி பாபு ஏதோ ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. அவரை வசனம் மட்டும் பேச வைத்து அவசரமாகக் காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள்.

படத்தில் நடிப்பென்று பார்த்தால் அத்தனை பேரிடமும் கிலோ என்ன விலை என்ற கணக்கில்தான் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

சில நேரங்களில் ஒளிப்பதிவு மட்டுமே இந்த படத்துக்கு கிடைத்த மிகப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. இரண்டு பாடல்கள் பக்தி பரவசத்தை நமக்கு ட்டுவதைப்போல இசைக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்தக் கதை  இப்போதைய காலகட்டத்தில்தான் நடக்கிறது என்பதையே நம்மால் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு சொதப்பலான கதை, திரைக்கதையை இயக்குநர் எழுதி இருக்கிறார்.

எந்த ஊரில் எந்த கிராமத்தில் இப்படியெல்லாம் அரக்கர்களும், அரக்கிகளும் வாழ்கிறார்கள் என்பதை அவர்தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நம்ப முடியாத அளவுக்கு கதை, திரைக்கதையையும், கேரக்டர் ஸ்கெட்ச்சுகளையும் வடிவமைத்திருப்பதால் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

பொதுவாக மலைக் கிராமம் என்றால் அடிவாரத்தில் இருப்பவர்கள் நகர மக்களோடு அதிக பழக்கம் ஏற்பட்டு நாகரீக சுவடுகளோடுதான் வாழ்வார்கள். மலையின் உச்சியில் வசிப்பவர்கள்தான் அதிகமாக நகர மக்களோடு பழக்கமில்லாமல் இன்னமும் பழைய பாரம்பரிய பழக்க, வழக்கங்களோடு வாழ்வார்கள்.

ஆனால் இந்தப் படத்திலோ மலை உச்சியில் வாழ்பவர்கள் நாகரீக மனிதர்களைப் போலவும், மலையின் அடிவாரத்தில் வாழ்பவர்கள் காட்டுமிராண்டிகள் போல் வாழ்வதாகவும் இந்தப் படத்தின் இயக்குநர் வடிவமைத்திருப்பது காமெடியாக உள்ளது.

இன்னொரு பக்கம் கல்லூரி கதையும் இணைத்து அதிலும் இயக்கம் என்பது நிறைய போதாமையாக இருப்பதால் இதைவிடவும் சிறப்பான இயக்கத்தில் வருடக்கணக்காக படங்களை பார்த்திருக்கும் நமக்கு இந்தப் படத்தில் ஒரு பத்து சதவீத இயக்கமே இருக்கிறது என்பதை வேதனையுடன் சொல்ல வேண்டி இருக்கிறது.

என்னதான் ஆன்மீகம், சிலை கடத்தல், ஆதிவாசி மக்கள் பிரச்சனை இதையெல்லாம் சொல்வதாக இருந்தாலும் ஒரு அழகான கதை, திரைக்கதையில் அழுத்தமான இயக்கத்தினால் சொல்லியிருந்தால் நிச்சயம் இந்தப் படத்தை நம்மால் ஏற்றுக் கொண்டிருக்க முடியும்.

ஆனால், இப்பொழுது இந்தப் படத்தை ஒரு சினிமாவாக நம்மால் பார்க்க, ரசிக்க முடியவில்லை என்பதை மட்டும் அதை இயக்குநருக்கு சொல்லிக் கொள்கிறோம். குறிப்பாக அவருடைய இயக்குதலில் மிகப் பெரிய போதாமை இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.

யாளீஸ்வரர் என்ற அந்த கடவுள் சிலை, அவருக்கான முன் கதை.. இவை மட்டுமே, இந்தப் படத்தின் மூலம் நமக்குக் கிடைத்த புதிய செய்திகள்.

தெரிந்து கொண்டோம்.

நன்றி..!

RATING : 2 / 5

Our Score